வடமாகாண இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களில் முறைகேடு

வடமாகாண இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களில் முறைகேடு

வடமாகாண இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து மாகாண ஆளுநரிடம் தொழிற்சங்கம் முறைப்பாடு செய்துள்ளது.

வடக்கு மாகாண பொதுச்சேவைக்கு விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கு மாகாண மட்டத்தினுள் இடமாற்றம் செய்யப்பட்ட போது, தேசிய இடமாற்றக் கொள்கை மீறப்பட்டுள்ளதுடன், அவ்விடமாற்றங்களுள் முறையற்ற, பாரபட்சமான சந்தர்ப்பங்களும் அவதானிக்கப்பட்டுள்ளதாக இ.க.நி.சேவை வாண்மையாளர்கள் (மட்டுப்படுத்தப்பட்ட) தேசிய சங்கத்தின் செயலாளர் - வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் மூலம் முறையிட்டுள்ளார்.

இச்சங்கத்தின் செயலாளர் ஆர்.ஏக்கநாயக்க, வடக்கு மாகாண ஆளுநருக்கு கடந்த 29ம் திகதி எழுதியுள்ள முறைப்பாட்டுக் கடிதத்தில், இ.க.நி.சேவை உத்தியோகத்தர்களுக்கான மாகாண இடமாற்றக் கொள்கையில் தேசிய இடமாற்றக் கொள்கையிலிருந்தான வேறுபாடுகள் மற்றும் மாற்றங்களை சுட்டிக்காட்டியிருப்பதுடன், இம்மாகாண இடமாற்றக் கொள்கையை தயாரித்த குழுவின் தலைவரான வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரே, இடமாற்ற சபையின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளதன் மூலம் அதிகாரத் துஸ்பிரயோகம் மற்றும் பழிவாங்கல்கள் இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சுமத்தியுள்ளார்.

மேலும், இடமாற்ற சபையில் இ.க.நி.சேவை வாண்மையாளர்கள் தொழிற்சங்கங்கள் எவற்றினதும் பிரதிநிதித்துவம் பெறப்படாததுடன் வடக்கின் சகல வலயங்களிலிருந்தும், 60 சதவீதமான உத்தியோகத்தர்களுக்கு ஒரே வருடாந்த இடமாற்றத்தில் இடமாற்றங்களை வழங்கியிருப்பதுடன் யாழ் மாவட்ட வலயமொன்றில் 100 சதவீதமான உத்தியோகத்தர்களுக்கும் இடமாற்றம் வழங்கியிருப்பதானது  இடமாற்றச் சுற்றறிக்கைகளை மீறியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளதுடன்  இவ்விடமாற்றல்கள் மூலம் ஏற்பட்டுள்ள கட்டமைப்புச் சிதைவையும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய இடமாற்றக் கொள்கைக்கு அமைவாக வடக்கு மாகாண இ.க.நி.சேவை இடமாற்றக் கொள்கை மீளாய்வுக்குட்படுத்தப்பட்டு திருத்தப்படுதல், கொள்கையுருவாக்கம் மற்றும் இ.க.நி.சேவை இடமாற்ற சபைச் செயற்பாடுகளில் தொழிற்சங்க பிரதிநிதிகளின் பங்குபற்றுதல் ஆகியன உறுதிப்படுத்தப்படும் வரை குறித்த இடமாற்றங்களை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கையெடுக்குமாறும் ஆளுநரிடம் கோரப்பட்டுள்ளது.

மூலம் - வீரகேசரி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image