புதிதாக 3,000 தாதியர்களை இணைக்க அரசு நடவடிக்கை

புதிதாக 3,000 தாதியர்களை இணைக்க அரசு நடவடிக்கை

அரசாங்க வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 3,000 தாதியர்களை புதிதாக இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நேர்முகப் பரீட்சை நிறைவு பெற்று ஆட்சேபனைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (07) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் கல்வி பொதுத் தராதர உயர்தரத்தில் கணிதம், உயிரியல், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் தோற்றியுள்ள மாணவர்கள் தாதியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த வருடம் செப்டம்பர் 15 இல், வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது 3,100 பேர் இதற்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையில் மேலும் 3,863 பேர் இந்த சேவையில் இணைத்துக் கொள்வதற்காக காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். இவ்விடயத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் தனது கேள்வியில் குறிப்பிட்டார்.இதற்குப் பதிலளிக்கையிலேயே 3,000 தாதியர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் நாட்டில் 45,000 தாதியர்கள் சேவையில் உள்ளதாகவும் தற்போது சுமார் 1,000 பேருக்கான வெற்றிடமே நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது போல் 45 ஆயிரம் வெற்றிடங்கள் காணப்படவில்லை. 45 ஆயிரம் பேர் தற்போது சேவையில் உள்ளனர் என்பதே உண்மை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image