கொரோனா வைரஸ் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்ட புதிய தகவல்
2022ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்றை தோற்கடிக்கக்கூடியதாக இருக்கும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரொஸ் அதனம் கெப்ரியேஸஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறிருப்பினும், குறுகிய தேசியவாதம் மற்றும் தடுப்பூசி பதுக்கல் என்பன இதற்கு தடையாக அமைவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ரீதியில், 287 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன், சுமார் 5.5 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒமைக்ரொன் பரவல் காரணமாக, சர்வதேச ரீதியில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், பெரும்பாலான நாடுகள் பொதுமக்கள் ஒன்றுகூடுவதை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன.