தொழிலாளர் சட்டங்கள் மற்றும் கொள்கைகளைப் பலப்படுத்த இலங்கைக்கு உதவி - ILO

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகள் சபாநாயகரைப் பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகள் (ILO) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் (24) பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிப்பாளர் ஜொனி சிம்ஸன், பிரதான தொழிநுட்ப ஆலோசகர் தோமஸ் கிங், கெயார் திட்டத்தின் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் மேரியன் பெர்னான்டோ, திட்ட அதிகாரி அசித செனவிரத்ன ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீரவும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.
தொழிலாளர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதன் மூலம் சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும் அதனுடன் சமமான அபிவிருத்தியை உறுதிசெய்வதிலும் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக சபாநாயகர் இந்தக் கலந்துரையாடலில் தெரிவித்தார்.
தொழிலாளர் சட்டங்கள் மற்றும் கொள்கைகளைப் பலப்படுத்த இலங்கைக்குத் தொடர்ச்சியான உதவிகளை வழங்குவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.
வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு எதிரான சமவாயம் (ILO C190) மற்றும் பணியிடங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.