1,700 ரூபா வேதன அதிகரிப்பு வர்த்தமானி இரத்து!

1,700 ரூபா வேதன அதிகரிப்பு வர்த்தமானி இரத்து!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக அதிகரித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது. 

தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தரவினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

அத்துடன், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினாலும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700  ரூபாவாக அதிகரித்துக் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி தொழில் ஆணையாளர் நாயகத்தினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சின் செயலாளர் ஆர்.பீ.ஏ.விமலவீர  மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானியை வௌியிட்டிருந்தார். 

இந்த வர்த்தமானியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும் விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

அதற்கமைய, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த மொத்தக் கொடுப்பனவாக 1,700 ரூபா கிடைக்கும் என தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சின் செயலாளர் அறிவித்திருந்தார். 

மேலதிக கொழுந்து கிலோகிராம் ஒன்றுக்கு 80 ரூபா வீதம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் மே மாதம் 21ஆம் திகதி வௌியிட்ட அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும், இந்த வேதன உயர்வு வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெருந்தோட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடியதன் அடிப்படையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர்நீதிமன்றம் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் இரத்து செய்யப்படுவதாக அறிவித்து தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தரவினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 10ஆம் திகதிக்கு திகதியிடப்பட்ட புதிய வர்த்தமானியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினாலும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானியும் ஜுலை 10ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.

Tea_Gazette01.jpg

Tea_Gazette02.jpg

Tea_Gazette03.jpg

Tea_Gazette04.jpg

 

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image