கோடைக் காலத்தில் தொழிலாளர்கள் வெயிலில் வாடுவதை தவிர்க்கும் விதமாக திறந்த வெளியில் வேலை செய்வதை தடுக்கும் சட்டமானது வளைகுடா நாடுகள் அனைத்திலும் அமுலில் உள்ள நிலையில், குவைத் நாட்டிலும் அந்தச் சட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஜூன் 01 முதல் ஆகஸ்ட் 31 வரை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்த வெளிகளில் நண்பகலில் வேலை செய்வதை தடை செய்தது. இந்த காலக்கெடு முடிவடைந்ததன் காரணமாக இனி வழமைபோல வேலை நேரம் கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செயல் இயக்குனர் ஜெனரல் Marzoup Al-Otaibi செய்தியாளரிடம் கூறியபோது, கோடைக் காலங்களில் திறந்த வெளி பணியிடங்களில் தொழிலாளர்கள் பணி செய்யக்கூடாது என்ற சட்டமானது 2015 ஆம் ஆண்டு தீர்மானம் 535 ன் கீழ் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த சட்டத்தினை தவறாமல் கடைப்பிடித்து வரும் குவைத் நாடு தொழிலாளர்களிடம் சட்டம் குறித்து ஆய்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றது.
மேலும் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய இடைவேளையை சரியாக வழங்குகின்றனவா என்பதை சோதனை செய்வதற்காக தனியாக குழுக்களும் அமைத்து விதிமுறையை மீறுபவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.
இந்த ஆண்டு மேற்கொண்ட சோதனையில் 362 இடங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் விதிமுறைகளை மீறிய தொழிலாளர்களின் எண்ணிக்கை 580 எட்டியது எனவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
அரசாங்கத்திற்கு ஒத்துழைக்காமல் விதிமுறைகளை தொடர்ந்து மீறும் நிறுவனங்கள் குறித்தும் தொழிலாளர்கள் குறித்தும் ஜெனரல் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனாலும் கோடைக் கால இடைவேளையானது முடிவிற்குவரும் பட்சத்தில் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உதவிய நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் மனிதவள ஆணையத்துடன் ஒத்துழைத்தமைத்த ஒத்துழைத்தமைக்காக நன்றியையும் தெரிவித்துள்ளார்.
மூலம் - கலீஜ் தமிழ்