ஜனாதிபதித் தேர்தலை பிற்போடக்கோரும் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

ஜனாதிபதித் தேர்தலை பிற்போடக்கோரும் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் திகதி தொடர்பில் உயர் நீதிமன்றம் பொருட்கோடலை வழங்கும் வரை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தொழில்முயற்சியாளர் ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது தள்ளுபடி செய்வதற்கு உயர் நீதிமன்றம் இன்று(08) உத்தரவிட்டுள்ளது. 

2019 ஆம் ஆண்டிலும் இந்த விடயத்தின் அடிப்படையில் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதியரசர்கள் குழாம், அதே காரணிகளின் அடிப்படையிலேயே இந்த மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் இந்த மனு மீதான விசாரணையை முன்கொண்டு செல்ல போதுமான காரணிகள் இல்லையெனவும் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் குறிப்பிட்டது.

அரசியலமைப்பில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருட காலம் என்பது தௌிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, மூர்து பெர்னாண்டோ, ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் எஸ்.துரைராஜா ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் ஏகமனதாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் எனவும் அது அரசியலமைப்பில் தௌிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்கா டி சில்வா, அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைத்து தெரிவித்திருந்தார். அதற்கமைய, மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளவாறு அவரின் அடிப்படை உரிமைகள் எவையும் மீறப்படவில்லை என்பதால், குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அவர் வாதிட்டிருந்தார். இதேவேளை, ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் சிக்கல் நிலை ஏதும் இல்லையெனவும் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பது அரசியலமைப்பில் தௌிவாகக் கூறப்பட்டுள்ளதாகவும் இடையீட்டு மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரொமேஷ் டி சில்வா, நய்ஜல் ஹெட்ஜ், உபுல் குமரப்பெரும, பர்மான் காசிம், எம்.ஏ.சுமந்திரன், சாலிய பீரிஸ், கனகேஸ்வரன் ஆகியோர் மன்றில் குறிப்பிட்டிருந்தனர்.

மனுதாரர், அரசியலமைப்பில் இல்லாத சிக்கல்களை உருவாக்கி நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் வகையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணிகள் மன்றில் சுட்டிக்காட்டினர்.

இந்த செயற்பாட்டினால் மனுதாரர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணிகள் மன்றில் குறிப்பிட்டனர்.

இதனால், மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டவாறு அவரின் அடிப்படை உரிமைகள் மீறப்படவில்லை என சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள், மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்யுமாறு மன்றில் கோரிக்கை விடுத்தனர்.

மூலம் - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image