வீட்டுப் பணியாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு அவசியம்!!

வீட்டுப் பணியாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு அவசியம்!!

வீட்டுப்பணிக்காக செல்லும் பல பெண்களை நாம் அன்றாட வாழ்வில் சந்தித்துள்ளோம். ஏன் எமது வீடுகளிலும் பணிக்காக வருகின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் எமது குடும்பத்திலேயே வீட்டுப் பணிக்கு செல்பவர்கள் இருக்கலாம். வீட்டுப்பணிக்கு செல்லும் பெண்களுக்கு தொழில்பாதுகாப்பு என்பது மிகவும் குறைவு. அவ்வாறு வீட்டுப்பணியில் ஈடுபடும் சிவமணி தனது அனுபவங்களை எம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

எனது பெயர் சிவமணி
நான் ஒரு வீட்டுப் பணிப்பெண்
கடந்த ந்து வருடங்களாக வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து வருகின்றேன்.
புல வீடுகளில் வேலை செய்த அனுபவம் எனக்கு இருக்கிறது. அத்தோடு முறைசாரா துறையினருக்கும் குறிப்பாக வீட்டு வேலை தொழிலாளர்களுக்காகவும் ப்ரொடெக்ட் தொழிற்கங்கத்தில் நானும் ஒரு அங்கத்தவராவேன்.
ப்ரொடெக்ட் தொழிற்கங்கமானது இலங்கையில் வீட்டுப் பணிப்பெண்கள் எதிர்நோக்கும் பிரட்சினைகள் தொடர்பாகவும் அவற்றின் தீர்மானங்களை உலகில் மற்ற நாடுகளில் நடைமுறையிலுள்ள சாசனங்களின் அடிப்படையில் நமக்கும் பெற்றுத்தர போராடுகின்றது.
இந்த சங்கத்தின் மூலம் சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வாக்குறுதிகளையும் நாம் பெற்றுள்ளோம். இத் தொழிற்கங்கமானது கொழும்பு ஹட்டன் லக்ஷபான பகுதிகளில் நன்கு நிறுவப்பட்டுள்ளது.
வீட்டுப் வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர்களுக்கு என்ன பிரட்சினை என்று?
நாங்கள் எதிர்நோக்கும் பிரட்சினைகளை கீழே விவரிக்கின்றேன். எங்களுக்கு உள்ள முக்கிய பிரட்சினை
இந்த வேலையை உள்நாட்டில் வேலை செய்யும் போது இந்த தொழிலை ஒரு தொழிலாக அங்கீகரிக்காததுதான். அத்தோடு கூட வீட்டு வேலைக்குப் போகின்றவர்களது விபரங்களோ அல்லது அவர்களை வேலைக்கு அமர்த்துபவர்கள் பற்றிய தகவல்களோ எங்கேயும் இல்லை.

தொழில் நடவடிக்கை சம்பந்தமான காரியாலயங்களிளோ ஆவணப்படுத்தப்படுவதில்லை. இது இத் தொழிலுக்கான ஒரு பாதுகாப்பற்ற தன்மையை தருகின்றது.
குறிப்பாக வீடுகளில் தங்கி வேலை செய்வோரை பெரிதும். பாதிக்கின்றது. எம்மை எந்த இடத்திலும் ஆவணப்படுத்தாததால் மற்றைய தொழிலைப்போல ஒப்பந்தம் வழங்கப்படாததால் நிலையான சம்பளம் பற்றியோ அல்லது வேலை நேரம் பற்றியோ E.P.F, E.T.F போன்ற பாதுகாப்பு நிதியங்கள் மேலதிக வேலைக்கான கொடுப்பனவுகள் எதுவும் எமக்கு கிடைப்பதில்லை.
எமக்கு அதைப்பற்றி கேட்கும் உரிமையும் இல்லை.
எனதறிவுக்கு எட்டியவரை C189 என்பது இவ்வாறான சட்டங்களை அமுல்படுத்துவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு சாசனமாகவே கருதுகிறேன். வீட்டுப் வேலை தொழிலாளர்களாக செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரட்சினைகளில் ஒன்று பாலியல் ரீதியான பிர்சினை. இதில் பெண்களாக இருப்பதாலும் வேலைக்காரி என்ற முத்திரை குத்தப்;பட்டிருப்பதனாலும் இந்தப் பிரட்சினைக்கு மிக மோசமான நிலையில் முகங்கொடுக்கவேண்டியுள்ளது.

