இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு

இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு

விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கு Specified Skilled Worker பிரிவின் கீழ் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்காக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ஜப்பானின் IM Japan நிறுவனத்திற்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சார்பில் அதன் தலைவர், ஏ.ஏ.எம். ஹில்மி மற்றும் ஜப்பானின் IM Japan சார்பில் அதன் முகாமைத்துவ பணிப்பாளர் Masnobu Komiya ஆகியோரால் (11) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.

இதன் மூலம்,பராமரிப்பு சேவைகள் துறை,உணவு பதப்படுத்துதல் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் சிறப்புத் திறன்களைக் கொண்ட (Specified Skilled Worker) இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும், மேலும் தெரிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு 05 வருட காலம் பணியாற்ற முடியும். இதற்காக சேவை கால ஒப்பந்தற்கும் ஒழுங்குகள் செய்யப்படும். இதன்போது, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜப்பானின் IM Japan பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், Specified Skilled Worker இன் கீழ் ஆட்சேர்ப்புக்கான பரீட்சை முறையை இலகுபடுத்துமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இதற்கு சாதகமாக பதிலளித்த ஜப்பானிய பிரதிநிதிகள் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் இணக்கம் தெரிவித்தனர்.அத்துடன் ஜப்பானிய தொழில்களை இலக்காகக் கொண்டு இலங்கையில் அதற்கான விசேட பயிற்சி நிலையமொன்றை ஸ்தாபிக்குமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்ததுடன், தூதுக்குழுவினரும் இதற்கு திருப்திகரமான பதிலை தெரிவித்தனர். பணியகம் மற்றும் ஜப்பானின் IM Japan ஆகியவை இதற்குமுன்னர் தொழினுட்ப சேவை பயிற்சியாளர் (TITP) தொழில் பயிற்சிக்காக இலங்கையரை ஜப்பானுக்கு அனுப்புவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

மேலும் இத்திட்டத்தின் கீழ் 415 இலங்கையர் பராமரிப்பு சேவை தொழில் துறைகள் மற்றும் கட்டுமானத் துறைகளில் வேலைக்காக ஜப்பானுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஜப்பானில் தொழினுட்ப சேவைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து நாடு திரும்பியுள்ள நான்கு இலங்கையரை ஊக்குவிக்கும்வகையில் தொழில்களை ஆரம்பிப்பதற்கான காசோலைகளும் வழங்கப்பட்டன. ஜப்பானில் 05 வருட பராமரிப்பு தொழில் துறையில் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பிய மூன்று இளம் பெண்களுக்கு தலா 10 இலட்சம் யென் (சுமார் 21 இலட்ச ரூபாய்) , கட்டுமானத் துறையில் 03 ஆண்டு பயிற்சியை நிறைவு செய்து நாடுதிரும்பிய இளைஞருக்கு 06 இலட்சம் யென் (சுமார் 13 இலட்சம் ரூபாய்) காசோலைகளும் வழங்கப்பட்டன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image