நுவரெலியா பீட்றூ தோட்டத்தில் நிலவும் பிரச்சினை

நுவரெலியா பீட்றூ தோட்டத்தில் நிலவும் பிரச்சினை

களனிவெளி தோட்டத்திக்குச் சொந்தமான நுவரெலியா பீட்றூ தோட்டத்தில் நடைபெற்ற தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் அதன் பின்னரான நிலைமையகள் குறித்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் தகவல் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தமது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்

 
30.05.2024 வியாழக்கிழமை அன்று, களனிவெளி தோட்டத்திக்குச் சொந்தமான நுவரெலியா பீட்றூ தோட்டத்தில் நடைபெற்ற தொழிற்சங்க நடவடிக்கையில் நான் தலையிட வேண்டியிருந்தது.
 
தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப் பெரிய தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் என்ற ரீதியில் நான் இந்த நடவடிக்யில் தலையிட்டேன்.
 
பல்வேறு மனக்குறைகளை (கோரிக்கைகளை) முன்வைத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
 
1. கம்பனி எங்களுடைய சட்டப்பூர்வமான குறைந்தபட்ச சம்பளமான நாளொன்றுக்கு ரூபா. 1700 கொடுக்க மறுக்கின்றமை.
 
2. வேலைக்கு வரும் குடும்ப தமிழ் பெண்கள் நெத்தியில் இடும் சிவப்புப் பொட்டுக்களை தோட்ட முகாமையாளர்கள் வலுக்கட்டாயமாக துடைத்து அழிக்கின்றமை, மற்றும் அவர்களின் நகைகளை அகற்றுகின்றமை.
 
3. தேயிலைச் செடிகளுக்குப் பதிலாக கோப்பிச் செடிகளை நடுதல்.
பொறுப்புள்ள தொழிற்சங்கம் என்ற வகையில், இந்த விடயத்தை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் தீர்த்து வைக்குமாறு முகாமையாளர்களுக்கு பல கடிதங்களை எழுதினோம். ஆனால், எங்கள் கடிதங்கள் புறக்கணிக்கப்பட்டன.
 
வேலைநிறுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக, முகாமையாளர்கள் சட்டவிரோதமாக 3 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தனர்.
மற்றும் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை மிரட்டுவதற்கும் அச்சுறுத்துவதற்கும் காவல்துறையைப் பயன்படுத்தினர்.
 
தோட்ட முகாமைத்துவம் எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளாமல் அவர்களை வேலையிலிருந்து நீக்கம் செய்தது.
வேலை நிறுத்த நடவடிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் பணிநீக்கம் செய்வதும் சட்டவிரோதமானது.
 
ஒரு தனியார் கம்பனிக்கும் அதன் தொழிற்சங்கத்திற்கும் இடையே வேலை தகராறில் இறங்குவதற்கும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கும் பொலிஸாருக்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை.
 
துரதிர்ஷ்டவசமாக, முகாமையாளர் மற்றும் பொலிஸாரின் இந்த தீர்மானம் தொழிலாளர்களை மேலும் தீவிரமாக்கியது.
இதனால் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் என்ற வகையில், இந்தப் பிரச்சினை மேலும் உக்கிரமடைந்துவிடாமல் இருக்க நடவடிக்கை எடுத்தேன்.
 
முகாமைத்துவ அதிகாரிகள் தொழிற்சாலையின் உள்ளே வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தொழிலாளர்களை விடுவிப்பதற்காக நான் தொழிற்சாலைக்குள் நுழைந்தேன்.
 
தொழிலாளர்களுக்கு போராட்டம் நடத்த உரிமை உண்டு. யாராலும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை உள்ளே பூட்டிவைக்க முடியாது.
 
அதன்பின்னர் தொழிற்சங்கத்துக்கும் தோட்ட முகாமையாளர்களுக்கும் இடையிலான சந்திப்புக்கு அழைப்பு விடுத்தேன்.
எனினும், சந்திப்பின் போது, ​​நுவரெலியா மாவட்டத்திற்கான பிரதி பொலிஸ்மா அதிபர் ஏகநாயக்க காரணமின்றி சபையில் நுழைந்து, தோட்ட முகாமைத்துவத்தின் பக்கம் அமர்ந்து முகாமைக்குச் சார்பாக செயற்படத் தொடங்கினார். இச் செயலானது முன்மாதிரியற்றது.
அத்துடன் தொழிற்சங்க கூட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளில் பொலிஸ் தலையிடுவதை தடைசெய்யும் பொலிஸ்மா அதிபரின் சுற்றறிக்கையை மீறும் செயலாகும்.
 
