அரசியல் யாப்பு நிபுணர்கள் குழுவிற்கு மலையக மக்கள் சார்பாக முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள்

அரசியல் யாப்பு நிபுணர்கள் குழுவிற்கு மலையக மக்கள் சார்பாக முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள்

நாட்டிற்கு புதிய அரசியல் யாப்பு ஒன்றினை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இன்றைய அரசாங்கம் அரசியல் யாப்பு நிபுணர்கள் குழுவொன்றினை நியமித்துள்ளதுடன்

அக்குழுவினர் உருவாக்கவுள்ள அரசியல் யாப்பு எவ்வாறான உரிமைகளை உள்ளடக்கவேண்டும் என்பது தொடர்பில் மக்கள் கருத்தினை அறியும் வகையில் முன்மொழிவுகளை கோரியிருந்தது. இந்நிலையில், மலையக மக்கள் சார்பாக முன்மொழிவுகளை முன்வைக்கும் வகையில் கண்டி, சமூக அபிவிருத்தி நிறுவகம் மலையக கல்விமான்கள், அறிவுஜீவிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களை இணைய வழி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடல் ஒன்றினை ஒழுங்கு செய்தது. இக்கலந்துரையாடலின் போது பங்குபற்றுனர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கி கீழ்காணும் முன்மொழிவுகளை நிபுணர் குழுவிற்கு சமர்ப்பித்துள்ளது. இவ் முன்மொழிவுகள் 1997, 2000, 2003 மற்றும் 2016ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டதாகும். இவ்முன்மொழிவுகள் மலையக மக்கள் முகம்கொடுக்கும் அடிப்படை உரிமைகள் பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளாகும்.

புதிய அரசியல் யாப்பு: மலையகத் தமிழர்களின் முன்மொழிவுகள்

  1. அரசின் தன்மை/ இயல்பு
  • அனைத்து சமூகங்களையும் சமபங்காளிகளாக கருதி அவர்களுக்கான கண்ணியத்தையும் சம இடத்தினையும் கொடுப்பதை உறுதிசெய்வதாக அரசின் தன்மை அமையவேண்டும்.
  • இலங்கை அரசு பின்வருமாறு வரையறுக்கப்படல் வேண்டும்: இலங்கை ஒரு சுயாதீனமான, இறையாண்மை மிக்க, சுதந்திரமான, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக அரசு ஆகும். இது பல மத, பல இன, பன்மைத்துவ சமூகம் மற்றும் சிங்களவர்கள், இலங்கை தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், வேடர்கள், பறங்கியர்கள் மற்றும் பிற சமூகங்களை உள்ளடக்கிய இலங்கை ஜனநாயகக் குடியரசு என அறியப்பட வேண்டும்.

குடியுரிமை:

  • ‘இலங்கையின் குடிமகன்’ என்று அறியப்படும் குடியுரிமையின் ஒரு அந்தஸ்து இருக்க வேண்டும். அது எவ்வாறு பெறப்பட்டது என்பதைப் பொருட்படுத்தாமல் (வம்சாவளி அல்லது பதிவு மூலம்) அறியப்படல் வேண்டும்.
  1. உரிமைகள் மசோதா/ அடிப்படை உரிமைகள்
  • 2009இல் மனித உரிமை அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவினால் உருவாக்கப்பட்ட ‘உரிமைகள் மசோதா’ புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டு மேம்படுத்தப்படல் வேண்டும். அனைத்து குடிமக்களுக்கும் உறுதிப்படுத்தப்படும் அடிப்படை உரிமைகளின் வலுவான அடித்தளம் எண்ணிக்கையில் சிறிய சிறுபான்மையினருக்கும் தேவையான ஒரு பாதுகாப்பாகும். உரிமை மீறல்களுக்கான தீர்வுகளைத் தேடுவதற்கான அணுகலின் போது மாகாண உயர் நீதிமன்ற அதிகார வரம்பை முதல் சந்தர்ப்பத்தில் அணுகவும் உரிமைதாரர் தேர்ந்தெடுக்கும் மொழியில் தீர்வு கேட்கக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
  1. சிந்தனை, மனசாட்சி மற்றும் மத சுதந்திரம்
  2. மனித கண்ணியத்திற்கான உரிமை
  3. வாழ்வதற்கான உள்ளார்ந்த உரிமை
  4. சித்திரவதையிலிருந்து விடுதலை
  5. தன்னிச்சையான கைது, தடுப்புக்காவல் மற்றும் தண்டனையிலிருந்து விடுதலை
  6. தகவல்களை அணுகுவதற்கான உரிமை
  7. சட்டத்தின் முன் ஒரு நபராக அங்கீகரிப்பதற்கான உரிமை
  8. வெளிப்படையான மதத்திற்கு சுதந்திரம்/ வெளிப்படையாக மதத்தைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம்
  9. இலங்கைக்குத் திரும்புவதற்கான சுதந்திரம்
  10. போதுமான சுற்றுச் சூழலுக்கான உரிமை
  11. அரச நடவடிக்கை மூலம் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கான தீர்வு
  12. பொது அவசர காலங்களில் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல்
  13. சுகாதாரத்திற்கான உரிமை
  14. கல்விக்கான உரிமை
  15. பாகுபாடு காட்டாமை மற்றும் சமத்துவத்திற்கான உரிமை
  16. குழு உரிமைகள் (பெண்கள், குழந்தைகள், வலதுகுறைந்தோர், முதியவர்கள்)

