பெருந்தோட்டத் தொழிலாளர்களை தொழில் முனைவோராக்கும் திட்டம் முன்னெடுக்கப்படும் - சஜித்
தோட்டங்களில் வேலை செய்பவர்களைச் சிறு தோட்ட உரிமையாளர்களாக்கி, இன்றைய தொழிலாளியை நாளைய தொழில் முனைவோராக்கும் செயல்திட்டம் நிச்சயம் முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்று (14) ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைமை அலுவலகத்தில், மலையக, தென்பகுதி பெருந்தோட்ட சமூகங்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான உறுதிமொழியை வழங்கி, பல்வேறு தோட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகளுடன், சுமூக உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது நாட்டிற்கு பெரும் வளமாக காணப்படும் மலையக மற்றும் தென் பகுதி தோட்ட சமூகத்தினரின் வாழ்க்கை, வாழ்வாதாரம், ஜீவனோபாயம் உள்ளிட்ட சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, மலையகம் மற்றும் தென் பகுதிய பெருந்தோட்டத் துறையில் உள்ள சமூகத்துடன் இன்று ஒரு முக்கியமான சமூக உடன்படிக்கையை மேற்கொள்ள முடிந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இதற்கென தனியான ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டு, மலையக மற்றும் தென் பகுதி தோட்ட சமூகத்தினர் எதிர்நோக்கும் பொருளாதார,சமூக ரீதியான அபிவிருத்தி மற்றும் அரசியல் பிரச்சினைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புத் துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் இணக்கப்பாட்டுடன் உடன்படிக்கை எட்டப்பட்டது.
நாட்டின் தேயிலை உற்பத்தியில் 70 வீதமானது சுமார் 40 வீதமான காணிகளை வைத்திருக்கும் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களால் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 60 சதவீதத்திற்கும் அதிகமான நில உடைமை கொண்ட பெரிய அளவிலான தேயிலை தொழிற்சாலைகள் தேயிலை உற்பத்திக்கு 30 சதவீத பங்களிப்பையே வழங்குகின்றன. சிறிய தேயிலைத் தோட்டங்களை ஊக்குவிப்பது என்பது தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதாகும் எனவும், அதன் பின்னர் சமுர்த்தி மற்றும் அஸ்வெசும போன்ற திட்டங்களுக்குத் தேவைப்பாடு ஏற்படாது.
அவர்களுக்குச் சொந்த தேயிலைத் தோட்டத்தில் தேயிலை உற்பத்தி செய்து ஏற்றுமதிக்கு ஏற்ற வகையில் தயார் செய்ய வாய்ப்பு வழங்கப்படும். தொலைநோக்குப் பார்வையுடனும் வேலைத்திட்டத்துடனும் இந்த சேவை மேற்கொள்ளப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.