இலங்கையில் பாலின சம்பள முரண்பாட்டுக்குப் பிரதான காரணம் ஆய்வில் கண்டறியப்பட்டது

இலங்கையில் பாலின சம்பள முரண்பாட்டுக்குப் பிரதான காரணம் ஆய்வில் கண்டறியப்பட்டது
சம்பளம் பெற்றுக்கொள்ளாத பராமரிப்பு சேவை பாலின சம்பள முரண்பாட்டுக்குப் பிரதான காரணம்  பாலின சம்பள முரண்பாடு தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வில் புலப்பட்டது.
 
இலங்கையின் தொழிலாளர் சந்தையில் பாலின சம்பள முரண்பாட்டுக்கு சம்பளம் பெற்றுக்கொள்ளாத பராமரிப்பு சேவையுடன் பிரதானமாக நெருக்கிய தொடர்பு இருப்பதாக பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் (Women and Media Collective) ஆய்வாளர்கள், பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்திடம் தெரிவித்தனர்.
 
பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி சேபாலி கோட்டேகொட தலைமையிலான ஆய்வாளர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட பாலின சம்பள முரண்பாடு தொடர்பான ஆய்வின் முடிவுகளை முன்வைக்கும்போதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.
 
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே தலைமையில் அண்மையில் (17) பாராளுமன்றத்தில் கூடியபோதே ஆய்வின் முடிவுகள் முன்வைக்கப்பட்டன.
 
பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு மற்றும் சமூகவியலாளர்கள் சங்கத்தினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
பாதுகாப்பு, பொறுப்பு மற்றும் ஏனைய வீட்டுப் பணிகள் போன்ற பராமரிப்பு சேவைகள் காரணமாக இதுபோன்று பாலின சம்பள முரண்பாடு அதிகம் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் இங்கு சுட்டிக்காட்டினர்.
 
பெண்கள் சம்பளத்துடன் கூடிய வேலை மற்றும் சம்பளம் அற்ற பராமரிப்பு ஆகிய இரண்டிலும் ஈடுபடுவது அவர்களின் வேலை நேரம், அவர்களின் பதவி உயர்வு மற்றும் வருவாய் ஆகியவற்றில் தடைகளை ஏற்படுத்துகிறது என்பதையும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
 
அதிக சம்பளம் கொண்ட தொழில்துறைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதுடன், குறைந்த சம்பளத்துடன் கூடிய சேவைகளில் பெண்கள் செறிவாகக் காணப்படுவதாகவும் மேலும் பெண்களில் கணிசமான பகுதியினர் பகுதி நேர வேலை மற்றும் ஊதியம் பெறாத வீட்டு பராமரிப்பு சேவைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதை ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக்காட்டினர்.
 
இந்தச் சம்பள முரண்பாட்டை மாற்றுவதற்கு சட்டங்கள் மற்றும் புதிய கொள்கைகள் இயற்றப்பட வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.
 
அதன்படி, இந்த பாலின சம்பள முரண்பாட்டை களைய வேண்டுமானால், சமூகத்தில் தனிநபர்களின் மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்தார்.
 
இந்த ஆய்வின் மூலம் அடையாளம் காணப்பட்ட தகவல்களையும், அதில் ஈடுபட்டுள்ள மற்ற அனைத்து அரசு மற்றும் அரசு சாரா தரப்பினரின் கருத்துகளையும் எடுத்துக்கொண்டு ஒரு கொள்கையை தயாரிப்பதன் அவசியத்தை தலைவர் நினைவு கூர்ந்தார்.
 
அதன்படி, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட ஒரு திட்டத்தை ஒன்றியத்துக்கு வழங்குமாறும் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
 
இந்தக் கூட்டத்தில் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் ஆய்வாளர்கள், தேசிய ஜனநாயக நிறுவனத்தின் (NDI) அதிகாரிகள், மேலும் பல நிறுவனங்களின் ஆய்வாளர்கள், சுயாதீன ஆய்வாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image