மொழி உரிமைகள்

  • இலங்கையின் குடிமகன் சிங்களம் அல்லது தமிழ் மொழியில் அரசுடன் தொடர்பு கொள்ள முடியுமாக இருத்தல் வேண்டும். அதுவே எப்போதும் அவனுக்கு/ அவளுக்கு மிகவும் இலகுவானதொன்றாக இருக்கும். மத்திய அரசு மற்றும் அதன் அனைத்து நிறுவனங்களின் அனைத்து பொது தகவல்களும் அரசாங்க தகவல் தொடர்புகளும் சிங்கள மற்றும் தமிழ் மொழியில் இருக்கும்.
  • சிங்களமும் தமிழும் தேசிய மற்றும் உத்தியோகபூர்வ மொழிகளாக இருக்கும்.
  • ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும்.
  • இரு மொழிகளை அடிப்படையாகக் கொண்ட நிர்வாக பிரிவுகள் மற்றும் நீதிமன்ற செயற்பாடுகள் என வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டப் பகுதிகளில் இரு மொழிகளிலும் அரச நிர்வாகம் இடம்பெற வேண்டும்.
  • நுவரெலியா மாவட்டத்தில் பெரும்பான்மையாக தமிழ் பேசுபவர்கள் காணப்படுவதனால் அங்கு நீதித்துறை நிர்வாகம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நடைபெற வேண்டும்.

நிர்வாகி (ஜனாதிபதி, அமைச்சரவை, பொதுச்சேவை)

  • இலங்கையின் தற்போதைய சூழலில் ஒரு நாடாளுமன்ற அமைப்பு ஜனநாயகத்திற்கு மிகவும் உகந்ததாக இருக்கும் என்ற ஒருமித்த பொதுக் கருத்தை நாங்கள் ஆதரிக்கும் அதேவேளை நிர்வாகத்தின் வடிவம் ஒரு நிறைவேற்று ஜனாதிபதி அல்லது நிறைவேற்று பிரதமர் வடிவமாக இருந்தாலும், பெரும்பான்மை முடிவுகளை தடுக்க அரசியலமைப்பானது போதுமான தடைகள் மற்றும் சமநிலைகளை கட்டாயம் கொண்டிருக்க வேண்டும் என நாங்கள் பரிந்துரைக்கின்றோம். நிறைவேற்றுத்துறையின் தலைவர் நாடாளுமன்றத்திற்குப் பொறுப்புக் கூற வேண்டும். அத்துடன், அவரின் செயற்பாடுகள் நீதித்துறை மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் மற்றும் அரசியலமைப்பு ரீதியாக நிறுவப்பட்ட சுயாதீன ஆணைகக்குழுக்களால் அவரின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட வேண்டும்.
  • அரசியலமைப்பு பேரவை மீண்டும் தாபிக்கப்பட்டு அதன் மூலம் சிவில் சேவையின் தரத்தினை மேம்படுத்த வேண்டும்.
  • ஜனாதிபதி முறையினை தொடர்வதாக இருந்தால், புதிய அரசியலமைப்பின் மூலம் உப ஜனாதிபதி பதிவியொன்று உருவாக்கப்பட்டு அது நாட்டின் நான்கு பிரதான இனங்களான சிங்களவர், இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர் மற்றும் முஸ்லிம்களுக்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். இது பிரதமர் தலைமையிலான கெபினட் அரசாங்க முறைக்கும் பொருந்தும்.

