பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளின் பல்வேறு தொழில் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
இது தொடர்பில் அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் மற்றும் அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும், அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கும், அனைத்து மாகாண பிரதம செயலாளர்களுக்கும், அபிவிருத்தி உத்தியோத்தர் சேவை சங்கம் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
சங்கத்தின் பிரதான செயலாளர் சந்தன சூரிய ஆராய்ச்சி நேற்று (14) இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
அரச மற்றும் மாகாண அரச சேவையின் MN-04 அண்மித்த சேவை பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ தாழிகளில் தொழில் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொள்வோம் என்ற தலைப்பில் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி,
1. அரசு மற்றும் மாகாண அரச சேவையில் MN-04 பட்டதாரிகளின் அடிப்படை சம்பளம் மற்றும் சம்பள அதிகரிப்பு கல்வித்தகைமை சமமாகும் வகையில் அதிகரித்தல் அல்லது 06/2006,3/2016 சம்பள பிரச்சினையை நீக்குதல்.
2. MN-05, MN-07 சம்பள அளவுத்திட்டம் கிடைக்கும் வகையில் பதவி உயர்வு நடைமுறையை விரைவாக நடைமுறைப்படுத்துதல்.
3. தரமுயர்வு தொடர்பாக இடம்பெற்ற, நீக்கப்பட்ட விசேட செயலணி மதிப்பீட்டு முறைமையை உடனடியாக நடைமுறைப்படுத்தல்.
4. சம்பள அளவுத்திட்டம், பதவி உயர்வு விசேட செயலணி மதிப்பீடு, முறையான பயிற்சி உள்ளிட்ட உரித்துடைமையுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை யாப்பை மறுசீரமைத்தல்.
5. 2016 ஆம் ஆண்டு முதல் நீக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் பூரண ஓய்வூதியத்தை உரித்துடைமை நியமனக் கடிதம் மூலம் உறுதிப்படுத்தல்.
6. தற்போதைய போக்குவரத்து செலவு கொடுப்பனவுகளை அதிகரித்தல், மற்றும் மொழி, தொழில்நுட்பம், எரிபொருள், தொலைபேசி மற்றும் தரவு கொடுப்பனவை வழங்குதல்.
7. பட்டதாரிகளை ஆட்சேர்க்கும்போது அமைச்சு திணைக்களம் மற்றும் நிறுவன விடயங்களுக்கு பொருந்தும் பட்டங்களைக் கொண்டுள்ள தரப்பினரை அந்தந்த நிறுவனங்களுக்கு முறையாக ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.
8. பொருளாதார அபிவிருத்தி அதிகாரி பதவியை திணைக்கள மயமாகிய பதவியாக்கி உரித்துடைமை சான்றிதழ் வழங்குதல்.
எவ்வாறிருப்பினும் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் திகதி ஒருநாள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொண்டு குறித்த கோரிக்கைகளை அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நாங்கள் முன்வைத்தோம்.
எனினும் இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை. இவ்வாறான பின்னணியில் மேற்குறித்த தொழில் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை மீண்டும் முன்வைக்கப்படுகின்ற நிலையில், அதற்குரிய தீர்வு கிடைக்க பெறாவிட்டால் எதிர்வரும் மார்ச் மாதம் 14ம் திகதி நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.