மனித வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை உண்டு பண்ணுவதில் கல்வி மகத்தானது பணியை ஆற்றி வருகின்றது. சகலரும் அறிவு மட்டத்தினை அவரவர் கற்றல் விருத்திக்கேற்ப ஏற்படுத்திக் கொள்வதற்கு துடுப்பாக காணப்படுகின்றது. கல்வியின் தார்ப்பரியம் பற்றி ஒவ்வொருவரும் அறிந்திருக்கு வேண்டிய அதேவேளை கல்விக்கான முக்கியத்துவத்தினையும் அதனை பெற்றுக்கொள்ளும் விதங்கள் அடிப்படையிலும், அவற்றை பயன்படுத்தும் விதத்திலும் வெளிப்படுத்தப்படுகின்றது எனலாம். இதனை அடிப்படையாகக் கொண்டு கல்வியானது சர்வதேசமட்டத்தில் வியாபித்த ஒரு கருப்பொருளாக காணப்படுவதோடு அதற்கான தினமாக ஜனவரி 24 ஆம் திகதி சர்வதேச கல்வித்தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இவ்வாண்டுக்கான தொனிப்பொருள் ' கொவிட் -19 தலைமுறைக்கான கல்வியை மீட்டெடுத்து புத்துயிர் பெறுங்கள்' (‘Recover and Revitalize Education for the COVID-19 Generation’) என்பதாகும்.
ஒவ்வொரு தனிமனிதரும் வாழ்வில் முன்னேற்றமடைவதற்கு ஏதோவொன்றினை கற்பது கட்டாயமாக்கப்படுகின்றான். இதில் கல்வி பலதரப்பட்ட வகைப்பாடுகளை கொண்டு, புத்தகக்கல்வி, தொழிற்கல்வி, அனுபவக்கல்வி ஆன்மீகக் கல்வி, சர்வதேச ரீதியான கடப்பாடுகளை பின்பற்றுதல் என்பன உள்ளடங்குகின்றன. குறிப்பாக கல்வியின் உன்னதத்தன்மையினை விளங்கிக்கொள்ளும் வகையில் சர்வதேச மட்டத்தில் வியாபகப்படுத்துவதற்கு அதற்கான தினத்தினை யுனெஸ்கோ அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ளது.
கல்வியின் முக்கியத்துவம்
கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளையோர்களை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம். அறிவு, திறமை போன்றவற்றையும் தந்து ஒரு புதிய சமூகத்தை உருவாக்கி பண்பாடு, நடத்தை, போன்றவற்றையும் தந்து மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள மனிதனாக மாற்றம் அடைய செய்கிறது. இது சமுதாய நுட்பத் தகைமை ஏற்படுத்துவதையும் கல்வி கற்றலையும், கற்பித்தலையும் குறிக்கும். இது திறன்கள், தொழில்கள், உயர்தொழில்கள் என்பவற்றோடு, மனம், நெறிமுறை, அழகியல் என்பவை சார்ந்த வளர்ச்சியையும் சமுதாய வளர்ச்சியில் பங்கு பெறச்செய்யும் அமைப்பு ஆகும்.
கற்றுக் கொடுக்கப்படுகின்ற கல்வி எதற்காக, கல்வியின் நோக்கம் என்ன என்பன பற்றிய கருத்துக்கள் பலவாக இருக்கின்றன. அறிவாற்றல், மன விடுதலை, பண்பாட்டு அடையாளம், வேலை வாய்ப்பு, வாழ்க்கையைச் சரியாக அமைத்துக் கொள்வது போன்றவை கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என ஒரு சாரார் கருதுகின்றனர். மற்றும் சிலர், கல்வியின் நோக்கம் ஒருவரை சமுதாயத்தில் நல்ல குடிமகனாக ஆக்க வேண்டும்; அவர் சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், பண்பாட்டு மேம்பாட்டுக்கும் பாடுபட உதவ வேண்டும் என்றும் கருதுகின்றனர்.