இந்த நடவடிக்கையானது தோட்ட முகாமையானது தங்கள் தொழிலாளர்களுக்கு எதிராக தொடர்ந்து கட்டவிழ்த்துவிடும் மிரட்டல் கலாச்சாரத்தை வெளிக்காட்டுகின்றது.
 
தொழிற்சங்கக் கூட்டத்தில் தலையிடுவதற்கு பொலிஸாருக்கு எந்த வேலையும் இல்லை என்பதால், நான் அவருக்கு சுற்றறிக்கையைப் பற்றி நினைவூட்டி அவரை வெளியேறுமாறு கட்டளையிட வேண்டி ஏற்பட்டது.
 
சட்டப்பூர்வமான சம்பளத்தை விட குறைந்தபட்ச சம்பளத்தை வழங்குகின்றமை, தொழிலாளர்களின் கலாச்சார மற்றும் மத அடையாளங்களைத் துடைத்தெறியுமாறு கட்டாயப்படுத்துதல் மற்றும் அவர்களின் தனிப்பட்ட நகைகளை அகற்றுதல் ஆகியவை தோட்டத் அதிகாரிகள் நடைமுறைப்படுத்தப்படும் நவீன கால அடிமைத்தனத்திற்கான உதாரணமாகும்.
 
இந்த நிறுவனங்களின் இணையதளங்களை நீங்கள் பார்த்தால், அவர்கள் பல விருதுகளை வென்றுள்ளதுடன் நிலைபெறுதன்மைக்காக சான்றிதழையும் பெற்றுள்ளதுடன் மற்றும் தங்கள் தொழிலாளர்களை சிறந்த முறையில் கவனிப்பதாக கூறுகின்றனர்.
 
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இது போன்ற நிலைகள் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உண்மையான யதார்த்தத்தையும், தோட்டத் துறையில் வியாபித்திருக்கும் அவமதிப்பு, அச்சுறுத்தல் மற்றும் அநீதிகளுக்கு தண்டனை வழங்காமை கலாச்சாரத்தையும் வெளிக்காட்டுகிறது.
 
இதைவிட துரதிர்ஷ்டவசமானது என்னவென்றால், பெரும்பாலான இலங்கை மக்கள் பொதுவாக, தோட்டத் தொழிலாளர்களின் அவலங்களுக்கு அனுதாபத்தை தெரிவிப்பதுடன் அதே போன்று அவர்களது தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு வெறுப்புணர்வையும் வெளிப்படுத்துகின்றனர்.
 
இந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளவோ ​​அல்லது அறிந்து கொள்ளவோ ​​இயலாது உள்ளனர்.
 
தோட்ட முகாமை குறைந்தபட்சம் தோட்ட தொழிலாளர்களின் குறைந்தபட்ச சட்டப்பூர்வ கடமைகளுக்குகூட இணங்கிச் செல்வதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை தொடர்பாக முயற்சி கூட செய்வதில்லை.
 
தேயிலைத் தோட்டத் தொழிற்சங்கங்கள் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்து மௌனமாக இருந்து, சில பணக்காரர்களால் முகாமைத்துவம் செய்யப்படும் இலங்கையில் உள்ள சில பெரிய கம்பனிகளின் ஊழியர்களுக்கு கழிவறைகள் மற்றும் தங்குமிடங்கள் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு தொழிலாளர்கள் தங்கள் நேரத்தையும், நிதியையும் பயன்படுத்த வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 
இவ்வாறு மெளனிகளாக இருப்பது ஒரு தொழிற்சங்கத்தின் பணியல்ல மாறாக, இதே போன்ற எதிர்பார்ப்பு இலங்கையின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் காணப்படுவதில்லை.
 
ஒரு தேசமாகவும் ஒரு நாடாகவும் நாம் தோட்டத் தொழிலாளர்கள் மீதான அக்கறையில் தீவிரமாக இருந்தால், அவர்களுக்கான சிறந்த மற்றும் கௌரவமான வாழ்க்கை நிலைமைகளை உண்மையிலேயே பெற்றுக்கொடுக்க விரும்பினால், கம்பனிகளின் மிரட்டல்கள் அல்லது செயற்பாடுகளுக்குப் பயப்படாமல் - நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்வந்து அவர்களது போராட்டத்தில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும்.
 
ஓரங்கட்டப்பட்ட மற்றும் சமமான உரிமை மறுக்கப்பட்ட எனது மக்களுக்கும், எனது சமூகத்திற்கும் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துடன் அனைவருக்கும் நீதி கோரி நான் எப்போதும் முன்னணியில் நின்று போராடுவேன். என்னுடன் சேர்ந்து நமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க உங்களையும் வரவேற்கிறேன். - எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image