சம்பள உயர்வும் - பாராட்டும் தொழிற்சங்க செயற்பாடுகளை முடக்கும் முயற்சியா?

சம்பள உயர்வும் - பாராட்டும் தொழிற்சங்க செயற்பாடுகளை முடக்கும் முயற்சியா?
சுகயீன விடுமுறை போராட்ட தினங்களில் கடமையில் ஈடுபட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள உயர்வு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தற்போது சமூகத்தில் மிக முக்கிய பேசுபொருள் ஆகியுள்ளது.
சம்பள உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, அரச துறையில் உள்ள சுமார் 200 இற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள், ஜுலை மாதம் 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக அரச துறையில் பல்வேறு செயற்பாடுகளும் முடங்கின் 
 
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாமல் கடமைக்கு சமூமளித்த அரச ஊழியர்களுக்கு கௌரவம்
 

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை சரியாகப் புரிந்துகொண்டு , மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் செயற்பட்டு, 2024 ஆம் ஆண்டு ஜூலை 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் கடமைக்கு சமூகமளித்த நிறைவேற்றுத் தரம் அல்லாத அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் விசேட சம்பள உயர்வொன்றை வழங்குவதற்கும், அவர்கள் அனைவருக்கும் எதிர்கால பதவி உயர்வுகளுக்குப் பயன்படுத்தும் வகையில் விசேட பாராட்டுச் சான்றிதழொன்றை வழங்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்  (ஜுலை 09) முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அனைத்து அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மாகாண பிரதான செயலாளர்களுக்கு அறிவிக்குமாறும் அது தொடர்பிலான சுற்றுநிருபம் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடாத ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்புக்கு கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார். சம்பள உயர்வு தரம் 3(I) இல் உள்ள ஆசிரியர்களுக்கு 525 ரூபா. தரம் 2(I) இல் உள்ள ஆசிரியர்களுக்கு 1,335 ரூபா மற்றும் தரம் 1 இல் உள்ளவர்களுக்கு 1,630 ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், குறித்த வேலைநிறுத்தத்தின்போது பணிக்கு சமூகமளித்த நிர்வாக தர மட்டத்திற்கு கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 10இ000 ரூபா கொடுப்பனவை ஒருமுறை வழங்க கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு 

குறிப்பாக அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. 

சுகயீன விடுமுறை போராட்ட தினத்தில் கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு  சம்பள உயர்வு வழங்கும் அரசாங்கத்தின் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

Teachers_Principal_TU.jpg

அரசாங்கம் வரப்பிரசாதங்களை வழங்கி தொழிற்சங்க செயல்பாடுகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அந்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  ஆசிரியர் - அதிபர் சம்பளத்தில் எஞ்சியுள்ள 2/3 வழங்குமாறும், பெற்றோர்களுக்கு உள்ள கல்விச் சுமையை குறைக்கவும், அதிபர் மற்றும் ஆசிரியர் சேவையில் உள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என்றும் பணிப்புறக்கணிப்புகள், சுவையீன விடுமுறை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து அரசாங்கம் எந்தவிதமான பதிலளிப்பையும் செய்யவில்லை. இந்த நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு சட்டப்படி வேலைசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய பாடசாலை கற்பித்தல் செயல்பாடுகளுக்கு அப்பால் உள்ள அனைத்து செயற்பாடுகளிலும் ஆசிரியர் அதிபர்கள் விலக உள்ளனர். மாணவர்களுக்கு கல்வி வழங்கும் செயல்பாடு மாத்திரமே முன்னெடுக்கப்படும். பாடசாலைகளுக்கு அப்பால் வலயக் கல்வி பணிமனை, மாகாண கல்வி திணைக்களம், மாகாண கல்வி அமைச்சு என்பன அழைக்கும் கூட்டங்கள், வேலைத்திட்டங்களில் ஆசிரியர் - அதிபர்கள் பங்கேற்க மாட்டார்கள். இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் நாம் கோருகின்றோம்.

