முறைசாரா துறை அமைப்பாக ஒன்றிணைகிறது... தீர்வு வழங்கப்படாவிடின் போராடுவோம்
"அமைப்பாக ஒன்றிணைவோம்! இதனை விடவும் சிறந்த வாழ்க்கையை வெல்ல அணிதிரள்வோம்!" என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் தௌிவுபடுத்தல் வேலைத்திட்டம் ப்ரொடெக்ட் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கையேடு விநியோகிக்கப்பட்டதுடன், முறைசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொழிற்சங்கமயமாக்கலுக்கான காலத்தின் முக்கியத்துவம் மற்றும் தேவை குறித்து தெரிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் (04) ஹட்டனில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் சில வாரங்களில் நுவரொலியா மாவட்டத்தை உள்ளடக்கியதாக முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக சங்கத்தின் தலைவி கருப்பையா மைதிலி தெரிவித்தார். நாட்டின் தொழிற்படையில் சுமார் 70% பணியாளர்கள் முறைசாரா துறையில் பணிபுரிகின்ற நிலையில், தற்போதைய பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் வேலை செய்கிறார்கள்.
ஆனால் இதுவரை எந்த அரசும் அவர்களுக்காக எந்த திட்டத்தையும் தயார் செய்யவில்லை. முறைசாரா துறையில் உள்ள தொழிலாளர்களை அமைப்பாக ஒருங்கிணைத்து அவர்களுக்கான சமூக பாதுகாப்பு அமைப்பை வென்றெடுப்பதும், அவர்களை சமூகத்தில் வரவேற்புடைய தொழிலாளர்கள் குழுவாக மாற்றுவதுமே தொழிற்சங்கத்தின் நோக்கமாகும் என மைதிலி மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட முறைசாராத் துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு தௌிவுபடுத்தும் மற்றும் அமைப்பாக ஒன்றிணைக்கும் பிரசாரம், உரிமைகளை வென்றெடுப்பதற்கான பிரசாரமாக எதிர்காலத்தில் அரசாங்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.