புதிய தொழிலாளர் சட்ட வரைவில் சட்டங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மீதான விதிகள் எவ்வாறுள்ளன?
புதிய தொழிலாளர் சட்ட வரைவில் சேர்க்கப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மீதான விதிகள் எவ்வாறு அமைந்துள்ளன.
இதுவரை நடைமுறையில் உள்ள தனியார் துறையில் தாக்கம் செலுத்தும் 13 தொழிலாளர் சட்டங்கள் ஒரே சட்டமாக மாற்றப்பட்டிருப்பது தொழிலாளர்களாகிய நமக்கு தெரியும். அந்த 13 சட்டங்கள் என்ன?
- 1935 இலக்கம் 14 தொழிற்சங்க கட்டளைச் சட்டம்
- 1935 இலக்கம் 32 மகப்பேறு உதவி கட்டளைச் சட்டம்
- 1941 இலக்கம் 27 சம்பள நிர்ணய சபை கட்டளைச் சட்டம்
- 1942 இலக்கம் 45 தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டம்
- 1950 இலக்கம் 43 தொழில் பிணக்குகள் சட்டம்
- 1954 இலக்கம் 19 கடைகள் மற்றும் அலுவலகங்கள் சட்டம்
- 1956 இலக்கம் 47 பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை தொழில்வாய்ப்புச் சட்டம்
- 1971 இலக்கம் 45 சேவை முடிவுறுத்தல் (சிறப்பு விதிகள்) சட்டம்
- 1983 இலக்கம் 12 பணிக்கொடை வழங்கல் சட்டம்
- 2005 இலக்கம் 36 ஊழியர்களின் வரவு செலவு மற்றும் படிகள் சட்டம்
- 2016 இலக்கம் 04 ஊழியர்களின் வரவு செலவு மற்றும் கொடுப்பனவுச் சட்டம்
- 2016 இலக்கம் 03 குறைந்தபட்ச சம்பளச் சட்டம்
- 2021 இலக்கம் 28 குறைந்தபட்ச ஓய்வூதிய வயது சட்டம்
இந்த 13 சட்டங்களில் உள்ள விதிமுறைகளை மாற்றி புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தி இந்த தனித் தொழிலாளர் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த 13 சட்டங்களில், தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு முக்கியமான புதிய சட்ட நிபந்தனைகள் எவ்வாறு வகுக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது.
இந்த வரைவின் பிரிவு 105 இன் படி, ஒரு தொழிற்சங்கத்தை பதிவு செய்ய, 100 உறுப்பினர்களின் எண்ணிக்கையோ அல்லது 100 க்கும் குறைவாக இருந்தால், அவர்களில் 25 பேர் கையெழுத்திட வேண்டும். தற்போதுள்ள சட்டத்தில் 07 பேர் கையொப்பமிடுதல் என்பதை மாற்றி, உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொழிற்சங்கங்களை நிறுவுவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். அதாவது, அரசியலமைப்பில் தொழிற்சங்கத்தில் இணைவதற்கு உள்ள உரிமை இந்த வரைவு மூலம் பறிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரைவின் பிரிவு 137 (1) தொழிற்சங்கத்தால் வேலைநிறுத்தம் நடத்துவதற்கு முன்பு, வேலைநிறுத்தத்திற்கான காரணம் தொடர்பில் பெரும்பான்மை உறுப்பினர்களின் சம்மதத்தை உறுதிப்படுத்த ரகசிய வாக்கெடுப்பு நடத்தாமல், வேலைநிறுத்தம் செய்ய முடியாது என்று கூறுகிறது.
இரகசிய வாக்கெடுப்பு மற்றும் வேலைநிறுத்தம் நடத்த உத்தேசித்துள்ள திகதிக்கு 28 நாட்களுக்கு முன்னர், தொழில் வழங்குநர் மற்றும் தொழிற்சங்கப் பதிவாளருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று 147(1) அ மற்றும் ஆ உப பிரிவுகள் கூறுகின்றன.
1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பிலிருந்து இந்த தொழிற்சங்க உரிமைகள் கிடைத்தது. அதாவது, அத்தியாயம் 3 இன் மூலம், தொழிற்சங்கத்தில் சேருவதற்கான உரிமை, சங்கம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரம் ஆகியவை தேசிய அளவில் ஜனநாயக உரிமையாகவும் அடிப்படை உரிமையாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், உலக தொழிலாளர் அமைப்பு 87ஆம் சமவாயம் மற்றும் 98ஆம் சமவாயம் ஆகியவற்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சங்க உரிமைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன், அதன் உறுப்பு நாடாக இலங்கை கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் இந்த புதிய தொழிலாளர் சட்ட வரைவு மூலம் இந்த உரிமைகள் குறைக்கப்பட்டுள்ளன.