ஸ்ரீலங்கன் விமான சேவை மறுசீரமைப்பு தொடர்பில் அமைச்சர் விளக்கம்

ஸ்ரீலங்கன் விமான சேவை மறுசீரமைப்பு தொடர்பில் அமைச்சர் விளக்கம்

மறுசீரமைப்பின் மூலம் சிறந்த முதலீட்டுக் குழுவொன்றுடன் இணைந்தே ஸ்ரீலங்கன் விமான சேவையை முறையாக முன்னெடுக்க முடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (08) பிரதமருக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி எம்.பி. ஹேஷா விதானகே எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பிரதமரின் சார்பில் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்துக்கு கடந்த வருடத்திலேயே அதிகமான ஆட்சேர்ப்பு இடம்பெற்றுள்ளதாக ஹேஷா விதானகே எம்பி தமது கேள்வியின் போது சுட்டிக்காட்டினார்.  இவ்வாறு 791 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எனினும் கடந்த வருடம் 470 ஊழியர்கள் தமது பதவியை ராஜினாமா செய்து சென்றுள்ள காரணத்தாலேயே இந்த ஆட்சேர்ப்பு இடம்பெற்றுள்ளது.

அந்த வகையில் இவ்வாறு பெரும் தொகையானோர் தமது பதவியை இராஜினாமா செய்யும்போது அந்த வெற்றிடத்திற்காக ஆட்சேர்ப்பு செய்வது தவறா என நான் அவரிடம் கேட்க விரும்புகின்றேன்.

உலகில் எம்மை விட செல்வந்த நாடுகள், குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளிலும் விமான சேவைகள் நட்டத்திலேயே இயங்குகின்றன.இந்திய எயார்லைன்சுக்கு என்ன நடந்தது? அதுவும் நட்டத்திலேயே இயங்குகிறது. சுவிஸ் எயார் தற்போது சேவையில் உள்ளதா? அதுவும் கிடையாது.

எமிரேட்ஸ் போன்ற விமான சேவைக்கு அந்த நாடுகள் 2 அல்லது 3பில்லியன் அமெரிக்கன் டொலர்களை தொடர்ச்சியாக வழங்குகின்றன. இலங்கை போன்ற நாடுகளுக்கு அவ்வாறு செய்ய முடியாது. அதனால் எமது நாடு போன்ற சிறு அளவிலான விமான சேவைகளை நடத்தும் நிறுவனங்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கியே ஆக வேண்டும். 

எமக்கு விமானம் கொள்வனவு செய்வதற்கும் நிதி கிடையாது. அதற்காக முதலீடு செய்யும் நிலையிலும் இல்லை. குத்தகை அடிப்படையிலேயே நாம் விமானங்களை பெற்றுக் கொள்கின்றோம். ஒரு விமானம் கூட எமக்கு சொந்தமான விமானம் கிடையாது. அனைத்து விமானங்களும் லீசிங் முறையில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள விமானங்களாகும். அவற்றுக்கு லீசிங் வழங்கிய பின்னர் எத்தகைய நிதியும் எமக்கு மிஞ்சாது.

அத்துடன் அண்மைக் காலங்களில் நாம் விமான சேவை தொடர்பில் பல தொழிற்சங்க நெருக்கடிகளையும் எதிர்நோக்க நேர்ந்தது. அதுவும் நட்டத்திற்கு காரணமாகிறது. அதனால் தான் எமக்கு மறுசீரமைப்பு அவசியமாக உள்ளது. 

இந்த விமான சேவை தொடர்பில் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடிய குழு வொன்றுடன் இணைந்தே உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும். அப்போதுதான் இந்த விமான சேவை துறையிலுள்ள சுமார் 6000 ஊழியர்களின் தொழில் உரிமையை பாதுகாக்க முடியும். அதற்கான பொறுப்பு அமைச்சுக்கு உள்ளது. 

அந்த வகையில் எந்த ஒரு விமான சேவையும் இலாபமீட்டுவதாக தற்போது இல்லை என்பதை  தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image