சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் இன்றாகும்.
'உலகலாவிய ரீதியிலுள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை அறிவோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.
2000ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக தங்களுடைய நாட்டிலிருந்து ஏனைய நாடுகளுக்கு தொழிலுக்காக புலம்பெயர்ந்தவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
புலம்பெயர் தொழிலாளர் தினத்தை பிரகடனப்படுத்துவதற்கு முன்னதாகவே ஐக்கிய நாடுகள் சபையினால் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் திகதியன்று பிரகடனமொன்று முன்மொழியப்பட்ட நிலையில், 1996ஆம் ஆண்டளவில் குறித்த பிரகடனத்தில் இலங்கை அரசாங்கமும் கையொப்பமிட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த சுமார் 1.7மில்லியன் புலம்பெயர்தொழிலாளர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் நவம்பர் மாத இறுதி வரையில் மாத்திரம் 275,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக புலம் பெயர்ந்துள்ளனர்.
இலங்கை மக்களின் பிரதான வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பு இலக்காக மத்திய கிழக்கு நாடுகள் தொடர்ந்தும் காணப்படுகிறது. வருடத்திற்கு 85 சதவீதமான மக்கள் புலம் பெயர்ந்து செல்வதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 70 சதவீதமானவர்கள் வீட்டுப் பணிப்பெண்களாக பயணிப்பதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் மாத்திரம் 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் குறித்த வருவாய் 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் குடிமக்கள், பணிபுரிவதற்காக அனைத்து பகுதிகளுக்கும் செல்லலாம், அது அவர்களின் அடிப்படை உரிமை என்ற வகையில் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் திரும்பி வருகையையும் உறுதிப்படுத்துவது குறித்து பொறிமுறையொன்றை உருவாக்குமாறும் புலம் பெயர் தொழிலாளர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்த ஆண்டு முதல் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளை மேம்படுத்துவது குறித்து இலங்கையில் அதிகளவில் கவனம் செலுத்தப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.