பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கங்களுடன் இன்று பேச்சுவார்த்தை

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கங்களுடன் இன்று பேச்சுவார்த்தை

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கங்களுடன் எதிர்வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் சிறந்த தீர்வை வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“தற்போது பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது ஒரு துரதிஷ்டவசமான விடயமாகும். ஏனென்றால் இதன் ஊடாக எதிர்கால சந்த்தியினரான மாணவர்களே பாதிக்கப்படுகின்றனர். இதன் மூலம் நாளாந்தம் சுமார் 150 மில்லியன் ரூபா நேரடியான நட்டம் ஏற்படுகின்றது. இது நிதி ரீதியிலான நட்டம் மாத்திரமே. மனித நேரமும் இதன்மூலம் வீணடிக்கப்படுகிறது. எனவே இன்னும் ஒரு மணித்தியாலத்தையேனும் வீணடிக்க அரசாங்கத்திற்குத் தேவையில்லை. பெற்றோர் என்ற வகையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இதன் பாதிப்புத் தெரியும் என்று நினைக்கிறேன். எனவே அவர்களும் இதனைத் தொடர்ந்து கொண்டு செல்ல விரும்பமாட்டார்கள். இதற்கு சரியான தீர்வை எவ்வாறு தேட்டுவது என்பதையே நாம் இப்போது பார்க்க வேண்டும்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு நிறைவேற்ற சுமார் 1.1 பில்லியன் ரூபா தேவைப்படுகின்றது. நான் இதுபற்றி விரிவான அறிக்கையொன்றைத் தருமாறு கேட்டிருக்கின்றேன். மேலும் நாம் எவ்வாறு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்பது குறித்து நிதி அமைச்சு மற்றும் திறைசேரியின் உயர் அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளேன். நான் எதிர்வரும் திங்கட்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளேன். ஒரு மத்திய நிலையில் இருந்து இதற்கு தீர்வு காண்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

உயர்கல்வி தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றவர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட எமது அரசாங்கம் இவ்விடயத்தில் சிறந்த தீர்வைப் பெற்றுக்கொடுக்கவே எதிர்பார்த்துள்ளோம். தற்போதுள்ள பொருளாதார நிலையில் எதனை வழங்க முடியும் என்று அனைவரும் சிந்திக்க வேண்டும்.

மேலும் இந்நாட்டு உயர்கல்வி முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். நான் அண்மையில் உலகலாவிய உயர்கல்வி மாநாட்டில் கலந்துகொண்டேன். இதன்போது, நவீன உலக மாற்றத்திற்கேற்ப உயர்கல்வி முறைமையில் மாற்றம் இடம்பெற வேண்டும் என்ற கருத்திலேயே பெரும்பாலான நாடுகள் இருக்கின்றன.

அதேபோன்று, தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழு ஸ்தாபிப்பதற்கான சட்ட மூலம் தற்போது தயார்செய்யப்பட்டு வருகின்றது. எமது நாட்டு மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர வெளிநாடுகளுக்குச் செல்வதற்குப் பதிலாக நம் நாட்டு உயர்கல்வியை மேற்கொள்ளக் கூடிய வகையில் மேம்படுத்த வேண்டும்.” என்று உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் மேலும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image