ATA க்கு எதிரான எதிர்ப்புகளும் அரசாங்கத்தின் நகர்வும்

ATA க்கு எதிரான எதிர்ப்புகளும் அரசாங்கத்தின் நகர்வும்

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வாபஸ் பெறுமாறு உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் வலியுறுத்தப்படுகின்றன.

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத டைச் சட்டத்தை விடவும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ( Anti Terrorism Act – ATA )
மோசமானது என அரசியல் கட்சிகள்இ தொழிற்சங்கங்கள், மனித உரிமைகள் அமைப்புகள், சிவில் சமூகசெயற்பாட்டாளர்கள் என பல தரப்பினரும் விமர்சனங்ளை முனவைக்கின்றனர்.

தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

பயங்கரவாதத் தடைச் சட்டம் - Prevention of Terrorism Act - PTA

பயங்கரவாதத் தடைச் சட்டமானது 1978 ஆம் ஆண்டு தற்காலிகப் பொறிமுறையாக இயற்றப்பட்டபோதும், அது 1982 ஆம் ஆண்டு நிரந்தர சட்டவாக்கமாக்கப்பட்டது. அது முன்னர் சாதாரண சட்டங்களினால் குற்றமாகக் கருதப்பட்டிராத விடயங்களைக் குற்றங்களாக்கியதுடன், அவை துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு அச்சட்டம் வலுவிலுள்ள இவ் 40 வருட காலமாக பாரிய மனித உரிமை மீறல்கக்கு காரணமாகியுள்ளது. குறிப்பாக, பிரிவு 2(1) (ஏ)3 ஆனது நெறிமுறைத்தன்மை வாய்ந்த இணக்கமின்மையினை ஒழிப்பதற்காக மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளை இலக்கு வைப்பதற்காக பாரதூரமான முறையில் தவறாகப் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டமானது மிக அவசரமாகப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பதுடன் அது அரசியலமைப்பினால் உத்தரவாதப்படுத்தப்பட்டிருந்த பல அடிப்படை உரிமைகளை குறைந்தளவான மேற்பார்வையோடு மீறத்தக்க தெளிவான பல ஏற்பாடுகளை உள்ளடக்கியிருந்தது. அததுடன் தண்டனையிலிருந்து விடுபடுகின்ற கலாசாரத்திற்கு வழிவகுத்ததாகவும் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் 2019 ஆம் ஆண்டில் வெளியிட்ட ஆவணம் ஒன்றில் தெரிவித்துள்ளது.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும், இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்ற நிலையில், அந்தச் சட்டத்திற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

மார்ச் 22 ஆம் திகதி வர்த்தமானியூடாக வெளியிடப்பட்ட உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ

சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளுக்கு அமைவாக இந்த சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கம்

நீதி அமைச்சர் முன்மொழிந்துள்ள 'பயங்கரவாத எதிர்ப்பு' சட்டமூலத்தை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டாமென நாட்டின் தொழிற்சங்கத்தலைமை எதிர்க்கட்சியினரை கேட்டுக்கொண்டுள்ளது.

கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், மக்களின் பட்டினிப் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கத் தவறிய அரசாங்கம் புதிய சட்டத்தின் மூலம் போராட்டங்களை ஒடுக்க தயாராகி வருவதாக வலியுறுத்தியுள்ளார்.

2023ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட மறுநாள் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஒரு மாதத்திற்கு முன்னர் வன்முறைத் தடுப்புச் சட்டமாக அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமானது, வன்முறை என்ற பெயரில் போராட்டங்களை ஒடுக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும்.' தொழில்சார் போராட்டங்களை நசுக்குவது மாத்திரமன்றி மேலும் பல ஆபத்தான அம்சங்கள் இந்த சட்டமூலத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், ஊடகங்களை ஒடுக்கவும் இது பயன்படும் என எச்சரித்துள்ளார்.

நாட்டில் இதுவரையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரகாரம் சந்தேகநபர் ஒருவரை மூன்று மாத காலத்திற்கு தடுப்புக் காவலில் வைக்க ஜனாதிபதி கையொப்பமிட வேண்டும் என சுட்டிக்காட்டிய, சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின், ஆனால் புதிய சட்டத்தின் மூலம் அந்த அதிகாரம் ஒரு பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை வெளியிட்டுள்ள அதன் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர,

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தினை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். 1979இல் தயாரிக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தை விட மோசமானதாக இந்த சட்டமூலம் காணப்படுகிறது.

இதன் ஊடாக ஊடகங்கள் மற்றும் எந்தவொரு ஆர்ப்பாட்டத்தினையும் முடக்கும் அதிகாரம், எந்தவொரு நபரையும் கைதுசெய்வதற்கும், தடுத்து வைப்பதற்கும் ஜனாதிபதிக்கு காணப்பட்ட அதிகாரம் சகல சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரஜைகளை துன்புறுத்தக்கூடிய நிலைமையும் ஏற்படும்.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் சகல மாவட்டங்களிலும் 90 நாட்கள் தடுத்து வைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரிக்கும். எனவே, இதனை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். சர்வாதிகார ஆட்சியை நாட்டில் ஏற்படுத்தவே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாட தீர்மானித்துள்ளோம். ஒன்றிணைந்து இதனை பாராளுமன்றத்தில் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். – என்று கூறியுள்ளார்.

ஜே.வி.பி

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஊடாக மக்களின் ஜனநாயக உரிமை மீறப்படுவதுடன் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அத்துடன் மக்களை கடும் அடக்குமுறைக்கு தள்ளிவிடுவதற்கு ஜனாதிபதிக்கு இதன் மூலம் முடியுமாகிறது. அதனால் இந்த சட்டமூலத்தை தோற்கடித்தே ஆகவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் ஊடக பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பொதுவாக அனைவருக்கும் பாதிப்பாக அமைகிறது. அரசாங்கத்துக்கு ஒன்றை செய்யுமாறு தெரிவித்தாலும் அல்லது செய்ய வேண்டாம் என தெரிவித்தாலும் அது பயங்கரவாத செயலாகவே பார்க்கப்படும்.

உதாரணமாக விவசாயிகள் உரம் கேட்டு போராடினால் அதற்கு எதிராக செயற்பட முடியும். வரி குறைக்குமாறு போராடினால் அதற்கு எதிராக செயற்பட முடியும். தொழிற்சங்க உறுப்பினர்களுக்கோ அல்லது மக்கள் கூட்டமொன்றுக்கு ஒன்றாக கூட முடியாது.

அத்துடன் கடந்த காலங்களில் காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இதன் பின்னர் முன்னெடுக்க முடியாது. அதேபோன்று ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் கடும் அழுத்தங்கள் இருக்கின்றன.

முகப்புத்தகம். டுவிட்டர். போன்ற சமூக வலைத்தளங்களில் அரசாங்கத்துக்கு விராதேமான கருத்துக்களை தெரிவிக்க முடியாமல் போகும். இராணுவத்தினருக்கு நபர்களை கைதுசெய்ய முடியுமாகிறது.

மேலும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஊடாக ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டை முறையாக தாக்கல் செய்யாமல் 3 மாதங்களுக்கு அவரை தடுத்துவைக்க முடியும்.

இந்த குற்றச்சாட்டை அதன் பின்னரும் முறையாக தாக்கல் செய்ய முடியாமல் போனால் நீதிமன்றம் ஊடாக மேலும் 3மாதங்களுக்கு நீடித்துக்கொள்ள முடியும்.

அதனால் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மக்களின் ஜனநாயக உரிமைக்கு விரோதமாகவே அமைந்துள்ளது. எனவே இந்த சட்டமூலத்தை நிச்சியமாக தோற்கடித்தே ஆகவேண்டும் - என்றார்.

மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீள பெறப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

குறித்த சட்டத்தின் ஊடாக மனித உரிமைகளை மீறுவதற்கு, அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமும் சர்வதேச மனித உரிமை தரங்களைப் பாதுகாக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அமைதியான விமர்சகர்களின் குரலை ஒடுக்குவதற்கும் சிறுபான்மையினரை குறிவைக்கும் செயற்பாடுகளுக்கும் அனுமதியளிக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் இந்த சட்டமூலத்தை மறுசீரமைப்பிற்கு உட்படுத்தும் வரையில், ஐக்கிய நாடுகள் சபை , ஐரோப்பிய ஒன்றியம் , ஜப்பான், இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக சிரேஷ்ட சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சட்டமூலத்தில் சிக்கல்கள் காணப்படுவதாக குறித்த குழு பரிந்துரைக்கும் பட்சத்தில் அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்தார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாதம் குறித்த வரையறையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் தாம் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்படுவோம் என்ற அச்சத்தில், பொது நலன் சார்ந்த விஷயங்களில் பேசவோ அல்லது தங்கள் கருத்தை வெளிப்படுத்தவோ பின்வாங்கக் கூடும். இது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் பிரிவு 3 (1) இல் பயங்கரவாதத்தின் வரையறை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை மறுபரிசீலனை செய்வதோடு , குறித்த வரையறைக்குள் வரும் செயல்களை தெளிவுபடுத்துவதற்கும் குறிப்பிட்ட திருத்தங்களை பரிந்துரைக்க வேண்டும்.

பயங்கரவாதம் குறித்த வரையறை நீண்ட காலமாக ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக உள்ளது. சட்ட ரீதியான கருத்து வேறுபாடுகள் மற்றும் உண்மையான பயங்கரவாதச் செயல்களை வேறுபடுத்திப் பார்ப்பதை இந்த சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரையறை கடினமாக்குகிறது.

அத்தோடு இந்த சட்ட மூலமானது அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமையை மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பறிக்க முடியாத உரிமையான பேச்சுரிமையையும் மீறுவதாக அமைகின்றது.

'பயங்கரவாதம் என்பது ஒரு வன்முறைச் செயலாகும், இது வற்புறுத்துவதற்கும், பயமுறுத்துவதற்கும் அல்லது பயத்தை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் இது ஒரு கருத்தியல் நோக்கத்தை அடைவதற்கான ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், குறித்த சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரையறையின் பரந்த நோக்கம் அதன் பயன்பாட்டிற்கு வழிவகுக்கும்.

அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளதன் அடிப்படை உரிமைகளில் தலையிடும் வழிகள், பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை கட்டுப்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளது.

போராட்டம் அல்லது பேரணியில் பங்கேற்கும் எவரும், அமைதியாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினாலும், அதுவும் ஒரு பயங்கரவாதச் செயலாகக் கருதப்படலாம். இது மக்களின் எதிர்ப்பைக் குரல் கொடுக்கும் உரிமையை நசுக்க வழிவகுக்கும்.

பயங்கரவாதி என்று அடையாளப்படுத்தப்படுவார்கள் என்ற அச்சத்தில், பொது நலன் சார்ந்த விஷயங்களில் பேசவோ அல்லது தங்கள் கருத்தை வெளிப்படுத்தவோ பலர் பின்வாங்கக் கூடும். இது ஒரு அச்சமான சூழலை ஏற்படுத்தும்.

இது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையின் ஊடாக வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அரச பயங்கரவாதத்தை பலப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டமூலமாகும். அதனால் ஐக்கிய மக்கள் சக்தி இந்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றத்தை நாட இருக்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தி சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல ஊடகங்களிடம் தெரிவித்தார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் சரத்துக்களை பார்க்கும்போது அரசாங்கம் நினைக்கும் எந்த பிரஜையையும் பயங்கரவாதியாக்கும் உரிமை அரசாங்கத்துக்கு கிடைக்கிறது.

அதேபோன்று இந்த சட்டமூலத்தின் ஊடாக தொழிற்சங்க நடவடிக்கைகள், சிவில் அமைப்புகளின் செயற்பாடுகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. மாணவர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு தடைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் உள்ளடக்கத்தை வாசித்துப் பார்த்தால், இது அரச பயங்கரவாதத்தை பலப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டமூலம் என்பது தெளிவாகும். அதனால் ஐக்கிய மக்கள் சக்தி இந்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றத்தை நாட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் 40 வருடங்களுக்கு மேலாக நாட்டிலே அமுலில் இருக்கின்றது.ஆறு மாத காலத்திற்காக ஒரு தற்காலிக சட்டமாக கொண்டுவரப்பட்டு பின்னர் சில வருடங்களுக்கு பிறகு 81 ஆம் ஆண்டு அது நிரந்தரமான சட்டமாக மாற்றப்பட்டது.

புதிய சட்டம் கொண்டுவரப்படுவதாக இருந்தால் அது முதலிலே பொது அமைப்புகளோடு பேசி இணங்கப்பட வேண்டிய விடயம்.ஆனால் இதில் இன்னொரு விடயத்தை குறிப்பிட வேண்டும். பயங்கரவாத தடுப்புசட்டம் நீக்கப்படல் சம்பந்தமாக மனித உரிமை ஆணைக்குழு ஏற்கனவே சென்ற வருடம் ஒரு சிபாரிசினை முன்வைத்திருக்கின்றது.

இப்படியான சூழ்நிலையில், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் என்ற ஒரு விசேட சட்டத்தை கொண்டு வந்து அரசாங்கத்துக்கு எதிராக நியாயமான எதிர்ப்பை தெரிவிக்கின்ற மக்களை அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் தண்டிப்பதற்குமான செயற்பாட்டிலே அரசாங்கம் இறங்கி இருக்கின்றது இதனை வன்மையாக கண்டிக்கின்றோம் இதனை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளார்.

அமெரிக்க தூதுவர்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் விரிவா பொது மற்றும் நாடாளுமன்ற விவாதங்களுக்கு அழைப்பு விடுப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுடன் ஏப்ரல் 20 ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பில் இதனைத் தெரிவித்ததாக அவர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச தரத்திற்கு, புறம்பாக முன்மொழியப்பட்ட, சட்டமூலத்தின் சில விடயதானங்கள் தொடர்பில், கவலை வெளியிட்டதாகவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், பொது மற்றும் நாடாளுமன்றம் ஆகிய இரண்டிலும் விரிவான விவாதங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற தங்களது 'வலுவான விருப்பத்தை' பகிர்ந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிவில் சமூகம், கல்வியாளர்கள் மற்றும் சட்டம் இயற்றுபவர்கள் உட்பட அனைவரது கருத்துச் சுதந்திரம் அல்லது ஒன்றுகூடலை கட்டுப்படுத்தாமல், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சிறந்த கருவியாக, குறித்த சட்டமூலம் செயல்படுவதை உறுதிப்படுத்துவது முக்கியமானதாகும் எனவும் அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, அமெரிக்கா, இலங்கை மக்களின் உரிமைகளை மதிப்பதாக இருந்தால், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும் அல்லது முற்றாக நீக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெளிவான செய்தியை அனுப்புமாறு சர்வதேச மன்னிப்புச் சபை முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போராட்டங்கள்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் வேண்டாம் என வலியுறுத்தி, வடக்கு, கிழக்கில் ஏப்ரல் 20ஆம் திகதி எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வடக்கு, கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினால், வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களிலும் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அரசாங்கத்தின் நகர்வு

இவ்வாறான பின்னணியில், பயங்காரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை,  விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image