புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கான அதிகரித்த ஊக்குவிப்புகள்
புலம்பெயர்ந்து வாழும் இலங்கை பணியாளர்களுக்கான அதிகரித்த கொடுப்பனவுகளை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தலில்,
நாணய மற்றும் ஏனைய கொள்கை வழிமுறைகள் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினை வலுப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது
தற்போதுள்ள மற்றும் எதிர்பார்க்கப்பட்ட பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளை பரிசீலனையிற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2022 சனவரி 19ஆம் நாளன்று இடம்பெற்ற அதனது கூட்டத்தில் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினை வலுப்படுத்தும் நோக்குடன் பல்வேறு கொள்கை வழிமுறைகளை மேற்கொள்வதற்குத் தீர்மானித்தது. அதற்கமைய, நாணயச்சபையானது பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டிருந்தது:
அ) மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 5.50 சதவீதத்திற்கும் 6.50 சதவீதத்திற்கும் ஒவ்வொன்றையும் 50 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரித்தல்;
ஆ) எரிபொருள் கொள்வனவுகளுக்காக அத்தியாவசிய இறக்குமதிப் பட்டியல்களின் நிதியிடலை உரிமம்பெற்ற வங்கிகளின் வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களுக்கு விகிதசமமாக அவ்வங்கிகளுக்கிடையில் பகிர்ந்தளித்தல்;
இ) அனைத்துப் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலாப்பயணி நிறுவனங்களும் இலங்கைக்கு வெளியில் வதிகின்ற ஆட்களுக்கு வழங்கப்படும் பணிகள் தொடர்பில் வெளிநாட்டுச் செலாவணியை மாத்திரம் ஏற்றுக்கொள்வதனைக் கட்டாயமாக்குதல்;
ஈ) “உள்முக தொழிலாளர் பணவனுப்பல்கள் மீதான ஊக்குவிப்புத் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ் ஐ.அ.டொலர் ஒன்றிற்கு வழங்கப்படும் ரூ.2.00 ஊக்குவிப்புத் தொகைக்கு மேலதிகமாக தொழிலாளர் பணவனுப்பல்களுக்காகக் கொடுப்பனவுசெய்யப்படும் ஐ.அ.டொலர் ஒன்றிற்கு மேலதிகமாக ரூ.8.00 கொடுப்பனவை வழங்குவதனை 2022 ஏப்பிறல் 30 வரை நீடித்தல், 2022 பெப்புருவரி 01 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் உரிமம்பெற்ற வங்கிகள் அத்துடன் ஏனைய முறைசார் வழிக;டாக ரூபாய்க் கணக்குகளுக்கு பணம் அனுப்பப்படுகின்ற போது பரிமாற்றல் ஒன்றிற்கு ரூ.1,000 கொடுப்பனவு செய்வதன் மூலம் புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பணப் பரிமாற்றல் செலவினை மீளளித்தல் அத்துடன் புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டு நாணய மற்றும் ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட வைப்புகள் இரண்டிற்கும் உயர்வான வட்டி வீதங்களை அறிமுகப்படுத்தல்.