பெண்களை துன்புறுத்தும் ஆண்களுக்கே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

பெண்களை துன்புறுத்தும் ஆண்களுக்கே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

'பெண்களுக்கு சவால்விடுக்கும், தடைகளை ஏற்படுத்தும், அவர்களை துன்புறுத்தும் ஆண்களை தெளிவுபடுத்தினால் போதும். ஒருபோதும் பெண்களை புதிதாக தெளிவுபடுத்த, பலப்படுத்த அவசியம் இருக்காது என நான் நினைக்கின்றேன்.'

திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகள் இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தின் ஊடாக வழங்கியுள்ள காணொளி செய்தியில் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள், அதற்கான தீர்வுகள் தொடர்பில் அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலுக்கு பிரவேசித்தல் என்ற நோக்கத்தைவிடவும், பிரஜை என்ற அடிப்படையில் தனது வகிபாகத்தை நிறைவேற்றுவதில் தொழில்ரீதியாக எனது பங்களிப்பை வழங்குவதே முதற்கட்டமாக இருந்தது.

தொழில்ரீதியானவர் என்பதனால் ஏற்படும் சவால்களை விடவும், பெண் என்பதினால் ஏற்படும் சவால்களை இந்தத் துறையில் நான் முழுமையாக எதிர்கொண்டேன். தொழில் ரீதியான என்ற அடிப்படையில் ஒரு தரப்பினருக்கு சில சவால்கள் இருக்கும். அதற்கு இருக்கின்ற எதிர்விளைவுகள் காரணமாக எனக்கு சவால்கள் ஏற்படுடக்கூடும். ஏதாவது ஒரு காரியத்தை செய்யும்போது அதனை செய்ய இயலாமை என்பதனால் ஏற்படும் சவாலைவிடவும், வழங்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு இலக்கை நோக்கி அதனை அடைய முயற்சிக்கும் போது, எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் எந்த ஒரு பொருத்தமுமில்லாமல், அவமானங்களை ஏற்படுத்தி, எங்களை உளவியல்ரீதியாக பலமிழக்கச்செய்து, சமூகத்தில் எங்களுக்கு இருக்கும் மரியாதையும், வரவேற்பையும் சவாலுக்கு உட்படுத்தி, எங்களுக்கு அந்த காரியத்தை செய்வதற்கு இயலாதுபோகும் நிலைமை ஏற்படுத்துவதே நான் சவாலாக நினைக்கின்றேன்.

இயன்றளவு ஒருவரால் மற்றொருவருக்கு சேறுபூச முடியும். அருகில் சேறு இருப்பவர்கள், சேற்றை வாரி வீசினாலும், தங்கத்தை அருகில் வைத்திருப்பவர்கள் ஒருநாளும் தங்கத்தை வாரி வீசமாட்டார்கள். அதனால் நாங்கள் தொழில் ரீதியாக எங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறோம். எந்த ஒருவர் எவ்வாறான சவால்களை விடுத்தாலும், அதனை நிறைவேற்றும் போது அதனை நான் அதனை சவாலாக கருதமாட்டேன்.

பெண்களுக்கு ஒரு செய்தியை வழங்கி, அவர்களை வெளியே கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் கதைக்கின்றோம். பெண்கள் இந்த சமூகத்தில் முன்னோக்கி செல்லவும், உயர் பதவிகளுக்கு செல்லவும், பெண்களுக்கு எதிரான சவால்களை எதிர்கொள்ளவும், அவர்களை பலப்படுத்தி தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர். இதில் மறுபக்கம் இடம்பெறவேண்டும் என நான் நினைக்கின்றேன். பெண்களுக்கு சவால்விடுக்கும், தடைகளை ஏற்படுத்தும், அவர்களை துன்புறுத்தும் ஆண்களை தெளிவுபடுத்தினால் போதும். ஒருபோதும் பெண்களை புதிதாக தெளிவுபடுத்த, பலப்படுத்த அவசியம் இருக்காது என நான் நினைக்கின்றேன்.

தாய் ஒருவர் எப்போதும் தனது மகளுக்கு ஒரு நல்ல மனைவியாக வருவதற்கு கற்றுக் கொடுக்கின்றார். ஆனால் நல்ல கணவனாக வேண்டும் என்று மகனுக்கு கற்றுக்கொடுப்பதில்லை அதனால்தான் இந்த சமூகத்தில் எல்லா பிரச்சினைகளும் இருக்கின்றன. உங்களுக்கு தெரியும் ரயிலில் பெண்களுக்கு ஒரு பெட்டி ஒதுக்கப்படுகிறது. பெண்களுக்கு ரயிலில் பயணிக்க தெரியாது என்பதால் அல்லவே. ஆண்களுக்கு சரியான முறையில் அந்த ரயில் பெட்டியில் செல்ல முடியாது என்பதனாலேயேயாகும்.

எனவே, பலப்படுத்துதல், விழிப்புணர்வை ஏற்படுத்தல் என்ற அனைத்தையும் இந்த சமூகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டும். மனப்பாங்கு ரீதியில் பெண் என்பவர் பிரஜை என்பதை நினைவுப்படுத்துங்கள். பெண் என்பவர் தனது மகள், மனைவி, தாய் மட்டுமல்ல. அனைத்து பெண்களும் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதை கூறுங்கள். பெண் என்பதனால் சவால்விடுப்பதை நிறுத்துச் சொல்லுங்கள். அந்த மனப்பாங்கை இந்த சமுதாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும்.

பெண்கள் எப்போதுமே தைரியமானவர்கள். திறமையானவர்கள். அவர்கள் இலக்கை அடைய எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள். எதிர்காலத்தில் அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள எதிர்பார்க்கும் மகளுக்குக்கூட அதைரியத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் இன்று சமுதாயத்தில் இடம்பெறுகின்றன. பிரதி பொலிஸ் மா அதிபர் பிம்ஷாணி ஜெயசிங்க ஆராச்சிக்கு விடுக்கும் சவால்கள், எதிர்காலத்தில் தங்களது இலக்குகளை தீர்மானிக்கும், அதற்காக இன்று முயற்சிக்கும் மகள்களுக்கு விடுக்கும் சவால்கள் ஆகும். – என்றார்.

#C190 #சர்வதேச_மகளிர்_தினம் #பெண் #உரிமை #பாதுகாப்பு #ஆண்கள் #துன்புறுத்தல் #வன்முறை #உலகம் #போராட்டம் #சட்டம்

 

Author’s Posts