பல்கலை. கல்விசாரா ஊழியர்களுக்கு அரசாங்கம் கொடுத்துள்ள வாக்குறுதி
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் 2 மாத சம்பளம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து அவற்றை உதய செனவிரத்ன குழுவிற்கு சமர்ப்பித்து 2025 வரவு - செலவுத் திட்டத்தில் அவற்றை உள்ளடக்குவதாகவும் இராஜாங்க அமைச்சர் உறுதியளித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் அண்மையில் (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இதனை தெரிவித்தார்.
நாட்டிலுள்ள 17 பல்கலைக்கழகங்கள் மற்றும் 19 ஒன்றிணைந்த பட்டப்பின்படிப்பு நிறுவனங்களின் 14,600 கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் முழு உயர்கல்வித்துறையும் முடங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பணிக்கு சமுகமளிக்காத நாட்களை விடுமுறை நாட்களாகக்கருதி தண்டனை ஏதுமின்றி பணிக்கு திரும்புவதற்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தமது பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்து இன்றுடன்(06) 67 நாட்கள் ஆகின்றன.
15 வீத சம்பள குறைப்பு, மாதாந்த செலவுகளுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படாமை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.