பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை: கொழும்பில் போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை: கொழும்பில் போராட்டம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி கோட்டை ரயில் நிலையம் முன்னால் கறுப்புப்பட்டி போராட்டம் நடத்தப்படவுள்ளது.நாளை வௌ்ளிக்கிழமை (19) காலை 9 மணியளவில் இப்போராட்டம் நடத்தப்பட உள்ளது.

சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை முதலாளிமார் சம்மேளனம் புறக்கணிப்பது, சம்பள உயர்வு இது வரை வழங்கப்படாதமை என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப்போராட்டம் நடத்தப்படவுள்ளது.

 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த கறுப்புப்பட்டி போராட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரின் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழுத்தம் கொடுத்து வருகிறது.

தேயிலைக்கான சம்பள நிர்ணய சபையின் அங்கத்தவரும், இ.தொ.காவின் பிரதான சட்ட ஆலோசகரும், சட்டத்தரணியுமான கா.மாரிமுத்துவின் பங்களிப்போடு நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை, முதலாளிமார் சம்மேளனம் இறுதி நேரத்தில் புறக்கணித்தது.இவற்றைக் கண்டிக்கவே இந்தப் போராட்டம். இ.தொ.காவின் சிரேஷ்ட இயக்குநர் எஸ்.ராஜமணி இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

கொழும்பு, இரத்தினபுரி, பலாங்கொடை, கஹவத்தை, இறக்குவானை, அவிசாவளை, தெரணியகலை, எட்டியாந்தொட்டை, கேகாலை, குருநாகல், மத்துகம போன்ற பிரதேசங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களும், நலன் விரும்பிகளும் கறுப்புப்பட்டி அணிந்து இதில் பங்கேற்பர். அடிப்படைச் சம்பளமாக 1,700 ரூபாவை வலியுறுத்தியே இப்போராட்டம் நடத்தப்படுகிறது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image