புலம்பெயர் பணியாளர்கள் இணையத்தளம் ஊடாக முறைப்பாடுகளை பதிவுசெய்யும் முறைமை
வெளிநாட்டு பணியாளர்களின் முறைப்பாடுகளை இணையத்தளம் ஊடாக அனுப்புவதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாடு சென்றுள்ள பணியாளர் அல்லது அவருடைய குடும்ப உறுப்பினரால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் http://www.slbfe.lk/ என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து முறைப்பாட்டினை அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளரின் கடவுச்சீட்டு இலக்கம், புலம்பெயர் தொழிலாளரின் தேசிய அடையாளஅட்டை இலக்கம், புலம்பெயர் தொழிலாளரின் தொலைபேசி இலக்கம் என்பனவற்றைப் பதிவுசெய்து இந்த சேவையினை பெற்றுக்கொள்ள முடியும்.
முறைப்பாட்டினை பதிவு செய்தவுடன்இ முறைப்பாட்டின் இலக்கத்தினை உடனடியாக தொலைபேசி இலக்கத்திற்கு குறுந்தகவலாக பெற்றுக்கொள்ள முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளார்.
குறித்த முறைப்பாடு பணியகத்தின் உரிய பிரிவிற்கு கிடைத்த பின்னர் அதனை அறிவித்து மீண்டும் தொலைபேசி இலக்கத்திற்கு குறுந்தகவல் அனுப்பப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த இணையத்தள வசதி ஊடாக பணியாளர், சேவை புரியும் நாட்டின் தூதுரக காரியாலயத்திற்கு செல்லாமல் முறைப்பாட்டினை கையடக்க தொலைபேசி அல்லது கணினி மார்க்கமாக அனுப்ப முடியும்.
அதேநேரம் வெளிநாடு சென்றுள்ள பணியாளரின் உறவினராலும் முறைப்பாட்டினை பணியகம் அல்லது மாகாண காரியாலயத்திற்கு செல்லாமல் இணையத்தளம் ஊடாக அனுப்ப முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.