1,000 ரூபா சம்பள உயர்வுக்கு தொழிலாளர்கள் வரவேற்பு: வேலை நாட்கள் குறைக்கப்படக்கூடாது என்றும் கோரிக்கை
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 நாளாந்த சம்பளத்தை நிர்ணயித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமைக்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் வரவேற்பை வெளியிட்டுள்ளனர்.
தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக போராடிய தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் ஆகியவற்றுக்கும், சம்பள உயர்வை சம்பள நிர்ணய சபை ஊடாகவேனும் நிர்ணயித்து வழங்குவதற்கு முன்வந்த ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தொழில் அமைச்சர் ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
தமக்கு அடிப்படை நாள் சம்பளமாக 1,000 ரூபா வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 2015 ஆம் ஆண்டு முதல் போராடிவருகின்றனர். 6 ஆண்டுகளுக்கு பிறகே அவர்களுக்கு 1,000 ரூபா கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், வேலை நாட்கள் குறைக்கப்படாமல், தொழில் சுமைகள் அதிகரிக்கப்படாமல்தான் தமக்கு இந்த சம்பள உயர்வு வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அத்துடன், தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு அது தொடர்ந்தும் அமுலில் இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
செய்தியாளர் - க.கிஷாந்தன்