UAE: நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்தாலும் பொதுமன்னிப்பு பெறலாம்!

UAE: நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்தாலும் பொதுமன்னிப்பு பெறலாம்!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கான பொது மன்னிப்பு கடந்த செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த பொதுமன்னிப்பானது டிசம்பர் மாதம் வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை பயன்படுத்தி பல வெளிநாட்டவர்கள் தங்களின் விசா நிலையை சரிசெய்து வரும் நிலையில் விசா காலாவதியாகி நீதிமன்ற வழக்குகளை வைத்திருக்கும் நபர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம் என கூறப்பட்டுள்ளது.

அமீரகத்தில் இருக்கும் சமூக சேவையாளர்களும், குடிவரவுத்துறை வல்லுநர்களும் விசா காலாவதியான பிறகும் அதிக காலம் தங்கியிருப்பவர்கள் அவர்களின் நீதிமன்ற வழக்குகளைத் தீர்ப்பதற்கு முன், தங்களுடைய விசா நிலையை முறைப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நபர்களில் பலருக்கும் தீர்க்கப்படாத சட்ட விவகாரங்கள் இருந்தபோதிலும், அமீரக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட விசா பொதுமன்னிப்பு திட்டத்திலிருந்து இன்னும் பயனடைய முடியும் என்பது தெரியாமல் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, அமீரகத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் பலரும், அவர்களுக்கு நீதிமன்றங்களில் இருக்கும் தீர்க்கப்படாத வழக்குகள் காரணமாக விசா பொது மன்னிப்பு திட்டத்திற்கு தகுதியற்றவர்கள் என்று தவறாக எண்ணி பொதுமன்னிப்புக்கு விண்ணப்பிப்பதைத் தாமதப்படுத்தி வருவதாக சமூக சேவகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.'

இது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு என்பதால், முதலில் விசா நிலையை முறைபடுத்தி சட்டப்பூர்வ குடியிருப்பாளராக மாறுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், பின்னர் நீதிமன்ற வழக்குகளைக் கையாளலாம் என்றும் குடிவரவு வல்லுநர்கள்அறிவுறுத்துகின்றனர்.

இன்னும் பலர் தங்கள் நிலையை முறைப்படுத்தாமல் இருப்பதாகவும், மற்றவர்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்கள் இல்லாததால் நிலையை மாற்ற முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பொது மன்னிப்பு நீடிப்பு

இமிகிரேஷன் (குடிவரவு) அமைப்பில் கைரேகை பதிவுகள் இல்லாததால், குறிப்பாக விசிட் விசாவில் நுழைந்தவர்களுக்கு, பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ஆரம்ப நாட்களில் சிலர் தாமதத்தை அனுபவித்ததாகவும் இமிகிரேஷன் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக, கணினியில் கைரேகைகள் சேமிக்கப்படாத சுற்றுலாவாசிகள் தங்கள் நிலையை முறைப்படுத்த அல் அவிரில் உள்ள GDRFA
அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்ததாக அவர் கூறுகின்றனர்.

துபாய் ஏர்போர்ட் ஃப்ரீசோனில் உள்ள அரசாங்க பரிவர்த்தனை மையமான அல் ஹிஜ்ரா பிசினஸ்மென் சர்வீசஸின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், கடந்த வாரத்தில் பொது மன்னிப்புக் காலம் முடிவடைய உள்ளதாக அவர்கள் குறிப்பிடத்தக்க அவசரத்தைக் கண்டாலும், பொது மன்னிப்பு திட்டத்தின் நீடிப்பு எதிர்பார்க்கப்பட்டது என்றும், ஒவ்வொருவரும் சரியான வழிகளில் தாய்நாட்டிற்குத் திரும்பிச் செல்வதை உறுதி செய்வதற்காக, மக்களுக்கு முடிந்தவரை அதிக நேரத்தை வழங்குவது அரசாங்கத்தின் "ஒரு முறை" என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமூக சேவகர் ஒருவர் ஆவணங்கள் காணாமல் போனதால் தங்கள் நிலையை முறைப்படுத்துவதில் சவால்களை எதிர்கொள்ளும் இரண்டு நபர்களின் கதைகளை விவரித்த போது, காலாவதியான பாஸ்போர்ட் வைத்திருந்த வணிக உரிமையாளர் ஒருவர், விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. அவரின் பாஸ்போர்ட் புதுப்பித்தல் செயல்முறை நீண்ட நேரம் எடுத்ததால், அவர் சட்டவிரோதமாக தங்கியிருப்பவராக மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று கூறினார்.

மற்றொரு வழக்கில், அபுதாபியில் பணிபுரிந்த பெண்ணின் விசா வழங்கப்பட்டது, ஆனால் அவரது பாஸ்போர்ட்டில் முத்திரையிடப்படவில்லை, ஏனெனில் விசா வழங்கிய பிறகு பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டார். அவர் சமீபத்தில் ஒரு பயண ஆவணத்தில் தனது சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டியிருந்தது, இப்போது புதிய பாஸ்போர்ட்டுடன் திரும்புகிறார் என்று சமூக சேவகர்
குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் இருந்து, பாஸ்போர்ட் இல்லாமல் அதிக காலம் தங்கியிருப்பவர்கள், பயண ஆவணத்திற்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் புதிய பாஸ்போர்ட்டுடன் எளிதாக திரும்பலாம் என்பதை அவர் எடுத்துரைத்துள்ளார்.

இதனையடுத்து "உங்கள் நிலையை முறைப்படுத்த இதுவே கடைசி வாய்ப்பு. இலகுவாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இது உங்களுக்கான இறுதி வாய்ப்பு" என்று சமூக சேவையாளர்கள் மற்றும் இமிகிரேஷன் நிபுணர்கள் பொதுமன்னிப்பு காலத்தின் அவசரத்தை மீண்டும் வலியுறுத்துகின்றனர்.

அமீரக விசா பொதுமன்னிப்பு திட்டம், முதலில் அக்டோபர் 31 அன்று முடிவடைய இருந்தது, இது தற்போது டிசம்பர் 31, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் காலாவதியான விசாவுடன் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் எந்த அபராதமும் இல்லாமல் தங்கள் நிலையை சரிசெய்ய இத்திட்டம் அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மூலம் - கலீஜ் தமிழ்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image