இலங்கையின் அரச துறை ஏனைய ஆசிய நாடுகளை விடப் பெரியது

இலங்கையின் அரச துறை ஏனைய ஆசிய நாடுகளை விடப் பெரியது

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் அரச துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

 

2023 ஆம் ஆண்டில் மொத்த தொழிற்படையான 8 மில்லியனில் 15% (1.16 மில்லியன் பேர்) மத்திய அரசாங்கம், துணைத் தேசிய அலகுகள் மற்றும் இராணுவம் உட்பட அரச துறையில் பணிபுரிந்துள்ளனர். குறிப்பாக, மொத்த அரச உத்தியோகத்தர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பாதுகாப்பு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு துறையில் பணியாற்றுகின்றனர். 

ஒப்பீட்டு ரீதியில், பிராந்தியத்தில் உள்ள ஒரே மாதிரியான பொருளாதார அமைப்புகளைக் கொண்ட நாடுகளில் மிகக் குறைவான அரச உத்தியோகத்தர்களே பணிபுரிகின்றனர். உதாரணமாக, தமது தொழிற்படையில் இந்தியா 9%, வியட்நாம் 8%, மற்றும் பங்களாதேஷ் 5% உத்தியோகத்தர்களை மட்டுமே அரச துறையில் பயன்படுத்துகின்றன. 

அரச துறைக்கு குறைந்த ஊதியம் வழங்கப்பட்டாலும், இதன் காரணமாக அதிக செலவு ஏற்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் ரூ.940 பில்லியனை - அதன் மீண்டெழும் பாதீட்டில் 20% மற்றும் அதன் வருமானத்தில் 31% - அரச துறை சம்பளங்களுக்காகச் செலவிட்டுள்ளது. கடந்த தசாப்தத்தில் அரச செலவினத்தில் சராசரியாக 23% சம்பளங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளதுடன் சுகாதாரம், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு போன்ற முக்கிய துறைகளுக்கு வரையறுக்கப்பட்ட நிதியே எஞ்சியுள்ளது. 


Made with Flourish
 

குறிப்பு

5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளில் இப்பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு நாட்டினதும் சமீபத்திய வேலைவாய்ப்புத் தரவுகளை இந்த ஆய்வு பயன்படுத்தியுள்ளது. நேபாளம் (2017) மற்றும் இந்தியா (2019) தவிர, இலங்கையின் தரவுகள் 2023 இல் இருந்தும், ஏனைய நாடுகளின் தரவுகள்  2021 ஆம் ஆண்டிலிருந்தும் பயன்படுத்தப்பட்டுள்ளன

மூலங்கள்

இலங்கை மத்திய வங்கி, 'விலைகள், கூலிகள் மற்றும் தொழில்நிலை', https://www.cbsl.gov.lk/en/statistics/statistical-tables/real-sector/prices-wages-employment [19 நவம்பர் 2024 அன்று இறுதியாக அணுகப்பட்டது]. 

உலக வங்கி, 'உலக அளவிலான அதிகாரத்துவ குறிகாட்டிகள்', https://datacatalog.worldbank.org/search/dataset/0038132 [19 நவம்பர் 2024 அன்று இறுதியாக அணுகப்பட்டது]. 

சர்வதேச தொழிலாளர் அமைப்பு, 'ILOSTAT தரவுத்தளம்', https://ilostat.ilo.org/ [19 நவம்பர் 2024 அன்று இறுதியாக அணுகப்பட்டது]. 

ஆய்வை மேற்கொண்டோர்: ஷலோமி லியனகே மற்றும் அனுஷன் கபிலன். 

தரவு காட்சிப்படுத்தல்: சதினி கல்ஹேன 

மூலம் - பப்லிக் ஃபினான்ஸ்.எல்கே

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image