போக்குவரத்து அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர், வேலை நிறுத்தத்தை கைவிட ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் ரயில் சாரதிகள் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான இந்த கலந்துரையாடல் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
ஜூன் 7ஆம் திகதி இரவு 12.00 மணி முதல் புகையிரத திணைக்களத்தில் லோகோமோட்டிவ் இயக்க பொறியியலாளர்கள் சாரதிகள் சங்கத்தினால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுப்பட்ட நிலையில், இன்று (10) கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, அனைத்து கோரிக்கைகளுக்கும் சாதகமான பதில் கிடைத்ததாக சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
அதன்படி, கடிதங்கள் தயாரிப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டார்.
இதேபோல், RM சம்பளக் குறியீட்டின்படி ஆட்சேர்ப்பு நடைமுறைகளைத் தயாரித்து ஆட்சேர்ப்பை விரைவுபடுத்தவும், வரும் வாரத்தில் கலந்துரையாடல்களை நடத்தவும் முடிவு செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
அதன்படி, அனைத்து ரயில் சாரதிகளையும் பணிக்கு சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளதுடன், நாளை (11) முற்பகல் அளவில் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.