தொழிலாளர்களுக்கான துண்டிக்கும் உரிமை : அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் புதிய முயற்சி!
தொழிலாளர்களுக்கு அழுத்தமில்லாத வாழ்க்கை என்பதை எண்ணத்தில் கொண்டு, வேலைநேரம் முடிந்த பிறகு அலுவலகத்தில் இருந்து வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளை புறக்கணிக்கலாம் என்னும் சட்டமூலம் அவுஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
“துண்டிக்கும் உரிமை” (Right to Disconnect) எனும் இந்த புதிய சட்டமூலத்தை அவுஸ்திரேலியா அரசு முன்மொழிந்துள்ளது.
இதற்கு ஆளும் தரப்பு மற்றும் எதிர் தரப்பு என அனைத்து தரப்பினரிடமும் இருந்து ஆதரவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துண்டிக்கும் உரிமை
துண்டிக்கும் உரிமை என்பது அவுஸ்திரேலியா நாடாளுமன்ற சட்டமூலத்தின் கீழ் மத்திய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட ‘தொழில்துறை உறவுகள் சட்டங்களில்’ கொண்டு வரப்படும் முக்கிய மாற்றங்களில் ஒரு பகுதியாகும்.
இந்த சட்டமூலம் பெரும்பான்மையான செனட்டர்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாக ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது.
இந்த சட்டமூலத்தை சட்டமாக்கும் பொருட்டு அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
தொழிலாளர்களுக்கான சட்டமூலம்
புதிய துண்டிக்கும் உரிமை சட்டத்தின் படி, "வேலை நேரத்திற்கு பின் அலுவலகம் அல்லது முதலாளிகளிடமிருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றை புறக்கணிக்கும் உரிமை தொழிலாளர்களுக்கு வழங்ப்படவுள்ளது.
அலுவலக நேரம் முடிந்த பிறகு தேவையில்லாமல் தம்மைத் தொடர்புகொள்வதாகவோ அல்லது தொந்தரவு செய்வதாகவோ கருதும் ஊழியர்கள் முதலில் அலுவலகம் சார்ந்தவரிடமோ அல்லது முதலாளியிடமோ பிரச்சினையை எழுப்ப வேண்டும்.
தொடர்ந்து இதுபோன்ற சிக்கல் தீர்க்கப்படாமல் இருந்தால், தொழிலாளிகள் வழக்கு தொடர்ந்து நியாய வேலை ஆணையத்திற்கு (Fair Work Commission) எடுத்துச் சென்று இதுபோன்ற தொந்தரவை நிறுத்த உத்தரவிடலாம், இதற்கு முதலாளி இணங்கத்தவறினால் அவர்களுக்கோ அல்லது அலுவலகத்திற்கோ அபராதம் விதிக்கப்படும்".
சமநிலை
இதேவேளை, தொழில்துறை உறவுகள் சட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த மாற்றங்கள், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை என்ற இரண்டிற்குமான சமநிலையை மீட்டெடுக்கும் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “நாங்கள் எளிமையாகச் சொல்வது என்னவென்றால், 24 மணிநேரமும் வேலை பார்க்க ஒருவர் ஊதியம் பெறாத நிலையில், எதற்காக அவர் அலுவலகநேரம் முடிந்த பிறகும் வேலை செய்ய வேண்டும்.
அலுவலக நேரம் முடிந்த பிறகு ஒருவர் உங்களுக்கு ஆன்லைனிலும், மொபைல் அழைப்பிலும் கிடைக்கவில்லை என்றால் அவருக்கு அபராதம் விதிக்கப்படக்கூடாது” என தெரிவித்துள்ளார்.