1,000 ரூபா சம்பளம்: கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் கம்பனிகளின் நிலைப்பாடு
தொழிற்சங்கங்கள் சம்பள நிர்ணய சபையில் இருந்து விலகி, மீண்டும் கூட்டு ஒப்பந்தத்திற்கு வரவேண்டும் எனக் கோரினால், அதற்கு தமது தரப்பில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
நானுஓயா - இரதல்லயில் நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோது, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த, முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொஷான் இராஜதுறை இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வத்தமானியில் வெளியானதற்கமைய ஆயிரம் ரூபாய் நாட் சம்பளம் வழங்குவதில் எமக்கு பிரச்சினை இல்லை. ஆனால் பெருந்தோட்ட கம்பனிகள் தனியார் தேயிலைதுறையினர் உட்பட பலர் நிவாரணம் கோரி நீதிமன்றம் சென்றுள்ளோம். அது தொடர்பில் பொருத்திருந்து பார்ப்போம்.
ஆயிரம் ரூபாவை வழங்குவது தொடர்பில், முதலாளிமார் சம்மேளனம் சில யோசனைகளை முன்வைத்திருந்தது. எனினும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து, தொழிற்சங்கங்கள் வேதன நிர்ணய சபையினை நாடின. அதனாலேயே கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து முதலாளிமார் சம்மேளனம் விலகும் நிலை ஏற்பட்டது.
பெருந்தோட்டத் தொழிற்துறையினை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதனைக் கருத்திற்கொண்டே அந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. எனவே, அந்த ஒழுங்குமுறையில்தான் சிக்கல் நிலை உள்ளது.
இந்த நிலையில், தொழிற்சங்கங்கள், வேதன நிர்ணய சபையில் இருந்து விலகி, மீண்டும் கூட்டு ஒப்பந்தத்திற்கு வர வேண்டும் எனக் கோரினால் அதற்கு தமது தரப்பில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. முதலாளிமார் சம்மேளனம் கூடி அது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.