சட்டமன்றம்

  • மத்திய நாடாளுமன்றம் இரண்டு சபைகளைக் கொண்டிருக்கும்: அவையாவன பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் என்பனவாகும். பிரதிநிதிகளின் சபை தேர்தல் முறையின் அடிப்படையில் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் மற்றும் இது நாட்டின் மக்கள் தொகை அமைப்பை பிரதிபலிக்கக் கூடியதாக அமையும்.
  • இரண்டாவது சபையான செனட் சபை உறுப்பினர்கள் நியமன அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். நாடு முழுவதும் சிதறி வாழ்வதனால் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெற முடியாத ஓரங்கட்டப்பட்ட சிறுபான்மையினர் குறித்த சிறப்பு ஏற்பாடுகளை இச்சபைக் கொண்டிருக்கும். எனவே, இரண்டாவது சபையை நிறுவுவது சட்டமன்றத்தில் உள்வாங்குதலையும் பன்முகத்தன்மையையும் உறுதி செய்வதற்கான ஒரு வழியாகும்.

வாக்கெடுப்பு உட்பட வாக்குரிமை மற்றும் தேர்தல்கள்

விகிதாசார பிரதிநிதித்துவ முறையானது நாட்டில் சிதறிய முறையில் வாழும் ஒரு சமூகத்திற்கு சமமான பிரதிநிதித்துவத்திற்கான சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. தற்போதைய முறையை சீர்திருத்தினால் தேசிய ஒருமித்த கருத்தின் அடிப்படையில், அளிக்கப்பட்ட வாக்குகளுக்கு விகிதாசார விளைவைக் கொண்டுவர முயற்சிக்கும் கலப்பு உறுப்பினர் விகிதாசார (MMP) முறை அறிமுகப்படுத்தப்படல் வேண்டும். எந்தவொரு புதிய தேர்தல் முறையும் எண்ணிக்கையில் சிறிய மற்றும் சிதறி வாழும் மலையக தமிழர்கள் உட்பட அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்த கூடிய ஒரு சமமான நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகளை கொண்டிருக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு சமமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த பின்வரும் நடவடிக்கைகள் பரிசீலிக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றன.

