1,000 சம்பள உயர்வு போராட்டத்தால் முடங்கியது மலையகம்

1,000 சம்பள உயர்வு போராட்டத்தால் முடங்கியது மலையகம்

தமக்கான அடிப்படை நாள் சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று (05) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் இன்று கடையடைப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு பெருந்தோட்டக் கம்பனிகள் இன்னும் இணக்கம் தெரிவிக்கவில்லை. தொழில் நிபந்தனைகள் அடிப்படையிலேயே சம்பள உயர்வை வழங்குவதற்கு அவர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.

இதனால் சம்பள நிர்ணயசபை ஊடாக சம்பளம் தீர்மானிக்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தினர். இதன்படி 8 ஆம் திகதி சம்பள நிர்ணய சபை கூடவுள்ளது.

இந்நிலையில் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், சம்பள நிர்ணய சபை பேச்சுவார்த்தை வெற்றியளிக்க வேண்டும் என்பதற்காகவும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப்போராட்டத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது.

இதற்கு மலையகத்திலுள்ள கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் என்பன ஆதரவு தெரிவித்திருந்தன. அத்துடன், நகர வர்த்தகர்களும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடையடைப்பு செய்தனர். அத்தோடு சில பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன. வருகை தந்த மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

மலையகத்தில் நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் வாழும் பகுதிகளில் உள்ள நகரங்கள் மூடப்பட்டிருந்தன.
தொழிலாளர்களும் வீடுகளில் இருந்தவாறே தமக்கான ஊதிய உரிமையை வலியுறுத்தி அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
செய்திளார் - க.கிஷாந்தன்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image