சில நூறுகள் மட்டுமே மாத சம்பளம் - தவிக்கும் பொகவந்தலாவ தோட்ட மக்கள்
பொகவந்தலாவை பெருந்தோட்ட கம்பெனிக்கு சொந்தமான பொகவந்தலாவை தோட்டத்தில் தொழிலாளர்கள் தமது சம்பளம் தொடர்பில் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
ரூபா 1000 சம்பளம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த தோட்ட நிர்வாகத்தினால் நாள் ஒன்றில் 18 கிலோ கிராம் தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும் என தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது இதனை மறுத்த பொகவந்தலாவை தோட்டத்தின் நான்கு பிரிவு தொழிலார்களும் தாம் இதுவரை பறித்த 15 கிலோகிராம் கொழுந்தையே பறிக்க முடியும் என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில் தினமும் 18 கிலோகிராம் கொழுந்து பறிக்க வேண்டும் அவ்வாறு இல்லாது குறைவாக கொழுந்து பறிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் மாத்திரமே தொழில் வழங்க முடியும் என்றும் தினமும் 18 கிலோவுக்கு அதிக கொழுந்து பறித்தால் வாரத்தில் 6 நாட்கள் தொழில் வழங்க முடியும் என்றும் தோட்ட முகாமை அறிவித்துள்ளது.
இந்நிலையில் தொழிலாளர்கள்; 15 கிலோ தேயிலை கொழுந்து பறித்ததால் அவர்களுக்கு ஏப்ரல் மாதம் 12 நாட்கள் மாத்திரமே தொழில் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 9 நாட்கள் மாத்திரமே தொழில் வழங்கப்பட்டள்ளது. ரூபா 750 சம்பளத்தில் 15 கிலோகிராம் கொழுந்து பறித்த காலம் முதல் கடந்த 2021 மார்ச் மாதம் வரை தமக்கு 20 நாட்கள் தொடக்கம் 28 நாட்கள் வரை தொழில் வழங்கப்பட்டதால் தமக்கு மாதாந்தம் சுமார் ரூபா 15000 இறுதி சம்பளம் கிடைத்ததாகவும் எனினும் கடந்த 2021 ஏப்ரல் மாதம் 12 நாடகள் தொழில் வழங்கப்பட்டதால் மாத இறுதியில் சம்பளமாக ரூபா 1000 இற்கும் குறைவான தொகையே கிடைக்கப்பெற்றதாகவும் தெரிவித்தனர். மேலும் இம்மாதம் 10 திகதி தாம் பெறப் போகும் மே மாத சம்பளமும் ரூபா 500 பெறுவதே கேள்வி குறியாக உள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொகவந்தலாவை தோட்டத்தில் நான்கு பிள்ளைகளை கொண்ட குடும்பமொன்றில் கணவன், மனைவி இருவருக்கும் ஏப்ரல் மாத சம்பளமாக தலா 200 ரூபா மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. அந்த குடும்பத்தில் இரு குழந்தைகள் விசேட தேவைக்குரியவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த சம்பளத்தை கொண்டு அன்றாட உணவையே சமாளிக்க முடியாத நிலையில் பிள்ளைகளின் மருத்துவ செலவை எவ்வாறு சமாளிப்பது என்று அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மே மாதத்தில் 9 நாட்கள் மாத்திரமே தோட்டத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் 10ம் திகதி வழங்கப்படும் மே மாத சம்பளம் சில நூறுகள் மாத்திரமே சம்பளமாக கிடைக்கும் என்றும் அவர்கள் கவலை வௌியிட்டுள்ளனர். பொகவந்தலாவ தோட்டதின் 4 பிரிவுத் தொழிலாளர்களின் குடும்பங்களும் ஆயிரத்திற்கு குறைவான சம்பளத்தையே பெற்றுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவதில் தாம் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்கள் ஆக்கபூர்வமான விடயங்களை முன்னெடுக்க காலம் தாழ்த்துவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முடக்கப்படடுள்ளது. எனவே தொழில்நாடி வௌியில் செல்ல முடியாதுள்ளது. எனவே தம் பிரச்சினை குறித்து கவனம் செலுத்தி நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.