  • 40% கூடுதலான மலையகத் தமிழ் மக்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் இருப்பதை உறுதிசெய்ய ஒரு நெகிழ்வான (புவியியல் மற்றும் மக்கள் தொகை) வரம்புகளை வழங்கும் ஒரு எல்லை நிர்ணயச் செயல்முறை தேவையானதாகும். இதனால் அவர்கள் வாக்களித்து தங்கள் பிரதிநிதியை நாடாளுமன்றத்திற்கு தொகுதிவாரி முறையில் (முதலில் வெற்றிக் கம்பத்தை கடந்தவர் வெற்றி பெற்றவர் என்ற முறையினூடாக) அனுப்பும் வாய்ப்பு கிடைக்கும்.
  • தேர்தல் மாவட்டங்களை தேர்தல் வலயங்களாக பிரிப்பதில் கவனம் செலுத்துதல் வேண்டும் (அரசியல் அமைப்பின் 14ஆவது திருத்தத்தின் அடிப்படையில் ஆனால் ஒரு வலயத்திற்கு தலா 4-6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தல்). வலயத்தினை பிரிப்பதில் சிறுபான்மை சமூகங்களிலிருந்து பிரதிநிதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆற்றல் கொண்ட வலயங்கள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்த ஒரு நெகிழ்வான (புவியியல் மற்றும் மக்கள் தொகை) வாய்ப்புகள் மற்றும் தொடர்ச்சியான மண்டலங்களை வழங்கும் ஒரு எல்லை நிர்ணயச் செயல்முறையை மேற்கொள்ளுதல் அவசியமாகும். இது வெவ்வேறு சமூகங்கள் வெவ்வேறு பகுதிகளில் சிறுபான்மையினராக இருக்கலாம் என்பதை அங்கீகரிக்க கூடியதாக அமையும் (வடக்கு மற்றும் கிழக்கின் சில பகுதிகளில் வாழும் சிங்களவர்கள், பதுளை மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் உள்ள மலையகத் தமிழர்கள், பேருவெலவில் உள்ள முஸ்லிம்கள்)
  • இரட்டை வாக்குச்சீட்டு முறையை அறிமுகப்படுத்துதல்.
  • அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு இடையில் வாக்கெடுப்புக்கு முந்தைய ஒப்பந்தங்களை பிணைப்பதற்கான ஒரு அமைப்பு, கட்டமைப்பு மற்றும் முறைமையை அறிமுகப்படுத்தல்.
  • எண்ணிக்கையில் சிறிய சமூகங்கள் தங்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்பக்கூடிய வகையில் கலப்பு உறுப்பினர் விகிதாசார (MMP) முறையில் பல அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் தொகுதிகளை உருவாக்குதல்.
  • தேசிய பட்டியலின் கீழ் இடம்பெறும் நியமனத்தின் மூலம் தேர்தலினூடாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தில் நிலவும் பற்றாக்குறையினை ஈடுச்செய்தல்.
  • சிறுபான்மையினரின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் நோக்கில் நியூசிலாந்து, இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் காணப்படுவது போன்ற இரட்டை வாக்களிப்பு அல்லது ஒதுக்கப்பட்ட தொகுதிகள் தொடர்பில் கவனம் செலுத்துதல்.
  • கலப்பு உறுப்பினர் விகிதாசார (MMP) தேர்தல் முறை ஏற்றுக்கொள்ளப்பட்டால், கலவையானது 50:50 ஆகவோ அல்லது அது 60:40 க்கு குறையாததாகவோ இருத்தல் வேண்டும் (40% விகிதாசார பிரதிநிதித்துவமாகவும் 60ம% தேர்தல் அடிப்படையிலான FPP ஆகவும் இருத்தல் வேண்டும்).
  • பெண்களின் பங்கேற்பு: அனைத்து தரப்பினரும் தங்கள் வேட்பாளர்களின் பட்டியலில் 33 சதவீதமான தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளுக்கு பெண்களை பரிந்துரைப்பது கட்டாயமாக்கப்படல் வேண்டும்.

