உக்ரைன் இராணுவத்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த கணவன் மனைவி தம்பதியரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் விசாரணை பிரிவில் இன்று சரணடைந்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகத்திற்குரிய தம்பதியினர் கடவத்தை பிரதேசத்தில் வசித்து வருவதுடன், கணவர் தொழில் ரீதியாக பொருளியல் ஆசிரியர் ஆவார்.
உக்ரைன் ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர்கள், இந்த நாட்டை விட்டு அனுப்பியவர்களின் எண்ணிக்கை 55 ஆகும்.
இவர்களில் இராணுவத்தில் பணியாற்றிய ஒரு குழுவும் உள்ளடங்கியதுடன், சந்தேகநபர்கள் உக்ரைன் இராணுவத்தில் கெப்டனாக கடமையாற்றி தற்போது உயிரிழந்துள்ள ரனிஷ் ஹெவெகேவின் ஒருங்கிணைப்புடன் குறித்த தரப்பினரை உக்ரைனுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. .
இலங்கையில் இருந்து வெளியேறும் நபர்கள் இந்தியா வழியாக போலந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் ஒருவரிடம் இருந்து சந்தேகநபர்கள் 02 முதல் 05 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
நாட்டை விட்டு வெளியேறியவர்களில் சிலர் உக்ரைனுக்கு சென்றுள்ள போதும் மேலும் சிலர் போலந்துக்குள் செல்ல முடியாமல் நாடு திரும்பியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு குழு அஜர்பைஜானுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதன் பின்னர் அவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றச் சென்றவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் பணிப்புரைக்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டாவின் தலைமையில், ஆட்கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.