C 190 என்கின்ற சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதே தொழில் செய்யும் இடத்தில் ஏற்படுகின்ற வன்முறைகளையும் வன்கொடுமைகளையும் தடுத்து நிறுத்தவே. ஆனால் வீட்டு வேலை தொழிலாளியாக போகின்றவரிகளுக்கு இச்சட்டம் இன்னும் கைக்கெட்டாத் தூரத்திலேயே இருக்கின்றது. நாம் வேலை செய்யும் இடத்தை நம்மைத் தவிர யாரும் அறியாத ஒரே இடத்தில் தனியாக வேலை செய்ய வேண்டிய நிலை இருக்கின்றது.

அவ்வீட்டில் ஒருவர் மூலம் எமக்கு ஏற்படுகின்ற பாலியல் பிரட்சினைகள் யாருக்கும் தெரியாது. ஆனால் பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்திற்கோ நீதிமன்றத்திற்கோ செல்ல வேண்டிய நிலையில் அங்கு சாட்சிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இதனால் பாதிக்கப்பட்டவர்களே பல சமயங்களில் குற்றவாளியாக்கப்படுகின்றனர்.

ஒரு நிறுவனத்திலோ அல்லது காரியாலயத்திலோ ஒருவருக்கு அநீதி இழைக்கப்படும் போது அல்லது கொடுமைபாதிக்கப்பட்ட படுத்தப்படும்போது நபர் காவல் நிலையத்திற்கு சென்றதும் காவல் துறையினர் அந்த நபரை விசாரிப்பதற்கோ அந்த இடத்தை சோதனையிடவோ தடை இல்லை. ஆனால் ஒருவருடைய வீட்டில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றால் அவரின் வீடாக இருப்பதாலும் அது அவருடைய தனிப்பட்ட இடமாக இருப்பதாலும் விசாரணை மட்டுப்படுத்தப்பட்டே இருக்கும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருப்பாலான சந்தர்ப்பங்களில் நீதி கிடைப்பதில்லை. இதனால் பல பெண்கள் மௌனமாகவே இருந்து விடுகின்றனர். இதனால் C189, C190 சாசனங்களை எம்மைப்போன்ற வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு சட்டமாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றேன்.

பெறுந்தொற்றான கொரோனா வீட்டு வேலை தொழிலாளர்களையும் அதிகமாகப் பாதித்தது. அன்றாடம் வீட்டு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் நாள் சம்பளத்திற்கு அதுவும் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள். இதனால் சேமிப்பு என்ற ஒன்று இல்லை. சேமிப்பதற்கான ஊதியமும் கிடைப்பதில்லை.இதனால் அன்றாட வாழ்க்கை செலவிற்கே திண்டாட வேண்டிய நிலை.

இந்தத் தொழிலில் ஒரு ஊதிய சேமலாபத் திட்டம் இல்லாததால் ஓய்வூதியத் திட்டம் இல்லாததால் தன் சிரமத்தை எல்லாம் யாரோ ஒருவரது வீட்டில் கொடுத்த பெண் தனது கடைசி காலத்தையும் கண்ணீர் பெருமூச்சுடனேயே கழிக்க வேண்டியுள்ளது. கடைசியாக நான் கூறிக்கொள்ள விரும்புவது வீட்டு வேலையையும் ஒரு சிறந்த தொழிலாக ஏற்றக்கொள்ளுங்கள்.
நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்கள் வீட்டு வேலை தொழிலாளர்களுக்கும் ஏற்றதாகவும் அவர்களும் பாதுகாக்கப்டும்படியாக இருத்தல் வேண்டும். இச் சட்டங்கங்கள் வீட்டு வேலை தொழிலாளர்களுக்கான நல்ல வேலை நிலைமைகளைக் கொண்டதாகவும் அவர்களுக்கான இட ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும். ஏனைய தொழில்களைப் போல தொழில் சட்டங்களுக்கு உட்படுத்தப்பட்ட பாதுகாப்பையும் சுய கௌரவத்தையும் வழங்கக்கூடிய தொழிலாக மாற்றுங்கள் என்பதாகும்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image