புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விசேட ஊக்குவிப்புத் திட்டம்
வெளிவிவகார அமைச்சர் மற்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஆகியோருக்கு இடையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதுதொடர்பான சந்திப்பு இடம்பெற்றது,
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு இடையில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து கடந்த 04ஆந் திகதி நடைபெற்ற சந்திப்பில், நாட்டின் தற்போதைய சூழலில் இன்றியமையாத வெளிநாட்டு வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியமான வழிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதில் உள்ள இடையூறுகளை நிவர்த்தி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்படக்கூடிய வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து, தொழிலாளர்களைப் பெற்றுக்கொள்ளும் நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் தலைவர்கள் மற்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகளின் பங்கேற்புடன், இரு அமைச்சர்களும் நடாத்திய மெய்நிகர் சந்திப்பு நடைபெற்றது.
ஆரம்ப உரையை ஆற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ், இலங்கைத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதில் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் முக்கிய பங்காற்றுவதாக வலியுறுத்தியதுடன், பொருளாதார இராஜதந்திரக் கட்டமைப்பிற்குள் தூதரகங்களின் முக்கிய முன்னுரிமையாக உள்ள சாத்தியக்கூறுகளை முன்கூட்டியே ஆராயுமாறு அனைத்து தூதரகங்களையும் ஊக்குவித்தார்.
வேலைவாய்ப்பு தொடர்பான விடயங்களில் பங்குதாரர்களின் நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை விரைவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, உத்தியோகபூர்வ வழிகளில் இலங்கைத் தொழிலாளர்கள் தமது பணத்தை நாட்டிற்கு அனுப்புவதை ஊக்குவிக்குமாறு தூதரகங்கள் / பணிமனைகளின் தலைவர்களின் ஆதரவைக் கோரினார்.
மேலும், நாட்டின் பொருளாதாரத்திற்கு புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் விசேட ஊக்குவிப்புத் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் நாணயக்கார சுட்டிக்காட்டினார்.
விரிவான மற்றும் ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றத்தின் போது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பில் தூதரகங்கள் ஏற்கனவே முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை தூதரகத் தலைவர்கள் விவரித்தனர்.