வாக்களிப்பதற்காக ஊழியர்களுக்கு கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டும் - தேர்தல்கள் ஆணைக்குழு
அரச மற்றும் தனியார் துறையின் சேவையாளர்கள் வாக்களிப்பதற்கு போதுமான காலவகாசம் வழங்க வேண்டும்.
தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் விடுமுறை வழங்கும் முறைமையை அறிவித்துள்ளோம். தொழில் வழங்குனர்கள் தமது ஊழியர்கள் வாக்களிக்க செல்வதற்கு கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரச சேவையாளர்கள் வாக்களிப்பதற்கு தாபன விதிக்கோவைக்கமைய போதுமான விடுமுறை வழங்க வேண்டும். அத்துடன் தனியார் துறையினருக்கு விடுமுறை வழங்க வேண்டியது தொழில் மற்றும் சேவை வழங்குநரின் பொறுப்பாகும்.
இதற்கமைய வாக்களிப்பதற்கு 40 கிலோமீற்றர் தூரம் பயணிக்க வேண்டியவர்களுக்கு 1/ நாள் 2 விடுமுறையும், 40 முதல் 100 கிலோமீற்றர் தூரம் பயணிக்க வேண்டியவர்களுக்கு 1 நாள் விடுமுறையும், 100 முதல் 150 கிலோமீற்றர் பயணிக்க வேண்டியவர்களுக்கு 1.1/ 2 விடுமுறையும், 150 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணிக்க வேண்டிவர்களுக்கு 2 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும்.
தேர்தலில் வாக்களிக்க இடையூறு விளைவிக்காத வகையில் அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். ஆகவே தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கமைய தொழில் வழங்குனர்கள் தமது ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என்றார்.