ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பின் பின்னர் தாம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியின் கிலண்டில் தோட்ட லங்கா பிரிவு தொழிலாளர்கள் நேற்றுகாலை (16) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்
மிக கஸ்டப்பிரதேசத்தில் போக்குவரத்து வசதிகள் அற்ற இந்த தோட்டத்தில் 120 பெண் மற்றும் 50 ஆண் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்கள் 15.06.2021 முதல் பணிபகிஸ்கரிப்பில் உள்ளதோடு 16.06.2021 அன்று லங்கா தோட்டத்தின் பெரட்டுக்களத்தின் முன்றலில் ஒரு மணித்தியால அமைதியான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை அனைத்து தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து முன்னெடுத்தனர்.
இதுவரை தாம் ஒரு நாள் சம்பளத்திற்கு (ரூபா 750.00) 16 கிலோகிராம் தேயிலை பறித்ததாகவும் தற்போது 20 கிலோ தேயிலை கொழுந்து பறித்தாலே ரூபா 1000 சம்பளம் கிடைக்கும் என்று தோட்ட முகாமை கூறியுள்ளதால் தாம் பெரும் சிக்கலுக்குள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அப்படி 20 கிலோ கொழுந்து பறிக்க முடியாதவர்களுக்கு ஒரு கிலோவிற்கு ரூபா 47.50 சதம் என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகின்றதாக தெரிவிக்கின்றனர்.
மாதம் 20 நாள் வேலை வழங்கப்பட்ட தமக்கு ரூபா 17100 தான் மொத்த சம்பளமாக உள்ளதோடு மிகுதி சம்பளமாக ரூபா 7000 தான் கிடைக்கப்பெறுகின்றது. அப்படியானால் 20 நாள் வேலைக்கு கிடைக்கவேண்டிய ரூபா 20000 ற்கு என்னவாயிற்கு என்று கேள்வி எழுப்புகின்றனர்.
தோட்டத்தில் பணிப்புரியும் பெண்கள் திருமணத்தின் பின்னர் குழந்தை பிரசவித்து பிரசவ விடுமுறை காலத்தின் பின்னர் தொழிலுக்கு திரும்பும் போது. அவருக்கு பழைய ஊழியர் சேம இலாப நிதி இலக்கத்திற்கு பதிலாக புதிய இலக்கம் வழங்கப்படுவதாகவும் தமது பழைய இலக்கம் செயல் இழந்துள்ளதாகவும் முகாமை தெரிவிப்பதாக தெரிவிக்கின்றனர்.
ஆண் தொழிலாளர்கள் எட்டு மணித்தியாலம் பணியாற்ற வேண்டும் என்றும் முகாமை அழுத்தங்கள் கொடுப்பதாகவும், எட்டு மணித்தியாலயத்திற்கு குறைவாக பணிபுரியும் ஆண் தொழிலாளர்களுக்கு மணித்தியாலத்திற்கு ரூபா 120 படி சம்பளம் தரப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் ஆண்களுக்க கைகாசு வேலை என்ற அடிப்படையில் ரூபா 1000ற்கு பதிலாக ரூபா 600ற்கு வேலை பெற்று தரப்படுவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு மணித்தியால அமைதியான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.