பரவலாக்கம், அதிகார பங்கீடு, அதிகார பகிர்வு

  • அதிகார பகிர்வு ஏற்பாடு இலங்கையின் பல இன, பல மத மற்றும் பல் தேசிய தன்மையை அங்கீகரிக்க வேண்டும். அத்துடன், இலங்கையானது சிங்களவர்கள், இலங்கை தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் ஆகியோரால் ஆனது என்பதை அது அங்கீகரிக்க வேண்டும்.
  • நாங்கள் அதிகாரப் பகிர்வின் கீழ் இரண்டு விடயங்களை முன்மொழிகிறோம். அதில் ஒன்று பிரத்தியேகமாக மலையகத் தமிழரை கவனம் கொள்கின்றது. மற்றையது, அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் அனைத்து சமூகங்களுக்கும் திறம்பட சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில் முழு நாட்டினையும் கவனம் கொள்கின்றது.
  • மலையகத் தமிழர்கள் பல ஆண்டுகளாக அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளை வகுப்பதிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேர்தல் முறைகளை வடிவமைப்பதிலும் தனித்துவமான சவால்களை ஏற்படுத்தியிருக்கின்றது. இச்சமூகத்தின் ஒரு பகுதியினர் மத்திய மலைநாட்டின் தோட்ட பகுதியில் குவிந்துள்ள நிலையில், கிட்டத்தட்ட அதே அளவிலான எண்ணிக்கையிலான மக்கள் நாட்டின் பல மாகாணங்களில் சிதறடிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
  • ஆகவே அரசியலமைப்பு ரீதியாக வரையறுக்கப்பட்ட சட்ட மற்றும் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஒரு சமூக சபையை நிறுவுதல் அவசியமாகும்.
  1. நுவரெலியாவை மையமாகக் கொண்டு சிறப்பு சட்ட மற்றும் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஒரு சமூக சபையை உருவாக்குதல் மற்றும் அதனூடாக மலையக சமூகத்தின் நலன்களை அவர்கள் இந்நாட்டில் எங்கு வாழ்ந்தாலும் கவனிக்ககூடியதாக இருத்தல். இச்சபை ஏற்கனவே நாடாளுமன்றம்/ மாகாண சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் பிராந்திய மற்றும் பாலின பிரதிநிதித்துவத்தை கருத்தில்கொண்டு சமூகத்திலிருந்து பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். இந்தச் சபைக்கு சமூகத்தை பாதிக்கும் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார விவகாரங்கள் தொடர்பாக சிறப்பு சட்ட மற்றும் நிர்வாக அதிகாரம் இருக்கும்.
  • சமூகத்திற்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக கூடுதல் நிர்வாக அலகுகளை அரசியலமைப்பில் உள்ள ஏற்பாடுகள் மூலம் ஸ்தாபித்தல். இது மலையக சமூகம் தேசிய நீரோட்டத்துடன் ஒன்றிணைவதை உறுதி செய்வதோடு, அரசாங்கத்தின் நிர்வாக வரம்பிற்கு வெளியேயும், தோட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிற்குள்ளேயும் மலையக சமூகம் இனியும் இருக்காது என்பதை உறுதிச்செய்வதாகவும் அமையும். மலையகத் தமிழர்களை மேம்படுத்துவதற்கு அதிகாரப் பகிர்வு செய்யக்கூடிய பிராந்திய எல்லை நிர்ணயம் தொடர்பாக பின்வருவனவற்றை நாங்கள் முன்மொழிகிறோம்.
  • புதிய உள்ளூராட்சி அமைப்புகளை உருவாக்குதல். இவை புவியியல் நிலப்பரப்பு மற்றும் சேவை செய்ய வேண்டிய மக்கள் தொகையின் அடர்த்தி ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மிகவும் தெளிவான மற்றும் சமமான அளவுகோல்களை பின்பற்றி உருவாக்கப்படல் வேண்டும். ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசும் சமூகக் குழுக்கள் அதே மொழியைப் பேசுபவர்களால் சேவை செய்யப்பட்டு நிர்வகிக்கப்படக்கூடிய வகையில் தேவையான மற்றும் சாத்தியமான இடங்களில் எல்லைகளை நிர்ணயம் செய்யப்படல் வேண்டும். இவை மீறப்பட்டால் உச்சநீதிமன்றம்/ அரசியலமைப்பு நீதிமன்றம் வழியாக சட்ட ரீதியான தீர்வுகள் வழங்கப்படல் வேண்டும்.
  • அதேவேளை நாம் புதிய பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவகர் பிரிவு என்பவற்றினை சனத்தொகைக்கு ஏற்ப தேசிய நியமங்களை பின்பற்றி மலையகத்திலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் உருவாக்க வேண்டும்.

பொது பாதுகாப்பு/ பொது சேவை

  • பொலிஸ், சிவில் பாதுகாப்பு மற்றும் முத்தரப்புப் படைகளில் மலையகத் தமிழர்களின் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப போதுமான பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டும்.
  • பொது சேவையில் அனைத்து மட்டங்களிலும் மலையகத் தமிழர்களின் சதவீதத்திற்கு ஏற்ப போதுமான பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படல் வேண்டும். இதற்கு காலவரையறையை உறுதிப்படுத்தும் நடவடிக்கை தேவைப்படலாம்.

மலையகத் தமிழர்களின் அடையாளம்

  • அடையாளப் பிரச்சினையானது சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக நாங்கள் கருதுகிறோம். இலங்கை சூழலில், மக்களின் சமூக பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளை உறுதிப்படுத்துவதில் இனத்தின் அடையாளம் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், சிங்களவர்கள், முஸ்லிம்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களின் இனக்குழுக்களைப் போலல்லாமல், பிரித்தானியர் காலனித்துவ காலத்தில் இந்தியாவில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மக்கள், குறிப்பாக தோட்ட பொருளாதாரத்தின் நோக்கத்திற்காகவும், கட்டுமானம் மற்றும் சேவை தொடர்பான பணிகளுக்காக தோட்டங்கள் தொடங்குவதற்கு முன்பே அழைத்துவரப்பட்டனர். மலையகத் தமிழர்கள் ஒரு நூற்றாண்டு காலப்பகுதியாக தேசிய பொருளாதாரத்திற்கு அளித்த பங்களிப்பு தேசத்திற்கு சொந்தமானது என்ற உணர்வு இருந்தபோதிலும் அரசியலமைப்பினால் ஒரு தேசிய இனக்குழுவாக இதுவரையில் அவர்கள் அங்கீகரிக்கப்படவில்லை.
  • ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களின் தற்போதைய தலைமுறை இந்தியாவில் தங்கள் முன்னோர்களின் பரம்பரையை இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இலங்கைத் தமிழர்களிடமிருந்து தங்களைத் தாங்களே வேறுபடுத்திக் கொள்வதற்காக அவசியமில்லாமல் ‘இந்தியர்’ என்ற வார்த்தையுடன் இன்னும் அடையாளம் காணப்படுகிறார்கள் இம்மக்கள். இந்நிலை மாற்றப்பட்டு இவர்களை “மலையகத் தமிழர்கள்” என உத்தியோகப்பூர்வமாக அழைக்குமாறு முன்மொழிகின்றோம். அதனையே இன்றைய தலைமுறையினரும் விரும்புகின்றனர். அவர்கள் தொடர்ந்தும் இந்தியர் என்ற அடையாளத்தினை சுமக்க விரும்பவில்லை என்பதனை பல ஆய்வு முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

