நாளை மீள கூடுகிறது சம்பள நிர்ணய சபை: கம்பனிகள் கூறுவது என்ன?

நாளை மீள கூடுகிறது சம்பள நிர்ணய சபை: கம்பனிகள் கூறுவது என்ன?

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1,040 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபை நாளை முதலாம் திகதி மீண்டும் கூடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

இம்மாதம் 8 ஆம் திகதி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் அடிப்படை சம்பளம் குறித்து தீர்மானிப்பதற்காக கொழும்பிலுள்ள தொழில் அமைச்சில் தொழில் ஆணையாளர் தலைமையில் சம்பள நிர்ணயசபை கூடியது, இதன் போது 900 ரூபா அடிப்படை சம்பளம் , 140 ரூபா வாழ்க்கை செலவு புள்ளிக்கு ஏற்ற கொடுப்பனவும் மொத்தமாக 1,040 ரூபா உறுதிப்படுத்தப்பட்டது. இருந்த போதிலும் அரசாங்கத்தின் யோசனை மற்றும் தீர்மானங்களுக்கு கம்பனிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தன.

சம்பள பிரச்சினை சம்பள நிர்ணய சபைக்கு கொண்டு செல்லப்பட்டதால் கூட்டு ஒப்பந்தம் வலுவிழந்துவிட்டதாக கம்பனிகள் சுட்டிக்காட்டியிருந்த அதேவேளை , இங்கு தொழிலாளர்களின் ஏனைய நலன்கள் கேள்விகுட்படுத்தப்பட்டிருந்தன

சம்பள நிர்ணய சபையின் தீரமானத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்க கடந்த 15ஆம் திகதி நண்பகல் வரையில் வாரகால அவகாலம் வழங்கப்பட்டிருந்தது. குறித்த காலப்பகுதிக்குள் சுமார் 180 ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பில், சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களினால் அதிகளவான ஆட்சேபனைகளும், முதலாளிமார் சம்மேளனத்தின் சார்பில் சில ஆட்சேபனைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.

அதேநேரம், இறப்பர் துறைசார் வேதன உயர்வை ஆட்சேபித்தும் குறிப்பிடத்தக்களவான ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டிருந்ததாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

இந்த நிலையில், முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகளின் பிரதிநிதித்துவம் கடந்த கூட்டத்தில் இல்லாதமை காரணமாக, வேதன நிர்ணய சபையினால் வேதன உயர்வு விடயத்தில் தீரமானம் மேற்கொள்வதில், இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நாளை சம்பள நிர்ணய சபை மீண்டும் கூடி ஆராயவுள்ளது.

சம்பள நிர்ணய சபையின் நடைமுறை எவ்வாறானது?

சம்பள நிர்ணய சபையானது, தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியவற்றின் தலா 8 பிரதிநிதிகளையும், அரசாங்கத் தரப்பினர் 3 பிரதிநிதிகளையும் கொண்டுள்ளது. சம்பள நிர்ணய சபை கூடுவதற்கான குறைந்தப்பட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை 5 ஆகும்.

அதில், தொழிற்சங்க பிரதிநிதிகள் இரண்டு பேரும், முதலாளிமார் சம்மேளனத்தின் இரண்டு பிரதிநிதிகளும், அரசாங்க பிரிதிநிதி ஒருவரும் உள்ளடங்க வேண்டும்.

ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தின் 8 பிரதிநிதிகள் பங்கேற்றிருந்த நிலையில், முதலாளிமார் சம்மேளனத்தின் சார்பில் ஒரு பிரதிநிதி மாத்திரமே பங்கேற்றிருந்தார்.

எனவே, கூட்டத்தை நடத்துவதற்கான குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாதமை காரணமாக, குறித்த தினத்தில் கூட்டத்தை நடத்த முடியாமல் போனதுடன், பிறிதொரு தினத்திற்கு பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டது.

இந்த நிலையில், மார்ச் மாதம் முதலாம் திகதி சம்பள நிர்ணய சபையின் அடுத்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு விடயத்தில் அமைச்சருக்கு தீர்மானம் மேற்கொள்ள முடியும் என்பதுடன், தொழில் ஆணையாளருக்கு அதிகாரத்தை வழங்க முடியும் என்பது உள்ளிட்ட சில ஏற்பாடுகள் கட்டளைச் சட்டத்தில் உள்ளன.

சம்பள நிர்ணய சபையின் பிரதிநிதி ஒருவர், தொடர்ச்சியாக மூன்று பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதை தவிர்ப்பாராயின், அவரை நீக்குவதற்கும், புதிய பிரதிநிதியை நியமிப்பதற்கும் தொழில் அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது.

கம்பனிகளின் நிபந்தனை என்ன?

சம்பள நிர்ணயசபையால் தீர்மானிக்கப்பட்ட சம்பளத்தை வழங்குவதாயின், வாரத்தில் 3 நாட்கள் மாத்திரமே வேலை வழங்க முடியும் என்றும், நாளொன்றுக்கு 16 கிலோவிற்கும் குறைவாக கொழுந்து பறிக்கும் பெண்களுக்கு முழு நாளுக்கான சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்றும் கம்பனிகள் சம்பள நிர்ணய சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த நிபந்தனையை தொழிற்சங்கங்கள் நிராகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts