பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காகத் தேசிய சம்பள நிர்ணய சபை இன்றைய தினம் மீண்டும் கூடவுள்ளது.
தொழில் ஆணையாளர் காரியாலயத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்துக் கடந்த மாதம் சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக வர்த்தமானி வெளியிடப்பட்டது.
நாளாந்தம் அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவாகவும், உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கி இருப்பதாகத் தொழிற்சங்கங்களின் தலைவர்கள் அறிவித்திருந்தனர்.
எனினும் நாளாந்த அடிப்படை வேதனமாக 1,350 ரூபாவும்இ மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவாகக் கிலோ ஒன்றுக்கு 50 ரூபாவும் வழங்குவதற்கு இணங்கப்பட்டதே தவிர, மேலதிக கொடுப்பனவுகள் எதனையும் வழங்க இணக்கம் தெரிவிக்கவில்லை என்று பெருந்தோட்ட நிறுவனங்கள் அறிவித்தன.
அதன்படி இம்மாதத்துக்கான சம்பளம் பழையபடி நாளாந்தம் 1,000 ரூபாய் என்ற அடிப்படையிலேயே கணித்து வழங்கப்படும் என்றும் பெருந்தோட்ட நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.
பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள அதிகரிப்பு தொடர்பான தேசிய சம்பள நிர்ணய சபை கடந்த 3 ஆம் திகதி கூடியபோதும், தீர்மானம் எதுவுமின்றி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.