மலையக மக்களுக்கு நிரந்தர காணி, வீட்டு உரிமைகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி

மலையக மக்களுக்கு நிரந்தர காணி, வீட்டு உரிமைகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி

பெருந்தோட்ட மக்கள் வாழும் பகுதிகளை புதிய குடியேற்ற கிராமங்களாக சட்டரீதியாக பிரகடனப்படுத்த நடவடிக்கை

பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களை இனங்கண்டு அப்பகுதிகளைப் புதிய குடியேற்ற கிராமங்களாக சட்டரீதியாக பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முன்தினம் (17) நடைபெற்றது.

கிராமங்கள், நகரங்கள் மற்றும் பெருந்தோட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மக்களுக்கு நிரந்தர காணி மற்றும் வீட்டு உரிமைகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் அதற்குத் தேவையான புரட்சிகர வேலைத்திட்டம் ஏற்கனவே செயற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்தார்.

அரச பெருந்தோட்டக் கம்பனி மற்றும் உள்ளூர் பெருந்தோட்டக் கம்பனிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தோட்ட மக்கள் வாழும் பகுதிகளை புதிய கிராமங்களாக சட்டரீதியாக பிரகடனப்படுத்தத் தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமான என்பதாலும் காலத்திற்கு உகந்த முன்மொழிவு என்பதாலும் இதற்கான கொள்கை ரீதியான உடன்பாடும் எட்டப்பட்டது.

இந்த பிரேரணையை நடைமுறைப்படுத்தும் போது மலையகத்தில் வாழும் அனைத்து மக்களினதும் காணி உரிமையை உறுதிப்படுத்துவது இன்றியமையாதது என சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இது தொடர்பான பிரேரணையை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

கிராமங்கள், நகரங்கள் மற்றும் பெருந்தோட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மக்களுக்கு நிரந்தர காணி மற்றும் வீட்டு உரிமைகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் அதற்குத் தேவையான புரட்சிகர வேலைத்திட்டம் ஏற்கனவே செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கு குறிப்பிட்டார்.

உள்ளுர் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் கலந்தாலோசித்து அவர்களின் கருத்துக்களைப் பெற்று அதற்கான சட்டச் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் தோட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துக் கட்சிகள் அடங்கிய குழுவொன்றை நியமிக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கினார்.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான், கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார், பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகம்பரம், வடிவேல் சுரேஸ், வேலு குமார், எம். ராமேஸ்வரன் மற்றும் எம். உதயகுமார் ஆகியோரும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ.சி.எம். நபீல், அரச பெருந்தோட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் கலாநிதி சுகத் யாலேகம உள்ளிட்ட அரச அதிகாரிகள் குழு இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

இதேவேளை, 

பெருந்தோட்டக் கம்பனிகள் அனுமதியின்றி ஆக்கிரமித்துள்ள காணிகளை மீட்பதற்கு உடனடியாக சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு காணி மறுசீரமைப்பு அணைக்குழுவுக்குப் பரிந்துரை


🔸 காணி மறுசீரமைப்பு அணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளில் குடியிருப்பு மற்றும் உறுதியை வழங்கும் முறைமையை மீள்பரிசீலனை செய்து எளிமைப்படுத்தடுமாறும் குழுவினால் பரிந்துரை

🔸 காணி மறுசீரமைப்பு அணைக்குழுவினால் சுரங்கங்களுக்கு தற்பொழுது வழங்கும் 1 பெர்சஸ் காணியின் அளவை அதிகரிக்குமாறும் பரிந்துரை - ஒரு பெர்சஸுக்கு அறவிடும் வரியை திருத்துமாறும் குழுவினால் முன்மொழிவு

🔸 2010க்கு முன்னர் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணிகளில் அனுமதியின்றி குடியமர்ந்தவர்களுக்கு பத்திரங்களை வழங்கும் போது, அதனை 2021 க்கு முன்னர் என நீடிக்கப் பரிந்துரை

அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் அல்லது மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை என்பவற்றுக்கு வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒதுக்கப்படாத ஏக்கர் கணக்கான காணிகள் பெருந்தோட்டக் கம்பனிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வெளிப்படுத்தியது.

அதற்கமைய, பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு வழங்கப்படாத, கம்பனிகளால் பலவந்தமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை உடனடியாக மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைத்தார்.

அவரின் தலைமையில் இந்தக் குழு பாராளுமன்றத்தில் அண்மையில் (11) கூடிய போதே இந்தப் பரிந்துரை வழங்கப்பட்டது. இதன்போது, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் (LRC) அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர்.

May be an image of 3 people, people studying, dais and text

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிடம் தற்போது 7000 ஏக்கர் காணிகள் மாத்திரமே விடுவிக்கப்பட்டுக் காணப்படுவதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். அத்துடன், சுமார் 56,000 ஏக்கர் நிலப்பரப்பில் சட்டவிரோதமாக குடியிருப்பாளர்கள் இருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, மாவட்ட ரீதியாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு (LRC) சொந்தமான காணியின் தொகை குறித்த அறிக்கையை குழுவுக்கு வழங்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகளில் குடியிருப்பு மற்றும் உறுதியை வழங்கும் முறைமையை மீள்பரிசீலனை செய்து, அந்த செயன்முறையை எளிமைப்படுத்துமாறும் குழுவினால் பரிந்துரை வழங்கப்பட்டது. அத்துடன், வணிக நடவடிக்கைகளுக்காக காணிகளை விடுவிக்கும் போது சம்பந்தப்பட்ட விடுவிப்பு நடவடிக்கைகளுக்கு அறவிடும் கட்டண முறைமை தொடர்பான அறிக்கை ஒன்றை குழுவுக்கு வழங்குமாறும் அதிகாரிகளுக்குக் குழுவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அத்துடன், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினால் சுரங்க அகழ்வுக்காக தற்பொழுது வழங்கப்படும் 1 பெர்சஸ் காணியின் அளவை அதிகரிக்குமாறும், ஒரு பெர்சஸுக்கு அறவிடும் 40,000 ரூபாய் வரியை திருத்துமாறும் குழுவினால் பரிந்துரை வழங்கப்பட்டது.
அத்துடன், 2010க்கு முன்னர் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணிகளில் அனுமதியின்றி குடியமர்ந்தவர்களுக்கு பத்திரங்களை வழங்கும் போது, அதனை 2021 க்கு முன்னர் குடியமர்ந்தவர்களுக்குக் கிடைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட வருடத்தை திருத்துமாறும் குழுவினால் பரிந்துரை வழங்கப்பட்டது.

May be an image of 13 people, people studying and text

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகளை குத்தகை அடிப்படையில் வழங்குவது தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவுக்கு அறிவித்தனர். அதற்கமைய, பொருளாதார வளர்ச்சிக்கு வினைத்திறனாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் தெரிவு செய்யப்பட்ட காணிகளை இலங்கையிலுள்ள தொழில்முயற்சியாளர்களுக்கு வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுப்பதாகக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான டபிள்யு,எச்.எம். தர்மசேன, வசந்த யாப்பா பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான  அசங்க நவரத்ன, கௌரவ வருண பிரியந்த லியனகே, ரோஹன பண்டார, நிமல் பியதிஸ்ஸ மற்றும் ஜகத் பிரியங்கர ஆகியோரும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image