O/L பரீட்சை: மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளை 17ஆம் திகதி நள்ளிரவு முதல் நடத்த தடை

O/L பரீட்சை: மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளை 17ஆம் திகதி நள்ளிரவு முதல் நடத்த தடை

க.பொ.த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளை எதிர்வரும் 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் பரீட்சார்த்திகளுக்காக தனியார் வகுப்புகளை ஏற்பாடு செய்தல், நடத்துதல், பாடங்கள் தொடர்பான ஆலோசனைகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடத்துதல், பரீட்சை ஊக வினாப்பத்திரங்களை அச்சிடல், அவற்றை விநியோகித்தல், பரீட்சை வினாப்பத்திரங்களிலுள்ள வினாக்களை தருவதாகவோ அல்லது அதனை ஒத்த வினாக்களை வழங்குவதாக சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகள், இலத்திரனியல், அச்சு ஊடகங்கள் மூலம் பிரசுரித்தல், அவற்றை தம்வசம் வைத்திருத்தல் என்பனவற்றுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளன.

எவரேனும் நபரோ அல்லது நிறுவனமோ இந்த அறிவிப்பை மீறி செயற்படுமிடத்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D.தர்மசேன தெரிவித்தார்.

அத்துடன், இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

119 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கோ, 1911 என்ற இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் நேரடி அழைப்பு இலக்கத்திற்கோ, 0112 784 208 அல்லது 0112 784 537 என்ற பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு பெறுபேற்றுக் கிளைக்கோ அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை முன்வைக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image