1986 இல் உயர்நீதிமன்ற தீர்ப்பு

9 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட சுகயீன விடுமுறை போராட்டத்தின்போது, பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க தீர்மானித்துள்ளது. 1986 ஆண்டு ஐக்கிய இலங்கை தாதியர் சங்கம் மருத்தெட்டுவே ஆனந்த தேரரின் தொழிற்சங்கம் மேற்கொண்ட வேலைநிறுத்தத்தின் போது அப்போதைய ஜனாதிபதி ஜே. ஆர் ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கம், இரண்டு சம்பள அதிகரிப்புகளை வழங்க தீர்மானித்திருந்தது. எனினும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தலைமையிலான தொழிற்சங்கம், உயர்நீதிமன்றத்திற்கு சென்று உத்தரவு ஒன்றைப் பெற்றுக் கொண்டது. அவ்வாறான சம்பள உயர்வை வழங்க முடியாது என அரச சேவைகள் அமைச்சின் செயலாளருக்கு எதிராக இந்த உத்தரவு பெறப்பட்டிருந்தது. பாரமட்சமான முறையில் சம்பளத்தை வழங்க முடியாது.

அதாவது அரசியலமைப்புக்கு அமைய பாரபட்சமான முறையில் சம்பளத்தை வழங்க முடியாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அவ்வாறான தீர்ப்பு இருக்கின்ற சந்தர்ப்பத்தில், சுகயீன விடுமுறை போராட்ட தினத்தில் கடமைக்கு சமூகமளித்த ஆசிரியர்களுக்கு 10,000 ரூபா சம்பள உயர்வு வழங்குவதற்கு மீண்டும் அமைச்சரவை (15) தீர்மானித்திருக்கின்றது. இதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். வரப்பிரசாதங்களை வழங்கி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. சம்பள அதிகரிப்பு வழங்க பணம் இல்லை. ஆனால் 10,000 ரூபா வழங்க பிரச்சினையில்லை. இந்த அரசாங்கம் கடந்த காலங்களில் அறவிடப்பவேண்டிய வரியை அறவிடவில்லை. 1,066 பில்லியன் ரூபா வரி அறவிடப்படாமல் உள்ளது.  வரிசலுகை 975 பில்லியன் ரூபா.  இவை அனைத்தையும் செய்ய முடியும். ஆனால் ஆசிரியர்கள் - அதிபர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியாது.

பொலிஸ்மா அதிபரின் கருத்துக்கு எதிர்ப்பு

தொழிற்சங்க நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், பல்வேறு கருத்துக்களும் வெளியிடப்படுகின்றன.  தொழிற்சங்கங்கள் புற்றுநோய் என பொலிஸ்மா அதிபர் கூறுகின்றார். அவர் எப்படி அவ்வாறு கூற முடியும்? அவரின் கடமை என்ன? இந்த நாட்டின் அரசியலமைப்பில் உரிமை உள்ளது. அதன் அடிப்படையிலேயே தொழிற்சங்கங்கள் உருவாகியுள்ளன. கருத்து வெளியிடும் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம் என்ற உரிமைகளின் அடிப்படையிலேயே தொழிற்சங்கங்கள் உருவாகின்றன. 1935 ஆம் ஆண்டு முதல் தொழிற்சங்க கட்டளைச் சட்டங்கள் உள்ளன. தொழிற்சங்கங்களை உருவாக்க, தொழிற்சங்க செயல்பாடுகளை முன்னெடுக்க, வேலைநிறுத்தங்களை செய்தல் போன்ற பல்வேறு உரிமைகள் உள்ளன. அரசாங்கம் சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் (ILO) உடன்படிக்கை செய்கின்றது. ஜி எஸ் பி பிளஸ் (GSP+) சலுகையை பெற்றுக்கொள்ளும்போது தொழிலாளர் வர்க்கத்தின் உரிமை தொடர்பாக பேசுகின்றனது. ஆனால் பொலிஸ்மா அதிபர் ஊடாக தொழிற்சங்கங்கள் புற்றுநோய் என கூறுகின்றது. அவர்கள் தங்களுடைய கடமையை செய்ய வேண்டும்.  தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள் தொடர்பாகவே நாங்கள் குரல் கொடுக்கின்றோம். நாங்கள் எந்த ஒரு செயற்பாட்டையும் நிறுத்தவில்லை. அனைத்தையும் முன்கொண்டு சொல்வோம். கிரமமாக நாங்கள் தெரிவு செய்த முறையில் நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வோம். ஆசிரியர் மற்றும் அதிபர்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என நாங்கள் கூறுகின்றோம்.

ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு ஏனைய அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து நடவடிக்கைகளை முன் கொண்டு செல்லும். 1986 ஆம் ஆண்டு தாதியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது அந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத தாதியர்களுக்கு இரண்டு சம்பள உயர்வுகளை வழங்க அப்போதைய அரசாங்கம் தீர்மானித்தது. இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கமைய இவ்வாறு பாரபட்சமான முறையில் செயல்பட முடியாது என உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் உள்ளது. அரசியலமைப்பின் 12/1 அத்தியாயத்திற்கு அமைய பாரபட்சமான முறையில் வழங்க முடியாது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  அதனை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் உயர்நீதிமன்றம் செல்வோம்.

கப்பம் போன்ற ஒரு கொடுப்பனவை அரசாங்கம் வழங்க முயற்சிக்கிறது

26,27 மற்றும் 9ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுகயீன விடுமுறை போராட்டங்கள் நூற்றுக்கு நூறு வீதம் வெற்றியளித்துள்ளன. அந்தப் போராட்டங்களின் போது ஆசிரியர் - அதிபர் எவரும் பணிக்கு சமூகமளிக்கவில்லை.  சாதாரண தர பரீட்சையின் செயல்முறை பரீட்சை கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மாத்திரமே அன்று கடமையில் ஈடுபட்டனர். மாணவர்களுக்காக கடமையில் ஈடுபட்ட அவர்களும் இந்த கொடுப்பனவை பெற்றுக் கொள்ள தயாரில்லை. அரசாங்கம் எப்போதும் வரப்பிரசாதங்கள், கப்பம் செலுத்தல்  போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்த கொடுப்பவை வழங்க முயற்சிக்கின்றது. அதை வழங்குவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம்.  எங்களது வரப்பிரசாதங்களையும், உரிமைகளையும் பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் ஒருபோதும் பின்னிற்க மாட்டோம்.  இந்த விடயத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நிலைமை உள்ளது. முன்னதாகவே பாரபட்சமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் உள்ளது. எனவே அவ்வாறு செயல்பட முடியாது. - என்றார்.

இரண்டு வாரங்களுக்கான நடவடிக்கை என்ன?

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க,

சம்பள பிரச்சினையில் எஞ்சியுள்ள 2/3 ஐபெற்றுக் கொள்வதற்காக, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி முதல் கடந்த 9ஆம் திகதி வரை, பல்வேறு நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டிருந்தோம்.  இந்த நடவடிக்கைகளுக்கு சாதகமான பதிலை வழங்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி வரை  சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் காலை  7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாணவர்களின் கற்பித்தல் செயல்பாடுகளில் ஈடுபடுவதுடன், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் ஆசிரியர் - அதிபர்கள் பங்கேற்பர்.  ஆனால் பிற்பகல் 1.30 மணியின் பின்னர் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து பணிகளில் இருந்தும் விலகி இருக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையான காலப்பகுதியில் மாணவர்களின் கற்பித்தல் செயல்பாடுகள் தவிர்த்து ஜனாதிபதி செயலகம் அல்லது சுகாதார அமைச்சு ஆட்பதிவுத்திணைக்களம்  என அனைத்து பணிகளில் இருந்தும் விலகுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த இரண்டு வாரகாலத்தில் அரசியல்வாதிகள் பங்கேற்கும் எந்த ஒரு நிகழ்விலும் அதிபர் ஆசிரியர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  குறித்த இரண்டு வார கால பகுதிக்குள் ஆசிரியர் அதிபர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும். - என்றார்.

அச்சுறுத்தவும் - போராட்டங்களை முடக்கவும் அரசாங்கம் நடவடிக்கை

சமரகோன் -  அகில இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சங்கத்தின் பொதுச்செயலாளர்

ஆசிரியர் அதிபர்கள் முன்னெடுத்த போராட்டத்திற்கு இதுவரையும் எந்த ஒரு பதிலையும் வழங்காத அரசாங்கம், தொடர்ச்சியாக ஆசிரியர்களையும் அதிபர்களையும் அச்சுறுத்தவும் - போராட்டங்களை முடக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றது. தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் அரசாங்கத்தின் இந்த அச்சுறுத்தலுக்கு எதிர்ப்பு வெளியிடுகின்றோம்.  ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு முன்னெடுத்த இந்த நடவடிக்கையானது எந்தவித தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும  தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்லப்படும். - என்றார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image