1,000 ரூபா சம்பள உயர்வு வர்த்தமானிக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு

1,000 ரூபா சம்பள உயர்வு வர்த்தமானிக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு

 பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானியை இரத்து செய்யுமாறுகோரி பெருந்தோட்ட நிறுவனங்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவினை எதிர்வரும் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

20 பெருந்தோட்ட நிறுவனங்களால் அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்ர கீர்த்தி உள்ளிட்ட 18 பேர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது குறித்த மனுவை எதிர்வரும் 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாவாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி தொழில் அமைச்சரின் செயலாளளர் எம்.பீ.டீ.கே. மாபா பத்திரணவின் கையொப்பத்துடன் கடந்த 9ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இந்த தீர்மானமானது மார்ச் 5 ஆம் திகதி முதல் செல்லபடியாதல் வேண்டும் என அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் முதலாம் திகதி சம்பள நிர்ணய சபையில் உறுதிப்பத்தப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, குறைந்தப்பட்ச நாளாந்த சம்பளம 900 ரூபாவாகவும், வரவு-செலவுத் திட்டக் கொடுப்பனவாக 100 ரூபாவாகவும் என நாளாந்த சம்பளம் 1,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,000 ரூபா வேதன உயர்வுக்கான வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, 20 பெருந்தோட்ட நிறுவனங்கள் கடந்த 16ஆம் திகதி மனுதாக்கல் செய்தன. இந்த மனுவின் பிரதிவாதிகளாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் தொழில் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட 18 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பெருந்தோட்ட துறை, நெருக்கடி நிலையை சந்திக்கும் என குறித்த மனுவின் ஊடாக பெருந்தோட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதுதவிர பெருந்தோட்ட நிறுவனங்கள் அரசிற்கு பாரியளவு வரியை செலுத்த நேரிடும் எனவும் இதனூடாக நிறுவனங்கள் சிரமத்திற்கு ஆளாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சட்டமா அதிபருடன் கலந்துரையாடியுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார். தொழில் திணைக்களம் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாக சட்டமா அதிபர் இணக்கம் வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் வெற்றிப்பெற முடியும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் தொழில் அமைச்சர் கூறியுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 வேதனம் வழங்குவதற்கு, தாமதத்தை ஏற்படுத்தும் நோக்கிலே, பெருந்தோட்ட நிறுவனங்கள் இத்தகையை செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image