சிறந்த தொடர்பு என்பது கல்வியில் மற்றொரு பங்கு. கல்வி ஒரு நபரின் பேச்சை மேம்படுத்துகிறது மற்றும் செம்மைப்படுத்துகிறது. தனிநபர்கள் கல்வியுடன் தொடர்பு கொள்வதற்கான பிற வழிகளையும் மேம்படுத்துகின்றனர். மேலும், கல்வி ஒரு நபரை தொழில்நுட்பத்தின் சிறந்த பயனராக ஆக்குகிறது. கல்வியின் உதவியுடன் மக்கள் மிகவும் முதிர்ச்சியடையவதோடு, அவை படித்தவர்களின் வாழ்க்கையில் நுழைகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, கல்வி தனிநபர்களுக்கு ஒழுக்கத்தின் மதிப்பைக் கற்பிக்கிறது. படித்தவர்களும் நேரத்தின் மதிப்பை அதிகம் உணர்கிறார்கள். இதனால் படித்தவர்களுக்கு நேரம் என்பது பணத்திற்கு சமம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது.
குறிப்பாக, கல்வி எனும்போது பாடசாலை, மாணவர்கள், கற்றல் அடைவு மட்டம் என்ற விடயமானது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களாகும். இவை தனிமனிதர் அடிப்படையிலும் நாடுகள் அடிப்படையிலும் மாறுபட்டு காணப்படுகின்றது. குறிப்பாக இலங்கையை பொறுத்தவரை 1948ஆம் ஆண்டு தொடங்கி இலங்கையில் இலவசக் கல்வி வழங்கப்பட்டு இன்றுவரை அதன் பலனை பலர் அனுபவித்து வருகின்றனர். பாடசாலை தொடங்கி பல்கலைக்கழகம் வரை சகல கல்வி நடவடிக்கைகளும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றமை அவர்கள் அதனை உணர்ந்து சிறப்பான விளைவுகளை தருகின்றனரா என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
கல்வி தொடர்பான புதிய மாற்றங்களை உள்வாங்குவதில் தயக்கம்
இலங்கையை பொறுத்தவரையில் கல்வியின் அவசியத்தை உணர வேண்டிய கட்டாயத்தில் தற்காலம் நகர்ந்து செல்கின்றது. குறிப்பாக பல்வேறு ஆட்சிமாற்றங்கள், கல்விக் கொள்கைகளின் வருகை, தொழில்நுட்பவியல் மாற்றம் என்பன இதில் செல்வாக்கு செலுத்தி வருகின்றன. மாணவர்கள் இவ்வாறான விடயங்களை உள்வாங்குவதில் பின்னடைவை எதிர்கொள்கின்றமை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையை பொறுத்தவரை அபிவிருத்தி அடைந்துவரும் நாடாக இருக்கின்றமையால் கல்வி தொடர்பான புதிய மாற்றங்களை உள்வாங்குவதில் தயக்கம் காட்டுகின்றது. குறிப்பாக, புதிய ஆட்சி மாற்றங்களின் போது பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்துகின்றபோதும் அதனை முழுமைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதோடு, இடைநடுவே கைவிடப்படுகின்ற நிலையும் ஏற்படுகின்றன. (உ-ம்) ஆயிரம் பாடசாலை திட்டம், அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை, சுரக்ஷா திட்டம் என்பன இவற்றில் சிலவாகும்.
