ஓமானிற்கு ஆட்கடத்தல் - பின்னணியில் செயல்பட்டவர்கள் அடையாளம்

ஓமானிற்கு ஆட்கடத்தல் - பின்னணியில் செயல்பட்டவர்கள் அடையாளம்

ஓமானில் பல்வேறு தொந்தரவுகளுக்கு உள்ளான இலங்கை பெண்கள் தொடர்பிலான சம்பவங்களின் பின்னணியில் செயல்பட்டவர்களுடன் தொடர்புபட்ட வலைப்பின்னல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தின் முகாமையாளர் ஈ.டீ.பீ. சேனநாயக்க தெரிவித்தார்

இதேவேளை, வெளிநாட்டு தொழில்வாப்பை பெற்றுக்கொடுக்கும் முகவர் நிறுவனங்கள் குறித்து அடிக்கடி முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அனுமதி பத்திரத்தைக்கொண்ட அல்லது அனுமதிப்பத்திரம் அற்ற முகவர் நிலையங்கள் தொடர்பில் நாடு முழுவதும் விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருவதாக வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தின் விசாரணை முகாமையாளர் கபில கருணாரத்ன கூறினார்.

ஓமான் நாட்டில் இலங்கைகைப் பணிப்பெண்களுக்கு ஏற்பட்ட அவலம் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (21) நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டன.

அனுமதி பத்திரமின்றி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை நடத்திவருவோர் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதி வரையில் நால்வர் பதுளை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர் அடங்களாக நால்வர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (பொருளாதார விவகாரங்கள்) சந்தன வீரசிங்க தெரிவிக்கையில், ஒருவருக்கு வெளிநாட்டு விசா அனுமதிப் பத்திரம் இருந்தால், அவர் உலகில் எந்த ஒரு நாட்டிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவார்.

அந்த நபர் தொழிலுக்காக செல்கிறார் என்று ஒருபோதும் குறிப்பிடமாட்டார். இவ்வாறு இலங்கையில் இருந்து பலர் சுற்றுலா விசாக்களில் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்கின்றனர். மேலும், பல பெண்கள் எந்தவிதமான தெளிவூட்டல்களும் இன்றி வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். தாம் தவறாக வழிநடத்தபபடுகின்றனர் என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை.

இது இரு நாடுகளுக்கும் பாதிப்பான விடயம். தற்போது, ஓமானில் சுமார் 19,000 இலங்கைத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரும் முறையான வழியில் தொழில்களுக்காக வெளிநாடு சென்றுள்ளனர். அவர்கள் இலங்கைக்கு அந்நிய செலாவணியை வழங்குவதற்காக செயற்படுகின்றனர்.

இலங்கை பணிப்பெண்கள் ஓமான் நாட்டில் முகம் கொடுத்த அசம்பாவிதங்கள் தொடர்பில் சமூக ஊடகங்கள் ஓமான் அரசாங்கத்தையும் , அந்நாட்டு மக்களையும் குற்றம் சுமத்துவதை தவிர்க்குமாறு பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டார்.  ஓமான் இலங்கையுடன் நட்புறவு கொண்ட நாடு. சுமார் 19,000 பேருக்கு அவர்கள் வேலை வாய்ப்புக்களை வழங்கியுள்ளனர். இந்த ஆண்டு மாத்திரம் சுமார் 5,100 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கியுள்ளனர்.

அந்நாடு எமது இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்க தயாராகி வருகிறது. மேலும், இந்த நேரத்தில் நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டுவது அவசியமாக உள்ளது. நாடு என்ற வகையில் நாம் அவர்களுடன் நட்புறவை பேண வேண்டும்.  பாதிக்கப்பட்டவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதே எமது பிரதான நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம் - அததெரண 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image