சுயாதீன ஆணைக்குழுக்கள்

  • மேற்கூறியவற்றில் சேர்க்க ஒரு புதிய சுதந்திர ஆணைக்குழுவினை நாங்கள் முன்மொழிகிறோம் – சிறுபான்மையினர் மீதான தேசிய ஆணைக்குழு
  • சிறுபான்மையினர் மீதான தேசிய ஆணைக்குழுவானது இந்தியாவில் காணப்படுவதைப் போன்று இன சிறுபான்மையினர் மற்றும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள் தொடர்பான விடயங்களைக் கவனிக்கக்கூடிய வகையில் நிறுவப்படல் வேண்டும். இது சமூகக் குழுக்களின் சமூக-பொருளாதார முன்னேற்றம், அவற்றுக்கு எதிரான பாகுபாடு நடவடிக்கைகள் மற்றும் சட்டங்கள், ஒழுங்குமுறைகள், கொள்கைகள் மற்றும் வெவ்வேறு விளிம்புநிலை குழுக்களில் அவை செயற்படுத்தப்படுவதனூடாக ஏற்படும் தாக்கங்களை எடைபோட்டு பரிந்துரைகளை வழங்கவும் நீதிமன்றங்கள் வழியாக நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவும்.
  • அத்தகைய ஆணைக்குழு மலையகத் தமிழ் சமூகத்தை பாதுகாக்கப் போவது மட்டுமல்லாமல், வேடுவர் சமூகம் உட்பட பல விளிம்பு நிலைக்குட்பட்ட குழுக்களுக்கும் ஒரு பாதுகாப்பாக இருக்கும். ஆணைக்குழுவானது இன பெரும்பான்மை உட்பட அனைத்து சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

மேற்கூறியவற்றைத் தவிர, மலையகத் தமிழரின் தனித்துவமான சூழ்நிலையை கவனத்தில் கொண்டு பின்வருவனவற்றையும் பரிந்துரைக்க விரும்புகிறோம்;

  • ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுக்கான குழு உரிமைகளை அங்கீகரித்தல்.
  • எந்தவொரு சமூகத்தின் பிரதிகூலத்திற்கும் வள ஒதுக்கீடு, வாய்ப்புகள் மற்றும் விளைவுகள் போன்றன மிகவும் பிரதானமானதொன்றாக கருத்திற்கொள்ளப்படுவதனால் நியாயமான பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் உள்ளடக்கப்படல் வேண்டும்.
  • அரசாங்கத்தின் அரசியலமைப்பு கடமைகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஒன்றாகும். மலையகப் பகுதியில் பலவீனமான சூழல் அமைப்பைப் பாதுகாப்பதிலும், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு மீள்குடியேற்றம் மற்றும் பிற உதவிகளை வழங்குவதிலும் அரசாங்கங்களின் பொறுப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  • பாகுபாடு காட்டாமை, சமத்துவத்திற்கான வலுவான ஏற்பாடு மற்றும் மீறல்கள் ஏற்பட்டால் நீதி மற்றும் பிற தீர்வுகளை எளிதில் அணுகுவதற்கான வாய்புகளை ஏற்படுத்தல். நீதித்துறை நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான பொது நலன் நிலைப்பாட்டை அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்க வேண்டும்.

மூலம் - மாற்றம் 18.01.2021

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image