சர்வதேச மட்டத்திலான புதிய விடயங்களை உள்வாங்குவதற்கு இலங்கை முன்வரவேண்டும். இதில் தனியார் மற்றும் அரச நிறுவனங்கள் பங்களிப்பினை வழங்குதல் வேண்டும். எனினும் தனியார் கல்விக்கு ஊக்குவிப்பு வழங்காமல் இலவசக் கல்விக்கு ஊக்குவிப்புக்களை வழங்குவது அவசியமானதாக காணப்படுகின்றது. அண்மைக் காலங்களில் கொரோனாவினால் நாட்டின் கல்வி நிலைமைகள் பாரிய பின்னடைவினை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விநிலை சார்ந்த தரப்புக்கள் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். அதாவது 2020ஆம் ஆண்டில் மாத்திரம் 30,000 பாடசாலை மாணவர்கள் இடைவிலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா பெருந்தொற்றும் - இணையவழி கற்றலும்
கல்வி என்பது மாணவர் சமுதாயத்திற்கும் ஒட்டுமொத்த உலக சமூகத்திற்கும் இன்றியமையாத ஒரு விடயமாகும். மாணவர்கள் காலம் காலமாக தமது கல்வி நடவடிக்கைகளை நேரடியானதொரு கற்றல் வழிமுறையின் ஊடாகவே மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த வழிமுறையானது மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சரியான புரிதலையும் விளக்கத்தையும் வழங்கியிருந்தது. எனினும் தற்போதைய சூழலில் கொவிட்-19 வைரஸ் தாக்கத்திலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு கல்வி நிலையங்கள் மூடப்பட்டு பாடசாலை, பல்கலைக்கழகங்கள் தமது கல்வி நடவடிக்கைகளை ஒன்லைன் (ழுடெiநெ) இணைய வழி மூலமாக முன்னெடுத்து வருகின்றன.
மேலைத்தேய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி முறையானது இன்று இலங்கையிலும் கால் பதித்துள்ளது. இதனுடைய பிரதான நோக்கமாக அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மாணவர்களின் குறித்த ஆண்டு அல்லது பருவத்திற்கான பாடத் திட்டங்களை பூர்த்தி செய்து அவர்களின் கல்வி நிலையில் பாதிப்பு ஏற்படாமல் தடுத்து சீரான கல்வியினை வழங்குவதாகும். இலங்கையைப் பொருத்தமட்டில் பல்கலைக்கழகங்கள் உயர்கல்வி நிறுவனங்கள் இக்கல்வி முறையை துரிதமாக முன்னெடுத்து வருகின்றன.
மாணவ சமுதாயத்திற்கு பாரிய சவால்
ஏனைய நாடுகளில் மாணவர்களுக்கு இக்கல்வி முறையானது வெற்றி அளித்திருந்தாலும் இலங்கையைப் பொருத்தமட்டில் மாணவ சமுதாயத்திற்கு பாரிய சவாலாகவே இணையக் கல்வி பார்க்கப்படுகின்றது. இதுவரை காலமும் இலங்கை மாணவர்கள் இக்கல்வி முறை தொடர்பான அறிவினையோ, தேவைப்பாட்டினையோ கொண்டிருக்கவில்லை திடீரென அறிமுகம் செய்யப்பட்ட கல்வி முறையால் அதனை எவ்வாறு பெற்றுக்கொள்வது, கலந்து கொள்வது, தொழில்நுட்ப சாதனங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் இன்றுவரை மாணவர்கள் பல சிக்கல்களுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.
பாடசாலை கல்வியை நம்பி இருந்த மாணவர் சமூகம் இன்று தனியார் வகுப்புக்களையும் இணைய வழிக்கல்வியின் மோகத்தாலும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். இதில் பொருளாதார பிரச்சினைகள், கல்வியை இடைநடுவில் கைவிடல், முறையற்ற பழக்க வழக்கங்கள், மாணவர்களின் ஒழுக்க விழுமியங்கள் பாதிக்கப்படல் போன்றன இடம்பெறுகின்றன. கல்வியானது அறிவு, திறன், மனப்பாங்கு, ஆளுமை அடிப்படையில் விருத்தியடையச் செய்யக்கூடிய ஒன்றாக இருக்கின்ற அதேவேளை அதனை முறையற்ற விதத்தில் அணுகுவது பல பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகின்றது.
எனவே உலக நாடுகளை பொறுத்தமட்டில் கல்வியானது சகலவற்றுக்கும் அடிப்படையாக காணப்படுகின்றது. வெறுமனே நூல் கல்விக்கு மாத்திரம் முக்கியத்துவமளிக்காமல் செயன்முறைக்கல்வி, தொழில்நுட்ப கல்வி என்பனவற்றிற்கு சிறப்பான இடம் அளிக்கப்படுகின்றது. ஜப்பான், சீனா, அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தொழிற்கல்வி முறைக்கு கூடிய கவனமளிக்கப்படுகின்றது.
ஒரு நாட்டின் அபிவிருத்தி சிறந்த கல்வி முறையில் தங்கியுள்ளது
மேலும், பின்லாந்து உலகில் சிறந்த கல்வி முறையில் இருப்பதாகவும் கல்வித்துறையில் உலகில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ள நாடாகவும் பெயரிடப்பட்டுள்ளது. 'பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு' (ழுஊநுனு) மாணவர்களின் கல்வித்திறன் குறித்து ஆய்வினை மேற்கொண்டபோது பெறப்பட்ட முடிவாக பின்லாந்து நாடு கல்வியில் முதலிடத்தில் காணப்படுகின்றது. இதில் உலகின் முன்னணி நாடுகள் பின் வரிசையில் காணப்படுகின்றது. உலகில் மிகப் பெரிய பொருளாதார, இராணுவ வல்லரசான ஐக்கிய அமெரிக்காகூட பின்லாந்தின் கல்வி முறையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றது.
ஒரு நாட்டின் அபிவிருத்தி அந்நாட்டின் சிறந்த கல்வி முறையில் காணப்படுகின்றது என பின்லாந்து உலகிற்கு பறைசாற்றுகின்றது. எனவே உலக நாடுகளின் கல்வித்தரங்கள் நாளுக்கு நாள் மாற்றம் பெற்று விருத்தியடைந்து வருகின்றது. அதனை அடிப்படையாகக் கொண்டு புதிய கல்வி திட்டங்கள் இலங்கையிலும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கல்வியினால் ஒரு நாட்டின் பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்படுகின்றது. அது போலவே, பொருளாதார நிலையும் கல்வியின் தரத்தைக் கட்டுப்படுத்துகின்றது. அனைவருக்கும் தரமான கல்வி அளித்தால், அது நல்ல பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் என்று கூறப்படுகின்றது. ஏழை நாடுகள் கல்வியின் மீது கவனம் செலுத்தினால், பொருளாதாரத்தில் விரைவில் மேம்பாடு அடையலாம்; எவ்வாறு எனில், முன்னேறிய நாடுகளில் கிடைக்கும் கல்வி அறிவு, தொழில் நுட்பங்கள் ஆகியனவற்றை இறக்குமதி செய்து, முன்னேற்றுத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், இது எளிதான காரியம் அல்ல என்பது பிறகு தெரிய வந்தது. நல்ல கல்விக்கும், தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்துவதற்கும் நல்ல திறமையுள்ள மனித வளமும், அதை ஊக்குவிக்கும் பொருளாதார நிறுவனங்களும் வேண்டும். இவற்றின் ஊடாக பாராபட்சமற்ற பணிகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழைய கல்வி முறைகளை மாற்றி, புதுக்கல்வி கொள்கை
தொழில்நுட்பத்திற்கு ஏற்ப உலகம் மிக வேகமாக மாறி வருகின்றது. அதனால், நம் பழைய அறிவு புதிய காலத்திற்குப் பயனற்றதாகப் போய் விடுகின்றது. பல்வேறு நாடுகள் பழைய கல்வி முறைகளை மாற்றி, புதுக்கல்வி கொள்கைகளை வகுத்து கொள்கின்றன. மேலும், கல்வி என்பது இளைஞர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் ஆனது என்ற கருத்து வலுப்பெற்று வருகின்றது. இதனூடாக கல்வியின் உன்னத்தன்மையினை உணர்ந்து சிறந்த சமூகத்தினை கட்டியெழுப்புவதற்கு அனைத்து தரப்பினரும் வாழ்நாள் நீடித்த வகையில் கல்வியினை தொடர்ந்து முன்னெடுப்பது தனிமனித ரீதியிலும், சமூகம் ரீதியிலும் பல புத்தாக்கங்களை கொண்டுவருவதோடு சிறந்த அபிவிருத்தியை பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பாக அமைகின்றது.
- சி.அருள்நேசன்
கல்வியல் சிறப்பு கற்கை
கிழக்குப் பல்கலைக்கழகம்