அரச நிதி முகாமைத்துவ சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை

அரச நிதி முகாமைத்துவ சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை

அரச நிதி முகாமைத்துவ சட்டமூலத்தைத் (Public Financial Management Bill) தயாரிப்பதற்கு நிதி அமைச்சு எடுத்த முயற்சிகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு பாராட்டு

அரசாங்க நிதி பற்றிய குழுவில், அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் பற்றி நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. பொது மக்களின் நம்பிக்கையை வளர்த்தல், வினைத்திறனான வள ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தல் மற்றும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குதல் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இவ்வாறானதொரு சட்டமூலத்தைக் கொண்டுவருவதற்கு நிதி அமைச்சு எடுத்த முயற்சிகளையும் குழு பாராட்டியது.

தற்பொழுது நடைமுறையில் உள்ள நிதி ரீதியான ஒழுங்குவிதிகள், சட்டக் கட்டமைப்புக்களை அடிப்படையாக் கொண்டிருந்தாலும் அவை சரியான முறையில் பின்பற்றப்படுவதில்லையெனக் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர். தற்போதைய அரச நிதி முகாமைத்துவ நடவடிக்கைகளில் காணப்படும் குறைபாடுகள், உள்ளக ரீதியில் காணப்படும் பலவீனங்கள் மற்றும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக் கூறலில் காணப்படும் சிக்கல்கள் காரணமாக இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் அரச நிதி முகாமைத்துவச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் ஹர்ஷ த சில்வா தலைமையில் அண்மையில் (11) கூடியபோதே இந்த விடயம் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. சட்டமா அதிபர் திணைக்களம், நிதி அமைச்சு, மத்திய வங்கி உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

தற்பொழுது காணப்படும் அரச நிதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பொது நிதி பற்றிய சட்டங்களை விரிவுபடுத்துவதற்கான ஏற்பாடுகளை இச்சட்டமூலம் கொண்டுள்ளது. இதன் மூலம் பல துறைகளில் பரந்து காணப்படும் ஒழுங்குமுறைகளை ஒருங்கிணைக்க உதவும். இது அனைத்துக்குமான சட்டமாக செயற்படும் அதேவேளை, நிதி மூலோபாயத் திட்டம் மற்றும் நடுத்தர நிதிச் சட்டகத்தின் குறிப்பிட்ட உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும்.

மேலும், இந்தச் சட்டமூலமானது முதன்மை இருப்பை நடுத்தர கால நிதி ஆதாரமாக இலக்கு வைப்பதற்கும், அரசாங்கத்தின் முதன்மைச் செலவு வரம்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13% ஐ விட அதிகரிக்காமல் இருப்பதை பேணுவதற்கான ஏற்பாடுகளையும் வழங்குகின்றது.

எனினும், முன்மொழியப்பட்ட 13% முதன்மை செலவின் வரம்பானது, வளர்ச்சி, செயல்திறன் மற்றும் சமூக நலனை ஊக்குவிக்கும் வழிகளில் வரி மற்றும் செலவு செய்வதற்கான அரசாங்கத்தின் திறனைத் தடுக்கின்றது என அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

மேலும், முதன்மைச் செலவினங்களில் குறைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையிலான வரம்பை நிர்ணயித்த ஒரே நாடாக இலங்கையை அது நிலைநிறுத்துகிறது. இதனால், 2040 ஆம் ஆண்டளவில் அதிக வருமானம் பெறும் நாடாக மாறுவதற்கு தேவையான 10% வளர்ச்சி விகிதத்தை அடைவது சாத்தியமற்றது எனக் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

ஆண்டுதோறும் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வை தயாரித்து வெளியிடுதல், உத்தரவாத வரம்பை குறைத்தல் - சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5%க்கு விஞ்சாது இருப்பது, அரச முதலீட்டுக் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட வேண்டிய திட்டங்கள் போன்றவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.

வரவிருக்கும் நிதியாண்டு மற்றும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான நடுத்தர கால நிதிக் கட்டமைப்பு, முதன்மை இருப்பு இலக்கு, முதன்மை செலவின உச்சவரம்பு, நிதிய மொத்த கணிப்புகள் மற்றும் பொருளாதார அனுமானங்கள் குறித்தும் குழு அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது.

கடந்த 50 வருடங்களில் அரசாங்கத்தின் வருமானம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட அனுமானங்கள் எவ்வாறு தவறானவை என்றும், இந்த குறிப்பிட்ட சட்டமூலம் இந்தப் பிரச்சினையை எவ்வாறு தீர்க்கும் என்றும் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வினவினார். மேலும், இவ்வாறான சட்டமூலம் கடனை நிலைநிறுத்துவது மட்டுமன்றி பொருளாதார வளர்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அரச நிதி முகாமைத்துவ சட்டமூலத்தின் நோக்கங்கள் பொருளாதார நிலைமாற்றச் சட்டத்துடன் இணங்கும் வகையில் இருக்க வேண்டும்என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image