UAE: வெளிநாட்டுப் பணியாளர்களால் ஆரம்ப சம்பளத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளிநாடுகளிலிருந்து அதிகளவிலான தொழில் வல்லுனர்கள் வருகை தருவதால், ஒரு நிறுவனத்தில் பணியமரக்கூடிய ஊழியர்களின் ஆரம்ப சம்பளம் குறைவதாகவும், இது அமீரகத்தை முதலாளிகளின் சந்தையாக மாற்றுவதுடன் திறமை நிறைந்த ஊழியர்களின் சந்தையாக உருவாக்குவதாகவும் சமீபத்திய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளன.
அதாவது நாட்டில் தொழில்முறை சேவைகளின் வேலைகளுக்கான சராசரி ஆரம்ப சம்பளம் ஆண்டுக்கு ஆண்டு 0.7 சதவீதம் குறைந்துள்ளதாகவும், இதனால் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் அடுத்த ஆண்டு புதிய பணியை தேட திட்டமிட்டுள்ளதாகவும் ஆட்சேர்ப்பு ஆலோசனை நிறுவனம் ஒன்று அமீரகத்தில் நடத்திய ஆய்வின் முடிவில் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சேர்ப்பு நிறுவனமான ராபர்ட் ஹாஃப்பின் மத்திய கிழக்கிற்கான இயக்குனர் கரேத் எல் மெட்டூரி என்பவர் கருத்து தெரிவிக்கையில், ஐக்கிய அரபு அமீரகம் நிதி, கணக்கியல் மற்றும் மனித வளத் துறைகளில் அதிகளவிலான திறமையான வெளிநாட்டவர்களின் வருகையை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு நிறுவனம் விளம்பரப்படுத்தும் பதவிக்கு 2,000 விண்ணப்பதாரர்கள் தற்போது விண்ணப்பிப்பதாகவும், இது ஒரு பதவிக்கு வெளிநாட்டவர்கள் மத்தியில் கடும் போட்டியை உண்டாக்குவதால் ஆரம்ப சம்பளம் என்பது முந்தைய ஆண்டுகளை விடவும் தற்போது கணிசமாக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, நிதி மற்றும் கணக்கியல் பணிகளுக்கான ஆரம்ப சம்பளம் சராசரியாக 2.1 சதவீதமும், சில கார்ப்பரேட் கணக்கியல் பணிகளுக்கு 23 சதவீதமும் தற்போது குறைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், அக்கவுண்டிங் (கணக்கியல்) தெரிந்தவர்களுக்கான தேவை குறிப்பாக நிதி திட்டமிடல் மற்றும் வரி அனுபவம் உள்ளவர்களுக்கான தேவை மட்டும் இன்னும் இருப்பதாகக் கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள்தொகை அபரிமிதமாக வளர்ந்து வருவதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக அபுதாபி மற்றும் துபாய் போன்ற மிகப்பெரிய எமிரேட்டுகளில், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் அதிகளவில் வருவதால், எப்போதும் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பு சந்தையில் போட்டித்தன்மை உயர்ந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
சமீபத்திய கணக்கெடுப்பின்படி, துபாயின் மக்கள்தொகை நவம்பர் 4, 2024ன் படி, 3.798 மில்லியனாக உள்ளது. அதுவும், 2024 ம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் மட்டும் மக்கள்தொகை 140,000 என அதிகரித்துள்ளது. அதுவே கடந்த 2023ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் துபாயின் மக்கள் தொகை 100,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று அபுதாபியிலும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையானது குறிப்பிட்ட சில ஆண்டுகளில் அதிகளவில் அதிகரித்துள்ளது. அபுதாபி மக்கள்தொகை கணக்கெடுப்பு 2023 இன் படி, அபுதாபியின் மக்கள்தொகை 2023 இல் 3.789 மில்லியனை எட்டியுள்ளது. இது 2011 ஆம் ஆண்டில் இருந்த மக்கள்தொகையை விடவும் 83 சதவீதம் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒட்டு மொத்த அமீரகத்திலும் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில், நவம்பர் 4, 2024 நிலவரப்படி நாட்டின் மொத்த மக்கள்தொகை 11.135 மில்லியனை எட்டியதும் தெரியவந்துள்ளது. இது 2023 இல் 10.642 மில்லியனாகவும் 2022 இல் 10.242 மில்லியனாகவும் இருந்தது. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் அதிகளவிலான வெளிநாட்டவர்களின் வருகையால் வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் போட்டி, ஆரம்ப சம்பளம் குறைய அடிப்படைக் காரணமாக அமைவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மூலம் – கலீஜ் தமிழ்