தபால் மூல வாக்களிப்புக்கு 7 இலட்சத்து 12 ஆயிரம் பேர் தகுதி

தபால் மூல வாக்களிப்புக்கு 7 இலட்சத்து 12 ஆயிரம் பேர் தகுதி

ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கு இம்முறை 712 ,321 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

கிடைக்கப் பெற்ற 736 ,586 விண்ணப்பங்களில் 24 , 286 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல்கள் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் நிறைவுப் பெற்றுள்ளன. தேர்தல் சட்டம் மீறல், வன்முறை செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து 500 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.இந்த முறைப்பாடுகளை பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளோம். உரிய பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்கள் ஊடாக முறைப்பாடு குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தபால்மூல வாக்களிப்புக்கு இம்முறை 736 586 பேர் விண்ணப்பிருத்திருந்த நிலையில் 24 286 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.இதற்கமைய இம்முறை 712 321 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.வாக்களிப்பு அட்டைகள் எதிர்வரும் 26 ஆம் திகதி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4 , 5 , 6 ஆகிய திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.

தேர்தல் கடமைகளில் நேரடியாக ஈடுபடும் மாவட்ட செயலக காரியாலயம் பொலிஸ், திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகிய அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் எதிர்வரும் மாதம் 4 ஆம் திகதி தபால் மூலமாக வாக்களிக்க முடியும்.

ஏனைய அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் செப்டெம்பர் மாதம் 5, 6 ஆகிய திகதிகளில் வாக்களிக்க முடியும்.இவ்விரு தினங்களில் வாக்களிக்காதவர்கள் 11, 12 ஆகிய திகதிகளில் வாக்களிக்க முடியும்.

ஜனாதிபதித் தேர்தல் பணிகளுக்காக இம்முறை சுமார் 2 இலட்சம் அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடவுள்ளனர்.நாடளாவிய ரீதியில் 13 ஆயிரம் வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்படும்.வாக்களிப்பு முறைமை குறித்து வாக்காளருக்கு விளக்கமளிக்கப்படும் என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image