தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி முதலாளிமார்கள் மாத்திரம் செல்வந்தர்களாகும் முறையை மாற்றியமைப்போம் - தொழில் அமைச்ச
முதலாளிமார்களுக்கு தோட்டங்களை முறையாக பராமரித்து முன்னேற்ற முடியாது என்றால், அந்த தோட்டங்களை மீண்டும் அரசாங்கம் பெற்றுக்கொண்டு, முறையாக பராமறிக்க முடியுமானவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடு்போம். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி முதலாளிமார்கள் மாத்திரம் செல்வந்தர்களாகும் முறையை நாங்கள் மாற்றியமைப்போம் என தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
பதுளையில் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெருந்தோட்டங்கள் பாரிய பங்களிப்பை வழங்குகின்றன. பெருந்தோட்டங்களையும் அரசாங்கத்தின் கீழ் காணப்படும் தோட்டங்களையும் நாம் பாதுகாக்க வேண்டும். பாரம்பரியமாக இத்தொழிற்துறையில் ஈடுபட்டுவரும் எமது தொழிலாளர்களை சுரண்டி உழைப்பு நடத்துகிறார்கள். இருக்கின்ற பழைய தேயிலைப் செடியை வைத்துக்கொண்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் மாத்திரமே வேதனம் வழங்கப்படுகிறது. முதலாளிகள் மாத்திரமே பணக்காரர்களாகும் முறையை நாம் மாற்றியமைக்க வேண்டியுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளம்1700 ரூபாவை வழங்கப்பட வேண்டும். புதிய உத்திகளைப் பயன்படுத்தி அதிகளவான தேயிலை கொழுந்துகளை உற்பத்தி செய்யும் தோட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். நவீன தொழில்நுட்பத்தை கையாண்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உழைக்கும் மக்கள் 1000 ரூபாவில் வாழலாம் என்று சொன்னால் அது தவறு. வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. பொருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்துள்ளது, வறுமை நிலை 26வீதமாக அதிகரித்துள்ளது, அதிக வறுமை நிலை தோட்டத் துறையிலேயே உள்ளது. அதனால் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி சட்டங்களை மாற்றி அமைப்போம்.
எனவே பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு சம்பளத்தை வழங்க முடியாவிட்டால் பெருந்தோட்டங்களை தொழிலாளர்களை பாதுகாத்து நிர்வகிக்கக்கூடியவர்களுக்கு வழங்குவோம். தோட்டங்கள் அரசுக்கு சொந்தமானவை. முதலாளுமார்களுக்கு வாடகைக்கே அவை வழங்கப்பட்டிருக்கின்றன. அதனால் அவர்களால் தோட்டங்களை முறையாக பராமரித்து முன்னேற்ற முடியாது என்றால், தோட்டத் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில், அந்த தோட்டங்களை மீண்டும் அரசாங்கம் பெற்றுக்கொண்டு, முறையாக பராமரிக்க முடியுமானவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்போம்.
அது மாத்திரமன்றி தோட்ட மக்களுக்கு தோட்டத்தில் வீடுகள் அமைப்பதற்கு ஒரு கிராமத்தை வழங்கி, ஒரு துண்டு காணியை உரித்து உரிமையாக வழங்குவதற்கும், தோட்டத்தின் உரிமையாளராக விவசாயம் செய்வதற்கும் தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அதேநேரம், பதுளை மாவட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மைகளை வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.