'கோட்டா கோ கம' போராட்டத்தின் 50ஆம் நாள் நிறைவுக்கு அணிதிரண்ட தொழிற்சங்கங்கள்!
காலிமுகத்திடல் 'கோட்டாகோகம'யில் முன்னெடுக்கப்படும் போராட்டம் நேற்று 50 நாட்களை எட்டியுய நிலையில், அதற்கு ஆதரவு தெரிவித்து தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன் அமைப்புக்களின் ஒன்றியம் போராட்டப் பேரணியை நடத்தியிருந்தது.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள தொழிற்சங்க மத்திய நிலையத்தில் இருந்து நேற்றுப் பிற்பகல் ஆரம்பமான இந்தப் பேரணி போராட்டம் இடம்பெறும் காலிமுகத்திடலில் நிறைவடைந்தது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி பெருமளவானோர் இணைந்து கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு, காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த போராட்டம் நேற்று சனிக்கிழமையுடன் (28) 50 நாட்களைப் பூர்த்திசெய்துள்ளது.
அதனை முன்னிட்டு சனிக்கிழமையன்று பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கொழும்பு, கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலிமுகத்திடலை நோக்கி ஏற்பாடு செய்திருந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுக்கொண்டிருந்ததுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்குப் புத்துயிர் அளிப்பதற்காகவே தாம் வருகைதந்திருப்பதாகவும் கோஷங்களை எழுப்பினர்.
இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், தொழிற்சங்க மத்திய நிலையம், ஐக்கிய ஒன்றிய தொழிற்சங்க சம்மேளனம், ப்ரொடெக்ட் சங்கம் உள்ளிட்ட பெருமளவான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தப் பேரணியில் சர்வமதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பங்கேற்றுக்கொண்டிருந்தனர்.